ஞாயிறு, 2 பிப்ரவரி, 2014

பாலியல் வன்முறைகளிலும் இந்தியாவுக்கே உலக அளவில் இரண்டாம் இடம். ! நாங்கள் எங்கே செல்வது?

உலகின் சரிபாதி இனமான பெண்கள் சந்தித்துவரும் கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. உலகம் முழுவதுமே பெண்கள் மீதான பாலியல் அத்துமீறல்களும் வன்கொடுமைகளும் அதிகரித்திருப்பதாகச் சர்வதேச ஆய்வுகள் அதிர்ச்சி தெரிவித்து இருக்கின்றன. ஸ்போர்ட் ரிச் லிஸ்ட் (Sport Rich Iist) ஆய்வறிக்கை, உலகில் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் அதிகம் நடைபெறும் நாடுகள் எனப் பத்து நாடுகளைப் பட்டியலிட்டிருக்கிறது.
முதலிடம் எந்த நாட்டுக்குத் தெரியுமா? பெண்ணுரிமையிலும் பெண் சுதந்திரத்திலும் முற்போக்கான எண்ணம் கொண்டது எனப் பலர் நினைத்திருக்கும் அமெரிக்காவில்தான் உலக அளவில் அதிகப் பாலியல் வன்முறைகள் நடக்கிறதாம். ஆனால், அதில் 16 சதவீதப் புகார்கள் மட்டுமே பதிவு செய்யப்படுகின்றன என்பது இன்னுமொரு அதிர்ச்சி. பெரும்பாலும் 14 வயதுக்குட்பட்ட பெண்களே அதிகப் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். ராணுவத்தில் பணிபுரியும் பெண்களும் விதிவிலக்கல்ல. அவர்களும் பாலியல் அத்துமீறல்களைச் சந்திக்க வேண்டி இருக்கிறதாம்.
இந்தியாவுக்கு இரண்டாவது இடம்
மக்கள்தொகையில் மட்டுமல்ல, பெண்கள் மீது நிகழும் பாலியல் வன்முறைகளிலும் இந்தியாவுக்கே உலக அளவில் இரண்டாம் இடம். வளர்ந்துவரும் நாடான இந்தியாவின் தேசியப் பிரச்சினையாகவே இது விஸ்வரூபம் எடுத்துவிட்டது. நாட்டின் தலைநகரமான புதுடெல்லியில்தான் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிக அளவில் நடக்கின்றன. இத்தாலிக்கும் தென் அமெரிக்காவும் அடுத்தடுத்த இடங்கள்.
குழுவாகச் சேர்ந்து ஒரு பெண்ணைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவது உலகம் முழுவதுமே அதிகரித்துள்ளது என்பது ஆண்களின் வக்கிர மனதையே உணர்த்துகிறது. தான் சீரழித்த பெண்ணைத் திருமணம் செய்துகொள்வதன் மூலம் தண்டனையில் இருந்து தப்பித்துவிடலாம் என்ற கட்டப்பஞ்சாயத்துதான், இத்தாலியில் கடந்த நூற்றாண்டுவரை நடைமுறையில் இருந்தது. ஆனால், தற்போது அதுபோன்ற கட்டுப்பெட்டித்தனம் ஏதும் இல்லையென்றாலும், அங்கிருக்கும் பெண்கள் பாதிப்புக்குள்ளாவது குறையவே இல்லை. இத்தாலியில் ஒரு பெண்ணுக்கு அவள் கணவன் அல்லது காதலனால்தான் அதிக அளவில் பாலியல் துன்புறுத்தல் நடைபெறுகிறதாம்.
குழந்தைகளும் விதிவிலக்கல்ல
தென் அமெரிக்காவில் ஒரு வருடத்திற்குக் குறைந்தது 5 லட்சம் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகிறார்கள். ஸ்வீடனில் ஒரு லட்சம் பேர் வசிக்கிற குடியிருப்புப் பகுதியில் தினமும் குறைந்தது 50 பெண்களாவது பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார்கள். பெண்கள் மீதான வன்முறைக்கு எதிரான சட்டங்கள் மிகக் கடுமையாக இருந்தாலும் பிரான்ஸ் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 25 ஆயிரம் பாலியல் வன்முறைச் சம்பவங்கள் நடைபெறுகின்றனவாம். அதில் எட்டாயிரம் பெண்கள் தங்கள் அலுவலக மேலதிகாரிகளாலேயே பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஜெர்மனியில் இதுவரை கிட்டத்தட்ட இரண்டரை லட்சம் பெண் குழந்தைகள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு இறந்திருக்கிறார்கள்.
பெண்களா? உடல்களா?
இவை எல்லாம் வெறும் புள்ளிவிவரங்கள் அல்ல, படித்துவிட்டுக் கடந்து செல்வதற்கு. ஒவ்வொரு மரணமும், ஒவ்வொரு அத்துமீறலும், ஒவ்வொரு வன்முறையும் பெண்ணினத்தின் மீதான ஆண்களின் ஆணவப் போக்கையே காட்டுகிறது. பரந்து விரிந்த இந்த உலகத்தில் ஒரு பெண்ணுக்கு எங்குமே பாதுகாப்பு இல்லையா?
பெண்களின் உடையணியும் பாங்குதான் இதுபோன்ற பாலியல் வன்முறைகளுக்குக் காரணம் என்பது கேட்டுக்கேட்டுப் புளித்துப் போன ஒரு வசனம். பள்ளிச் சிறுமிகளும், பச்சிளம் குழந்தைகளும்கூடச் சீரழிக்கப்படுகிறார்களே. இவர்கள் அணிந்திருக்கும் ஆடை, ஆண்களின் வக்கிரத்தைத் தூண்டும் அளவுக்கு ஆபாசமானதா? கல்லூரி வளாகத்துக்குள்ளேயும் பேருந்திலும் வைத்தே பெண்கள் சீரழிக்கப்படுகிறார்கள்.
வேலைக்குச் செல்லும் பெண்களின் நிலைமை இன்னும் மோசம். மென்பொருள் நிறுவனமோ, ஆயத்த ஆடைத் தயாரிப்பு நிறுவனமோ எதுவாக இருந்தாலும் பெண்கள், உடல்களாகவே பார்க்கப்படுகிறார்கள். நீதி சொல்லும் இடத்தில் இருக்கிறவர்களும், குற்றங்களைச் சுட்டிக்காட்டுகிற பணியில் இருக்கிறவர்களும் ஆண்களின் அடக்குமுறையில் இருந்தும் அத்துமீறலில் இருந்தும் தப்பிப்பது இல்லை.
தீர்வு என்ன?
அடக்கமாக இருக்க வேண்டும், தலை முதல் கால்வரை உடையணிய வேண்டும், ஆறு மணிக்கு மேல் வீட்டைவிட்டு வெளியே போகக் கூடாது - இது போன்ற கட்டுப்பாடுகள்தான் பெண்களைக் காக்கும் கேடயமா? வெளியுலகம்தான் பெண்களை வதைக்கிறது என்று வீட்டுக்குள்ளேயே சிறைபட்டுக் கிடந்தாலும் குடும்ப அமைப்பு பாதுகாப்பானதாக இல்லை என்பதுதான் வேதனையின் உச்சம்.
வீட்டுக்குள் இருக்கும் உறவுகளாலேயே பாதிக்கப்பட்ட பெண்களைப் பற்றி யாராவது கவலைப்படுகிறோமா? குடும்பக் கௌரவம் என்கிற சொல்லால் அழித்தொழிக்கப்படுகிற பெண்களின் வாழ்வுக்குத் தீர்வு என்ன? வீடு, பள்ளி, கல்லூரி, அலுவலகம், பொது இடம் என்று எங்குப் பார்த்தாலும் பெண்களை உருக்குலைக்கும் ஆபத்துகள் எப்போதும் தயார் நிலையிலேயே இருக்கின்றன. இப்போது ஒரு பெண் தன் மீது அநியாயமாக விதிக்கப்படும் தண்டத்தொகையைச் செலுத்த மறுத்ததால், அந்த ஊரில் இருக்கும் ஆண்கள் அனைவரும் அவளைச் சூறையாடலாம் என்கிற அளவுக்கு முன்னேறியிருக்கிறோம். இன்னும் இதுபோன்ற என்னென்ன முன்னேற்றங்கள் பெண்களுக்காகக் காத்துக் கிடக்கின்றனவோ?
ஆண்கள் மனதில் காலங்காலமாக ஊறிக்கிடக்கும் ஆணாதிக்கமும், பெண்ணை ஒரு போகப் பொருளாக நினைப்பதும், ஆணுக்கு அடிமைத் தொழில் செய்வதற்கே பிறப்பெடுத்தவள் பெண் என்கிற கோளாறான கற்பிதங்களுமே பெண்ணுக்கு எதிரான பாலியல் வன்முறைகளின் தோற்றுவாய். முறைப்படுத்தப்படாத சட்டங்களும் இதுபோன்ற கொடுமைகள் அதிகரிக்கக் காரணம். கடுமையான சட்டங்கள் இருந்தும் அவற்றைச் செயல்படுத்துவதில் ஏற்படும் காலதாமதமே போதும், குற்றவாளிகள் அடுத்த தவறைச் செய்வதற்கு.
கருப்பை உட்பட எந்த பாதுகாப்பு இல்லாத நிலையில்தான் பெண்கள் தங்கள் வாழ்நாளைக் கழிக்க வேண்டியுள்ளது. இதற்கு என்ன தீர்வு, நீங்களே சொல்லுங்கள் தோழிகளே tamil.thehindu.com/

கருத்துகள் இல்லை: