வியாழன், 6 பிப்ரவரி, 2014

BJPயிடம் பிடிகொடுக்காத ராமதாஸ்: அன்புமணிக்கு ராஜ்யசபா 'சீட்' ?

'பா.ஜ., கூட்டணியில் சேர வேண்டும் எனில், பா.ம.க.,வுக்கு ஒன்பது தொகுதிகளை ஒதுக்க வேண்டும்; அன்புமணிக்கு ராஜ்யசபா, 'சீட்' வேண்டும்' என, அந்தக் கட்சியின் தலைவர், ராமதாஸ் அடம் பிடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

'தேசிய கட்சிகளுடனும், திராவிட கட்சிகளுடனும் கூட்டணி இல்லை' என்ற முடிவில், பா.ம.க., நிறுவனர், ராமதாஸ் இருந்தார். ஆனால், அவரின் மகனும், கட்சியின் இளைஞர் அணி தலைவருமான, அன்புமணி, 'நீங்கள், இந்த முடிவில் இருந்தால், வரும் தேர்தல்களில், டெபாசிட் கூற முடியாது; விரைவில் கட்சியே காணாமல் போய் விடும்' என, ராமதாசை எச்சரித்ததோடு, லோக்சபா தேர்தலில், பா.ஜ., உடன் கூட்டணி அமைக்க வேண்டும் என, வலியுறுத்தினார் அதனால், பா.ஜ., உடன் கூட்டணி அமைக்கும் முடிவுக்கு, பா.ம.க., இறங்கி வந்தது. இதையடுத்து, பா.ஜ., தலைவர்கள் - ராமதாஸ் இடையேயான சந்திப்பு, சென்னையில் சமீபத்தில் நடந்தது. அப்போது, 'பா.ஜ., கூட்டணியில், பா.ம.க., சேர வேண்டும் எனில், லோக்சபா தேர்தலில், பா.ம.க.,விற்கு, ஒன்பது தொகுதிகளை ஒதுக்க வேண்டும்; அன்பு மணிக்கு ராஜ்யசபா, 'சீட்' பெற்றுத்தர வேண்டும்' என, ராமதாஸ் நிபந்தனை விதித்துள்ளார்.இதைக் கேட்ட, பா.ஜ., தலைவர்கள், 'கூட்டணி உறுதியான பின், தொகுதி பங்கீட்டை மேற்கொள்ளலாம்' என, தெரிவித்து உள்ளனர்.அதை ஏற்க மறுத்த ராமதாஸ், 'நாங்கள் கேட்டதை கொடுத்தால் மட்டுமே, பா.ஜ., பிரதமர் வேட்பாளர், மோடி பங்கேற்கும், வண்டலூர் பொதுக் கூட்டத்தில், பா.ம.க., பங்கேற்கும்' என, திட்டவட்டமாககூறியுள்ளார்.


இந்நிலையில், காஞ்சிபுரத்தில் நடந்த, பா.ம.க., மகளிர் அணி மாநாட்டிற்கு, நேற்று சென்ற ராமதாசிடம், பா.ஜ., நிர்வாகிகள், மீண்டும் பேசியுள்ளனர். அதிலும், உடன்பாடு எட்டப்படவில்லை. ராமதாஸ் தன் நிலையில், பிடிவாதமாக இருந்து உள்ளார். எனவே, அன்புமணி மூலம் அவரை வழிக்கு கொண்டு வர, பா.ஜ., நிர்வாகிகள் ஏற்பாடு செய்துஉள்ளனர். இந்த முயற்சிக்கு பலன் கிடைக்குமா என்பது, 8ம் தேதி நடக்கும், பொதுக்கூட்டத்தின் போது தெரிந்து விடும்.


ஓரிரு நாளில் கூட்டணி: பா.ஜ., தலைவர் உறுதி:

''லோக்சபா தேர்தலில், பா.ம.க.,வுடன் ஓரிரு நாளில், கூட்டணி உறுதியாகி விடும்,'' என, தமிழக பா.ஜ., தலைவர், பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
சென்னை கமலாலயத்தில், நேற்று அவர் அளித்த பேட்டி:இலங்கை கடற்படையினர், தொடர்ந்து, தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதோடு, துன்புறுத்தியும் வருகின்றனர். மத்திய அரசு, எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது, கண்டிக்கத்தக்கது. மோடி பிரதமரானால் தான், மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும். இலங்கை அரசு, சீனா, பாகிஸ்தான் நாடுகளை நம்பி இருக்கிறது.ராமேஸ்வரத்தில் நடந்த, கடல் தாமரை போராட்டத்தில், சுஷ்மா சுவராஜ் பங்கேற்று பேசுகையில், 'மத்தியில், பா.ஜ., ஆட்சி அமைந்தால், மீனவர்களுக்கு தனி அமைச்சகம் ஏற்படுத்தப்படும்' என, தெரிவித்தார்.வண்டலூரில், மோடி பங்கேற்கும் பொதுக் கூட்டத்தில், ஏ.சி.சண்முகம் பங்கேற்கிறார். கொங்கு நாடு தேசியக் கட்சியும் பங்கேற்கும். பா.ஜ., தொண்டர்கள் ஐந்து லட்சம் பேரும், மற்ற கட்சிகளின் தொண்டர்களும் கலந்து கொள்வர். கூட்டணி தொடர்பாக, பா.ம.க.,வுடன் சுமுகமான முறையில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாம். ஓரிரு நாளில், கூட்டணி உறுதியாகி விடும். 'கூட்டணி முடிவு குறித்து, தே.மு.தி.க., மாநாட்டில் அறிவிக்கப்படும்' என, விஜயகாந்த் அறிவித்தார். ஆனால், மாநாட்டில் அறிவிக்கவில்லை. அவர் சரியான முடிவை எடுப்பார் என, நம்புகிறோம். தமிழகத்தில், பா.ஜ., கூட்டணி தான், முதல் நிலை கூட்டணியாக திகழ்கிறது.இவ்வாறு, பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். dinamalar.com

கருத்துகள் இல்லை: