சனி, 27 ஆகஸ்ட், 2016

காவிரி, பாலாறு பிரச்சினையைவிட சசிகலா புஷ்பாவை சிறையில் அடைப்பதுதான் ஜெயலலிதாவுக்கு முக்கியம்!

ஜி. கார்ல் மார்க்ஸ் ஜெயலலிதாவின் ஆட்சி என்பது அதிகார துஷ்பிரயோகத்துக்கு எப்போதுமே பெயர் போனது. கிட்டத்தட்ட அதுவொரு சர்வாதிகார ஆட்சி. அதே சமயம் சுரண்டப்படும் மக்களின் முன்னால், அதுவரை அதிகாரத்தை சுவைத்துக்கொண்டிருந்த ஒருவரை நிறுத்தி செருப்பால் அடிப்பதன் மூலம் மக்களை கிளுகிளுப்புக்கு உள்ளாக்குவதும் அவரது வாடிக்கை. இது அவரது எல்லா ஆட்சிக் காலத்திலும் நடக்கும். இதற்கு சமீபத்திய உதாரணம் சசிகலா புஷ்பா விவகாரம்.
ஜி. கார்ல் மார்க்ஸ் அவரது குடும்பத்தினர் மீது, அவர்களது வீட்டில் வேலை செய்தவர்கள் கொடுத்த பாலியல் அத்துமீறல் புகாரின் அடிப்படையில் வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டிருக்கும் அவரை நேரில் ஆஜராகச் சொல்லி மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிடுகிறது. ஆனால் தாம் தமிழகம் வந்தால் கைது செய்யப்படுவோம் என்று அவர் உச்சநீதிமன்றத்தை அணுகுகிறார். நீதிபதிகள், தமிழக அரசின் வழக்கறிஞரைப் பார்த்து ‘அவர் தமிழகம் வர வேண்டும் என்று ஏன் இவ்வளவு அவசரம் காட்டுகிறீர்கள்? அவர் எங்கும் பறந்துவிடப் போவதில்லை’ என்று கேட்கிறார்கள். வழக்கறிஞர், ‘அவருக்கு எந்த கருணையும் காட்டக்கூடாது’ என்று வாதிடுகிறார்.
இறுதியில் சசிகலா புஷ்பாவை ஆறு வாரத்திற்குக் கைது செய்யக்கூடாது என்று உத்தரவிட்டு, அவரை உயர்நீதிமன்றத்தில் ஆஜராகச் சொல்கிறார் உச்சநீதிமன்ற நீதிபதி.
முதலில், சசிகலா புஷ்பா செய்த தவறு என்ன? திமுகவின் எம்பி சிவாவை விமானநிலையத்தில் வைத்து கன்னத்தில் அறைந்ததாகப் புகார். அவரும் சசிகலாபுஷ்பாவும் நெருக்கமாக இருப்பதான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் முன்பே வளைய வந்தன. அதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அது உண்மையல்ல என்றும் சொல்லப்பட்டது. ‘மாதம் மும்மாரி மழை பொழிகிறதா’ என்று கேட்டுக்கொள்ளும் ஜெயலலிதாவின் காதுக்கு அது எட்டவில்லை என்பதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை. மாற்றுக்கட்சி பிரதிநிதிகளுடன் ‘அன்னம் தண்ணி’ புழங்கக் கூடாது என்ற தனது உத்தரவையும் மீறி, தண்ணீரெல்லாம் புழங்கியிருக்கிறதே ஒரு அன்னம் என்பதுதான் ஜெயலலிதாவின் கோபம். இது முழுக்க முழுக்க ஒரு சர்வாதிகாரியின் கோபம் என்பதுதான் இங்கு நாம் கவனிக்க வேண்டியது.
தன்னை ஜெயலலிதா அறைந்ததாக சசிகலா புஷ்பா மக்களவையில் சொல்கிறார். அது மிகப்பெரிய குற்றச்சாட்டு. அதை நம்புவதற்கு நியாயம் உண்டு. கூட்டல் கழித்தலில் தவறிழைத்த ஆடிட்டரை செருப்பால் அடித்த வரலாறு எல்லாம் நாம் கேள்விப்பட்டதுதான். ஆக, இங்கு ஜெயலலிதா, சசிகலா புஷ்பாவிடம் எதிர்பார்த்தது ‘தவறிழைத்துவிட்டேன் அம்மா, என்னை மன்னித்துவிடுங்கள்’ என்று அவரது காலில் சாஷ்டாங்கமாக விழுந்துவிட வேண்டும் என்பதைத்தான். சசிகலாபுஷ்பா அதை செய்யாமல் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள முயன்றதும், தனது தவறுகளை நியாயப்படுத்த முயன்றதுமே கருணைமிகு அம்மாவின் நெற்றிக்கண் கோபத்துக்கு காரணமாக இருக்கவேண்டும். இந்த விஷயத்தில் அம்மா திமுகவில் இருக்கும் ஆண் அடிமைகளை ஒப்பிட பெண்கள் கொஞ்சம் சுயமரியாதைப் பேணுகிறார்கள் என்று கருத இடமிருக்கிறது. அடிப்படையில் சசிகலா புஷ்பாவிடம் காணக்கிடைக்கும் போராளி குணம், சிவா வழியாக ஏர்போர்ட்டிலும், அவரது வாட்ஸப் உரையாடல் வழியாக பொதுவெளியிலும் நமக்கு காணக்கிடைப்பதுதான்.
இங்கு நமது கேள்வியெல்லாம், இவ்வளவு முக்கியத்துவம் தரவும், அரசு எந்திரத்தைத் தீவிரமாக பயன்படுத்தவும் இந்த விஷயத்தில் என்ன அவசியம் இருக்கிறது? சிறுவாணி, காவிரி, பாலாறு அணை விவகாரங்களில் மற்ற மாநிலங்களின் போக்கு குறித்த கவலைகள் தொடங்கி, மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்சினை முதல் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகள் வரை கவனிக்க அவ்வளவு விஷயங்கள் இருக்கும்போது இவ்வளவு தீவிரமாக இதைக் காவல்துறையும், அரசு எந்திரமும் கையிலெடுக்க வேண்டியதன் அவசியம்தான் என்ன?
ஒன்றே ஒன்றுதான்!
ஜெயலலிதாவின் அதிகாரம் என்பது கேள்விகளற்ற சர்வாதிகாரத்தின் மீது கட்டப்பட்டிருப்பது. அவரது கட்சியினரின் எம்பி பதவி என்பது, அவர் அவர்களுக்குப் போட்ட பிச்சை. அதற்கு பலனாக அவர்கள் காட்டவேண்டியது தீராத விசுவாசமும், அடிமைத்தனமும். அதை அவர்கள் மீறும்போது அவர்களுக்கு தண்டனை உறுதி. இதன் மூலம் ஜெயலலிதா செய்வது ஒரு பிரகடனம்.
இதிலும் கூட, ஜெயாவின் ஆளுமைப்பண்பு குறித்து புளகாங்கிதம் அடையும் சிலர் கவனிக்க வேண்டியது ‘தனது கட்சியின் எம்பியை மாத்திரம் அல்ல, ஓட்டு போட்ட மக்களையும் சேர்த்தே அவர் அவமதிக்கிறார்’ என்பதுதான். மக்களாட்சியில் இதற்கு எந்த இடமும் கிடையாது. ஆனால், இது மக்களாட்சியே கிடையாது என்பது தான் பத்திரிகைகளின் முனகலில் இருந்து நாம் புரிந்துகொள்வது. அவர்கள் பக்கங்களை நிரப்ப சமூக ஊடகங்களில் மேட்டர் தேடி அலைந்துகொண்டிருக்கிறார்கள். சசிகலா புஷ்பா பற்றி எழுத நினைத்தால் கூட ஜெயலலிதாவைத் தவிர்த்துவிட்டு அதை எழுதமுடியுமா என்று கையைப் பிசைந்து ரேகையை அழித்துக்கொள்கிறார்கள். பச்சமுத்துவின் கைதைக்கூட காத்திரமாக சொல்ல முடியாத புதியதலைமுறைகளின் சோகத்துக்கு ஒப்பான துயரம் இது thetamiltimes.com

கருத்துகள் இல்லை: