வியாழன், 25 ஆகஸ்ட், 2016

மனைவியின் சடலத்தை 12 கி.மீ. தோளில் சுமந்து சென்ற கணவர்: அமரர் ஊர்தி தர மறுத்த அரசு!


ஒடிசாவில் அரசு மருத்துவமனையில் உதவிகள் மறுக்கப்பட்டதையடுத்து மனைவியின் சடலத்தை 12 கிலோ மீட்டர் தூரத்திற்கு தோளில் சுமந்து சென்றுள்ளார் கணவர். அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்புகள் ஏற்படும்போது, சடலத்தை இலவச வாகனங்களில் எடுத்துச் செல்லும் சட்டம் ஒடிசாவில் அமலில் உள்ளது. இந்த நிலையில் காளஹன்டி மாவட்டம், மெல்கரா என்ற கிராமத்தைச் சேர்ந்த தானாமாஜி என்பவரின் மனைவி காசநோய் காரணமாக மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது உடலை 60 கிலோ மீட்டரில் உள்ள சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல எந்த உதவியும் மருத்துவமனை நிர்வாகம் செய்யவில்லை என்று கூறப்படுகிறது.


இதையடுத்து மனைவியின் சடலத்தை போர்வையில் சுற்றி, தனது தோளில் சுமந்து சென்றுள்ளார். அவருடன் 12 வயது மகளும் நடந்து சென்றார். 12 கிலோ மீட்டர் தூரம் வரை சென்ற அவர்களை பார்த்த பத்திரிகையாளர்கள், இதனை மாவட்ட ஆட்சியருக்கு தெரிவித்துள்ளனர். இதையடுத்து மீதி பயணத்துக்கான ஆம்புலன்ஸ் வசதி செய்து தரப்பட்டது. தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த தானாமாஜி, "மருத்துவமனை அலுவலர்கள் வாகனங்கள் இல்லையென தெரிவித்துவிட்டனர். நான் மிகவும் ஏழை, மனைவியின் உடலை எடுத்துச் செல்ல வாகன வசதி ஏற்படுத்திக்கொள்ளும் அளவுக்கு பணம் இல்லை என கூறினேன். நான் பலமுறை அழுதும், அவர்கள் மனம் இறங்கி எனக்கு உதவ முன்வரவில்லை" என்றார்.
nakkeeran.inn

கருத்துகள் இல்லை: