சென்னை: 'டிமாண்ட்' இருக்கிறதே என்பதற்காக ஓவராக முறுக்கிக் கொண்டே
போனால் தேமுதிக நடுத்தெருவில் கேட்பாரற்றுதான் விடப்படும் நிலை உருவாகி
உள்ளது.
தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத ஒரு அரசியல் சக்தியாக தேமுதிக
உருவெடுத்தது. கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக உதவியுடன் சட்டசபை
எதிர்க்கட்சியாகவும் வளர்ந்தது.
ஆனால் சட்டசபை எதிர்க்கட்சியாக வளர்ந்த தேமுதிக, அடுத்த நிலைக்கு
நகருவதற்கு முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. இதைத்தான் கடந்த இரு
ராஜ்யசபா தேர்தல் நிலைப்பாடுகளும் வெளிப்படுத்தின.
டெல்லியில் போய் போட்டியிட்டு 100,200 வாக்குகள் என மொத்தமே 2 ஆயிரம்
வாக்குகளைப் பெற்று போட்டியிட்ட இடங்களிலெல்லாம் டெபாசிட்டை பறிகொடுத்தது
தேமுதிக. லோக்சபா தேர்தலிலும் அனேகமாக இந்த கதிக்குத்தான் தேமுதிக ஆளாகுமோ
என்பதை அக்கட்சியி தொடரும் நிலைப்பாடுகள் சுட்டிக்காட்டுகின்றன.
தேமுதிகவுக்கு செல்வாக்கு இருக்கிறது என்று நம்புகின்றன தமிழக அரசியல்
கட்சிகள். இதனால்தான் லோக்சபா தேர்தலில் தேமுதிகவை வளைக்க திமுக, பாஜக,
காங்கிரஸ் மூன்று கட்சிகளுமே மும்முரம் காட்டின.
மூன்று கட்சிகளுடனுமே இணக்கமாக போக்கை கடைபிடித்துக் கொண்டு 'பேரம்'
பேசிக் கொண்டே இழுத்தடித்தது தேமுதிக. ஒருகட்டத்தில் என்ன முடிவு
எடுக்கிறது என தெரியாமல் எல்லாவற்றையும் பிப்ரவரி 2-ந் தேதி
உளுந்தூர்பேட்டை மாநாட்டில் தெரிவிக்கிறேன் என்று நழுவிக் கொண்டார்
விஜயகாந்த்
சரி உளுந்தூர்பேட்டை மாநாட்டில் அறிவித்தாரா எனில் இல்லை? அங்கும் கூட
அதிமுகவை மட்டுமே கடுமையாக விமர்சித்துவிட்டு கடைசியில் தொண்டர்களிடம்
கருத்து கேட்டார் விஜயகாந்த்.
உண்மையில் விஜயகாந்த் கேட்ட தனித்துப் போட்டியிடவா? அல்லது கூட்டணி
வேண்டாமா? என்பதற்கெல்லாம் வாக்கெடுப்பு நடத்தாமல் பள்ளிக்கூடத்து
பசங்களிடம் கேட்பதைப் போல கையை தூக்குங்க.. கையை ஆட்டுங்க என்று அவர்களும்
விட்டா போதும் வீட்டுக்குப் போகனும்கிற வேகத்தில் எல்லாவற்றுக்கும்
கைதூக்கினர்.
உடனே உஷாரான விஜயகாந்தும், என் தொண்டர்கள் தனித்துப் போட்டியிட
விரும்புகின்றனர்.. ஆனால் தலைமை ஏற்கும் முடிவையும் தொண்டர்கள் ஏற்பார்கள்
என்று மீண்டும் குழப்பினார்.
இதில்தான் திமுக கடுப்பாகிப் போய் உடனே விஜயகாந்தின் எதிரி லியாகத் அலிகானின் பெயரை போட்டு மாநாட்டு அழைப்பிதழை உடனே ரெடி பண்ணியது.
இதேபோல் இதுவரை காத்திருந்த பாஜகவும் இப்போது வெறுத்துப் போய், தேமுதிகதான் முடிவை அறிவிக்க வேண்டும் என்று சொல்லிவிட்டது.
அனைத்து கட்சிகளும் கழற்றிவிடும் நிலையில் காங்கிரஸ் கட்சிதான்
இப்போது இலவுகாத்த கிளியாக காத்திருக்கிறது. ஆனால் தேமுதிக தலைவர்
விஜயகாந்த் அந்த அணிக்கும் செல்வாரா என்பது சந்தேகம்தான்.
இப்படி அனைத்து கட்சிகளும் கழற்றிவிடும் நிலையில் கடைசியில் எந்த
கூட்டணியிலும் இல்லாமல் தனித்துப் போட்டி என அறிவித்து நடு ரோட்டில்
நாதியில்லாமல்தான் நிற்க வேண்டிய நிலைக்கு அந்த கட்சி தள்ளப்படும்.
ஏற்கெனவே கருத்து கணிப்புகளில் விஜயகாந்த் செல்வாக்கு சரிந்து
கொண்டிருக்கிறது என்று சொல்லப்படுகிறது.. இப்போது தனித்துப் போட்டி என
அறிவித்து உள்ளதும் போச்சுடா என்ற பழமொழிக்கு ஏற்ப சூடு படத்தான் போகிறது
தேமுதிக என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
tamil.oneindia.in
tamil.oneindia.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக