எம்.ஜி.ஆரின் அன்புத் துணைவியார் சதானந்தவதி அம்மையார் காலமாகிவிட்டார் என்ற செய்தி கிடைத்த உடனே எல்லா வேலைகளையும் நிறுத்திவிட்டு தேவரண்ணன், அவருடைய தம்பி இயக்குனர் திருமுகம், இன்னொரு தம்பி மாரியப்பன், நான் ஆகியோர் எம்.ஜி.ஆர். இல்லத்திற்கு விரைந்தோம். வீட்டின் நடுக்கூடத்தில் எம்.ஜி.ஆர். சோகத்துடன் சோர்ந்து அமர்ந்திருந்தார். அவரைச் சூழ்ந்து சிவாஜி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், கே.ஆர்.ராமசாமி மற்றும் எல்லா நடிகர்களும், திரை உலகப் பிரமுகர்கள் பலரும் இருந்தனர். அரசியல் சார்ந்த பிரமுகர்களும் திரண்டு வந்து ஆங்காங்கே வீட்டின் உள்ளேயும், வெளியிலுமாக நின்று கொண்டிருந்தனர்.
நடுப்பகல் கடந்து முன் மாலைப்பொழுதில் கிழக்கே உள்ள கிருஷ்ணாம்பேட்டை மயானத்தில் ஈமக்கிரியைகளுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
தன் 14–வது வயதில் 26 வயதுடைய இளைஞர் எம்.ஜி.ஆரை 1942–ல் மணந்து 20 ஆண்டுகள் அவருடைய பக்கத்திலும், பார்வை யிலும் வாழ்ந்த ‘சந்திரானந்தா நிலையம்’ இல்லத்தரசி சதானந்தவதி ‘சுமங்கலித்தெய்வம்’ ஆக, வலது கால் எடுத்து வைத்து வாழ வந்த தாய் வீட்டை விட்டுப் பிரிந்து, இறுதி யாத்திரைக்காக வாகனத்தில் ஏற்றப்பட்டார். அப்போது, காணக்கூடாத அந்தக் கொடுமையான காட்சியைக் கண்டு தன் வாயில் துண்டை வைத்து அடைத்துக்கொண்டு குமுறிக் குமுறிக் குலுங்கி அழுது துடித்தார் எம்.ஜி.ஆர்.
சற்று நேரத்தில் – இமைப்பொழுதில் தலைசுற்றி மயக்கமாகி சாய்ந்த தருணத்தில், அவருடைய பக்கத்தில் ஆதரவாக நின்று கவனித்துக் கொண்டிருந்த சிவாஜி அவரை அப்படியே தன் மார்பில் தாங்கிப் பிடித்து கீழே விழுந்து விடாதபடி பாதுகாத்தார்.
தொழிலைப் பொறுத்தவரை இருவேறு துருவங்களாக இருந்த எம்.ஜி.ஆர்., சிவாஜி ஆகிய இருபெருந்தூண்களும் பாசத்துடன் ஒன்றாக இணைந்த அந்த அரிய காட்சி இன்னும் என் விழித்திரையில் இருக்கிறது.
1966–ல் ஒருநாள் அடையாறு நெப்டியூன் ஸ்டூடியோவில் ‘‘பெற்றால்தான் பிள்ளையா’’ படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது தளத்திற்கு முன் பகுதியில் தனக்கென்று அமைத்துக்கொண்ட தனி ஒப்பனை அறையில் அமர்ந்து மாலைச் சிற்றுண்டி அருந்தி முடித்துவிட்டு இடை நேரத்தில் அந்தப் படத்தில் நான் எழுதியிருந்த ‘‘பெற்ற பாசம்’’, ‘‘வளர்த்த பாசம்’’ பற்றிய வசனச் சிறப்பை மிகவும் சிலாகித்துப்பேசி எம்.ஜி.ஆர். கூறினார்:–
எம்.ஜி.ஆர்:– என்னுடைய சம்பிரதாய முறைகளில் இருந்து மாறி முழுக்க முழுக்க வேறுபட்டு நீங்க அமைச்சிருக்கிற இந்த ‘‘பெற் றால்தான் பிள்ளையா’’ திரைக்கதை வசனத்துல பெற்ற பாசத்துக்கு ‘வளர்த்த பாசம்’ எந்த வகையிலும் குறைஞ்சது இல்லைங்குற கருத்தை ரொம்ப அழுத்தந்திருத்தமா, அழகா சொல்லியிருக்கீங்க. அது கதைக்கு அப்பாற்பட்டு, தனிப்பட்ட முறையிலே என் வாழ்க்கைக்கும் பொருத்தமா அமைஞ்சிருக்கு. எப்படின்னா, பசி பட்டினியின் எல்லையை பார்த்தவன் நான். எனக்காக இல்லே – என்னைப் பெத்த தாய்க்காகவும், கட்டிக்கிட்ட மனைவிக்காகவும், அவுங்க குடும்பம் நடத்துறதுக்காகவும் வேற வழி இல்லாம, வெக்கத்தை விட்டு எனக்கு வேண்டிய உண்மையான சில நண்பர்கள்கிட்டே ஒருகாலத்துல கைநீட்டிக் கடன் வாங்கியிருக்கேன். அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகளின் சிகரத்தையே தொட்டவன் நான்.
இப்போ, வேண்டிய அளவுக்கு வசதிகளோடயும், நல்ல புகழோடயும் இருக்கேன். தினமும் என் வீட்டுல மூணு வேளையும் ஐம்பது, அறுபது இலைங்க விழுது. இடைக்காலத்துல என் வாழ்க்கையில் ஏற்பட்ட எல்லாக் குறைகளையும் போக்கிக்கிட்டேன். ஆனால், ரெண்டே ரெண்டு குறைங்களை மட்டும் என்னால போக்கிக்கொள்ள முடியலே – இனியும் முடியாது.
அந்த ரெண்டு குறைங்கள்ள ஒண்ணு எனக்குக் குழந்தைங்க இல்லாதது. இன்னொண்ணு... என்பதற்குள் நான் இடைமறித்து...
நான்:– ஏன்? பெருந்தலைவர் காமராஜருக்குக்கூடத்தான் குழந்தைங்க இல்லே. அது அவருக்கு ஒரு குறையா என்ன? அதனால... என்பதற்குள் அவர் குறுக்கிட்டு...
எம்.ஜி.ஆர்:– அப்படி இல்லே. நீங்க சொல்றது சரி இல்லே. காமராஜருக்குக் கல்யாணமே ஆகலியே. அதனால குழந்தைங்க இல்லாமப் போயிடுச்சி. ஆனா எனக்கு ரெண்டு மூணு கல்யாணம் ஆகியும்கூட ஒரு குழந்தைகூட பொறக்கலியே. சதாவும் (சதானந்தவதியம்மா) ரெண்டு தடவை கருத்தரிச்சி ரெண்டு மூணு மாசத்துலேயே அபார்ஷன் ஆயிடுச்சி. ஜானுவாவது (ஜானகி அம்மாவை எம்.ஜி.ஆர். எப்பொழுதும் ‘ஜானு’ என்றுதான் அழைப்பது வழக்கம்) அது வயித்துல என் குழந்தையைச் சுமந்து பெத்து எங்கையில கொடுக்கலேங்குற நிரந்தரமான ஏக்கம் என் நெஞ்சைவிட்டு நீங்க மாட்டேங்குது. ஜானுவுக்கும் அந்த வருத்தம் இருக்கு.
நாமக்கல் ஜோசியர் இல்லாம இன்னும் வேற யார் யாரோ பெரிய ஜோசியருங்களையெல்லாம் வீட்டுக்கு வரவழைச்சி ஜானு என் ஜாதகத்தைக் காட்டியிருக்கு.
சோதிடக்கலையில நிபுணர்களான ஒரு மலையாள ஜோசியரும், மைசூர் ஜோசியரும் மட்டும் ஒத்து ஒரே கருத்தை தெரிவிச்சிருக்காங்க. அது என்னன்னா:–
‘‘இது பலதாரங்கள் கொண்ட ஜாதகம். அவரு குடும்ப வாழ்க்கையில பல பெண்கள் குறுக்கிடுவாங்க. அவுங்களுக்கு வேண்டியதை எல்லாம் அவர் கொடுப்பாரு. ஆனா, அவுங்க யாராலேயும் அவருக்கு வேண்டிய ஒரு குழந்தையைக் கொடுக்க முடியாது. கொடுக்கவும் மாட்டாங்க.
என் அண்ணனுக்கு அத்தனை குழந்தைங்களைக் கொடுத்த கடவுளுக்கு எனக்கு ஒரு குழந்தை – ஒரே ஒரு குழந்தையைக்கூட கொடுக்க மனசு வரலே பார்த்தீங்களா?
அவர் உடம்புல ஓடுற எங்கப்பாவோட அதே ரத்தந்தானே என் உடம்புலேயும் ஓடுது? எனக்கு மட்டும் ஏன் இப்படி?
எனக்கு ரத்த வாரிசு அறவே கிடையாதுங்குறது நான் பிறக்கும்போதே முடிவாயிருச்சிபோலருக்கு. இல்லேன்னா சதாவுக்கு (சதானந்தவதி) அடுத்தடுத்து ரெண்டு தடவை அப்படி ‘கருச்சிதைவு’ ஏற்பட்டிருக்காதுல்லியா?
எத்தனையோ சகோதரிங்க – தாய்மார்ங்க அவுங்க பெத்த குழந்தைங்களை எங்கையில கொடுத்து என்னைப் பேர் வைக்கச் சொல்லும்போது, உள்ளுக்குள்ளே என் நெஞ்சு பதறும். ஆனாலும் அதை வெளியில் காட்டிக்காம, மறுக்கவும் மனசில்லாம, அப்பப்போ எனக்குத் தோணுற பேரை வச்சி அந்தக் குழந்தைங்களை முத்தமிட்டு சந்தோஷப்பட்டு அவுங்க ஆசையை நிறைவேற்றுவேன். போகட்டும். நான் கொடுத்து வச்சது அவ்வளவுதான்.”
கணக்கற்ற பேருடைய கண்ணீரைத் துடைத்து, அன்பும், ஆறுதலும் காட்டிய அந்தப் பொன்மனச்செம்மலின் பொற்கரம் தனது துயர் கொண்ட கண்களிலிருந்து வழிந்த துன்பக்கண்ணீரைத் துடைத்துக்கொண்ட அப்படி ஒரு காட்சியை படங்களில் அவருடைய நடிப்பிற்கு அப்பாற்பட்டு நேரில் நான் பார்த்து என் உள்ளம் உடைந்து நொறுங்கிப்போனது.
அதுதான் முதல் முறை – அதுவே கடைசி முறையுமாகும். எம்.ஜி.ஆர். தொடர்ந்தார்:–
என்னுடைய ரெண்டாவது குறை என்னன்னா– ஏதோ ஒரு அடிப்படைக் கல்விதான் எங்கிட்டே இருக்கு. அதுவும் நானா – நாடகக் கம்பெனியிலே இருந்தப்போ தமிழார்வத்துல பல புத்தகங்களைப் படிச்சு தெரிஞ்சு வளர்த்துக்கிட்டது. அதைத்தவிர குறிப்பிட்டுச் சொல்லும்படியா, உங்களை மாதிரியெல்லாம் கல்விக்கூடங்கள்ளே சேர்ந்து முறையா படிச்சிக் கத்துக்கவேண்டிய கல்வியைக் கத்துக்கலே.
என் இளமைப்பருவத்துல எங்களுக்கு ஏற்பட்ட வறுமையின் காரணமாக அதுக்கான வசதியும் வாய்ப்பும் எனக்கு இல்லாமப் போயிடுச்சு. இருந்திருந்தா நானும் எங்கண்ணனும் ஏன் நாடகக் கம்பெனியில் சேரணும்? அது எங்களுக்கு விதிக்கப்பட்ட தலைவிதி. அதன்படிதானே வாழ்க்கையும் அமையும். அது அமைஞ்சிடுச்சு.
மத்தவுங்க ஆங்கிலத்துலேயும், நல்ல இலக்கணத் தமிழ்லேயும் சரளமாப்பேசி அரிய பெரிய கருத்துக்களையெல்லாம் அழகா எடுத்துச் சொல்லும்போதும், அண்ணா, கிருபானந்தவாரியார் மாதிரி அறிஞர்களோட சொற்பொழிவுகளைக் கேக்கும்போதும் அவுங்கள மாதிரி, மத்த படிச்சவுங்களைக் கவரக்கூடிய அளவுக்கு என்னால பேச முடியலியேன்னு நினைச்சி எனக்கு நானே ஏங்குவேன்.
நான்:– அண்ணே! இந்த இடத்துல நான் குறுக்கிடுறதுக்கு மன்னிக்கணும்...
எம்.ஜி.ஆர்:– பரவாயில்லை. சொல்லுங்க.
நான்:– சின்ன வயசுலேருந்து நாடக மேடையில் மக்களுக்கு முன்னால நடிச்சுப் பேசி அனுபவப்பட்டிருக்கிறதுனால அதை வச்சி சபைக்கூச்சம் இல்லாம இப்போல்லாம் எந்த மேடையிலேயும் நீங்க என்ன சொல்ல நினைக்குறீங்களோ – அதைத் தெளிவாகவும் – கேக்குறவுங்களுக்குப் புரியும்படியாவும் பேசிடுறீங்க. அதில எந்தக் குறையும் இருக்கிறதா எனக்குத் தோணலே.
இயற்கையாக ஏற்படுகிற அறிவு வேற. கல்வியினால உண்டாகிற அறிவு வேற. அண்ணாவுக்கும், வாரியாருக்கும் உள்ளது கல்வி அறிவு! பெரியாருக்கும், காமராஜருக்கும், உங்களுக்கும் இருக்கிறது அனுபவம் கலந்த இயற்கை அறிவு! அது இல்லேன்னா மக்கள் கூடமாட்டாங்க.
எம்.ஜி.ஆர்:– இப்படி நீங்க சொல்றதைக் கேக்கும்போது என் மனசுக்கு ஆறுதலா இருக்கு. ஆயிரம்தான் இருந்தாலும் குறைங்குறது குறைதானே? அதுல பூர்த்தி செய்யக்கூடிய குறையும் இருக்கு. செய்ய முடியாததும் இருக்கு. அது அவுங்கவுங்களோட வாழ்க்கையைப் பொறுத்தது. அடுத்த பிறவி – மறு ஜன்மம்னு ஒண்ணு எனக்கு இருந்தா – என்னைப்பொறுத்தவரைக்கும் இந்த ரெண்டு குறைங்களும் இல்லாம – பெரிய பிள்ளைக்குட்டிக்காரனாகவும், சிறந்த கல்விமானாகவும் நான் பிறக்கணும். இதுதான் என் ஆசை’’ என்று எம்.ஜி.ஆர். கூறி முடித்ததும், எங்கள் இருவருக்கும் இடையில் ஒரு நீண்ட மவுனம் நிலவி, நீடித்தது. அதைக்கலைக்க நான் விரும்பவில்லை. ஏனென்றால், அந்த அனுபவப் பேராசிரியர் அன்று – அப்போது நடத்திய அந்த ‘மனோதத்துவப் பாட’வகுப்பில் நான் ஓர் இளங்கலை மாணவனாக இருந்தேன்!
எம்.ஜி.ஆர். இலங்கை ‘கண்டி’ நகரில் பிறந்தார். அங்கிருந்து இளம் பருவத்தில் பெயர்ந்து சோழவள நாட்டின் காவிரிக்கரை ஊரான திருக்குடந்தை என்னும் கும்பகோணத்தில் குடியமர்ந்தார்.
பாண்டிய நாட்டின் ‘கூடல்மா நகர்’ என்ற மதுரையில் பாலப்பருவத்தில் ‘குருகுலவாசம்’ செய்து இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழைக் கற்றுத் தேர்ந்தார்.
அதன் பின்னர் சேர நாட்டைச் சேர்ந்த பாலக்காடு பூமியில் இல்லம் அமைத்துக்கொண்டு இல்லறம் புகுந்தார்.
பிறகு கொங்கு நாட்டைச் சேர்ந்த ‘கோவை’ என்னும் கோயம்புத்தூர் ஜூபிடர் பிக்சர்சின் நிரந்தர நடிகராகி ‘கதாநாயக அந்தஸ்து’ பெற்றார்.
அடுத்து, அந்தப்பட நிறுவனத்துடன் சேர்ந்து வந்து தமிழகத்தின் தலைநகரும், தொண்டை நாட்டைச் சேர்ந்ததுமான ‘மதராஸ்’ என்னும் சென்னை மாநகரில் குடும்பத்தினருடன் குடியேறினார்.
அரசியலை ஒரு கண்ணிலும், சினிமாவை மறு கண்ணிலும் வைத்துக்கொண்டு, கோடம்பாக்கத்தில் கொடியேற்றிப் பறக்கவிட்டுப் புகழ் பெற்று, அதன் பின்னர், அர்ச்சுனன் குருஷேத்திர யுத்தத்தில் வில்லேந்தி வெற்றி கண்டதுபோல, அவர் அரசியல் களம் புகுந்து அபார வெற்றி பெற்று, ‘புனித ஜார்ஜ்’ கோட்டையில் மாண்புமிகு தமிழக முதல்–அமைச்சராக அமர்ந்து, அதற்கு முன்னும் பின்னும் வேறு எவருமே வரையாத – வரைய முடியாத வரலாற்றை வரைந்தார்.
எம்.ஜி.ஆர். இந்த மூன்று எழுத்துக்களும் சேர – சோழ – பாண்டிய மும்மண்டலங்களுக்கும் அவை, இம்மூன்று எழுத்துக்களுக்கும் சொந்தமானவை.
‘‘யாதும் ஊரே! யாவரும் கேளிர்!’’
‘‘கணியன் பூங்குன்றனார்’’ (புறநானூறு).
‘‘எந்த ஊரும் சொந்த ஊரே.’’
‘‘எல்லோரும் சுற்றத்தார் – நண்பர்களே குழந்தைக்காகவும் கல்விக்காகவும் காலமெல்லாம் அழுத MGR dailythanthi.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக