வியாழன், 6 பிப்ரவரி, 2014

மீண்டும் விஜயகாந்த் புது யோசனை திமுக பாமக தேமுதிக பா ஜ க 40 க்கும் குறி ! ஜெயலலிதாவின், பிரதமர் கனவை தகர்க்க ?

முதல்வர் ஜெயலலிதாவின், பிரதமர் கனவை தகர்க்க வேண்டும்' என்பதில், விஜயகாந்த் தீவிரமாக உள்ளார். அதனால், பா.ஜ., - தி.மு.க., - தே.மு.தி.க., உட்பட, பல கட்சிகள் இணைந்து, பலமான கூட்டணியை அமைக்க வேண்டும் என, பா.ஜ., மேலிடத் தலைவர்களிடம், தன் மைத்துனர், சுதீஷ் மூலம், புது யோசனை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகிஉள்ளது.
லோக்சபா தேர்தலில், தே.மு.தி.க.,வுடன் கூட்டணி அமைக்க, தி.மு.க.,வும், பா.ஜ.,வும் முயற்சித்து வருகின்றன. இக்கட்சி களிடம், உளுந்தூர்பேட்டை மாநாட்டில், முடிவை அறிவிப்பதாக கூறிய, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், இதுவரை எந்த முடிவையும் தெரிவிக்கவில்லை.பா.ஜ., பிரதமர் வேட்பாளர் மோடி, வரும், 8ம்தேதி, சென்னை வண்டலூரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். இக்கூட்டத்தில், பா.ஜ., கூட்டணியில் இடம்பெற்றுள்ள, கட்சி தலைவர்களை மேடை ஏற்ற, ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ஆனால், கூட்டணிக்கு பிடிகொடுக்காமல் தே.மு.தி.க., இருந்து வருகிறது. அதேநேரத்தில், லோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளிலும் வெற்றிப் பெற்று விட்டால், டில்லியில், ஆட்சி அதிகாரத்தையும், பிரதமர் பதவியையும் பிடித்து விடலாம். தமிழகத்தில், எதிர்க்கட்சிகள் பிரிந்து கிடப்பதால், அதை பயன்படுத்தி சாதித்து விடலாம் என்பதே, ஜெயலலிதாவின் கணக்கு.ஆனால், ஜெயலலிதாவின் பிரதமர் கனவை தகர்க்க, தே.மு.தி.க., தலைவர், விஜயகாந்த், புதிய வியூகம் வகுத்துள்ளதாக தெரிகிறது. அதனால் தான், தி.மு.க. - பா.ஜ., கட்சிகளுக்கு, கூட்டணி பற்றிய பிடிகொடுக்காமல், அவர் இருந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
டில்லியில் முகாம்: மேலும், தன் மைத்துனர் சுதீஷை, டில்லிக்கு அனுப்பி, தன் புதிய வியூகம் குறித்து, பா.ஜ., தலைவர்களிடம் விளக்கும்படி, விஜயகாந்த் கூறியுள்ளதாகத் தெரிகிறது.தேர்தல் கமிஷன் ஆலோசனை கூட்டத்தில், பங்கேற்க செல்கிறேன் என, கட்சியினரிடம் கூறி விட்டு, டில்லி சென்ற சுதீஷ், இரண்டு நாள் அங்கு முகாமிட்டு, பா.ஜ., மூத்த தலைவர் ஒருவரை சந்தித்து, விஜயகாந்த் யோசனை பற்றி கூறியுள்ளார். சுதீஷ் - பா.ஜ., மூத்த தலைவர் சந்திப்பிற்கு, ஆந்திராவை சேர்ந்த, தொழிலதிபர் ஒருவர், ஏற்பாடு செய்துள்ளதாக தெரிகிறது.

இதுபற்றி, தே.மு.தி.க., வட்டாரங்கள் கூறியதாவது:
பா.ஜ., அணியில், ம.தி.மு.க., - பா.ம.க., - ஐ.ஜே.கே., புதிய நீதிக்கட்சி இடம் பெறப்போவது உறுதி. இதில், ம.தி.மு.க.,விற்கு நான்கு, பா.ம.க., விற்கு ஆறு என, மொத்தம், 10 சதவீத ஓட்டுகள் உள்ளன. மோடி அலை காரணமாக, பா.ஜ.,விற்கு ஐந்து சதவீத ஓட்டுகள் கிடைக்கும். மற்ற உதிரி கட்சிகளுக்கு, தோராயமாக ஒரு சதவீதம் என, வைத்துக் கொள்வோம்.இவற்றை மொத்தம் சேர்த்தால், 16 சதவீதம் ஓட்டுகளையே கூட்டணி பெறும். இந்தக் கூட்டணியில், தே.மு.தி.க., சேர்ந்தால், அதன், 10 சதவீத ஓட்டுகளை சேர்த்தால், கூட்டணிக்கு, 26 சதவீத ஓட்டுகள் கிடைக்கும். அதனால், பா.ஜ., கூட்டணிக்கான வெற்றி வாய்ப்பு சந்தேகமே. வேண்டுமானால், தி.மு.க.,வை மூன்றாம் இடத்திற்கு தள்ளி விட்டு, இரண்டாம் இடத்தை பிடிக்கலாம். எனவே, பா.ஜ., - தி.மு.க., - தே.மு.தி.க., இணைந்து, புதிய வெற்றி கூட்டணி அமைக்கவேண்டும் என, விஜயகாந்த் விரும்புகிறார். இந்தக் கூட்டணியில், ம.திமு.க., - பா.ம.க., கட்சிகள் சேர்ந்தாலும், தவறில்லை.பலமான கூட்டணி அமையும் போது, ஜெயலலிதாவால் பாதிக்கப்பட்ட வைகோ, ராமதாஸ் போன்றவர்கள், 'சீட்' குறைவாக கொடுத்தாலும், ஒப்புக்கொள்வர்.பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்க, விஜயகாந்திற்கு விருப்பமே. ஆனால், கூட்டணி பலமானதாக, வெற்றி வாய்ப்பை பெறக்கூடியதாக இருக்க வேண்டும். 2011 சட்டசபை தேர்தலில், தி.மு.க.,விற்கு எதிரான பலமான கூட்டணி அமைந்ததால் தான், அ.தி.மு.க., அணி வெற்றி பெற்றது.


அப்படி ஒரு, பலமான கூட்டணி அமைத்தால் மட்டுமே, முதல்வர் ஜெயலலிதாவின் மூன்றாவது அணி பிரதமர் கனவை தகர்க்க முடியும். இதுவே, விஜயகாந்தின் கணக்கு. அதனால், தி.மு.க., - பா.ஜ., - தே.மு.தி.க., - பா.ம.க., - ம.தி.மு.க.,இடம் பெறும் பலமான கூட்டணி அமைக்க வேண்டும் என, விரும்புகிறார். விஜயகாந்தின் இந்தக் கருத்தையே, பா.ஜ., தலைவர்களிடம், சுதீஷ் கூறியுள்ளதாகதெரிகிறது. இருப்பினும், இந்த முயற்சி, ஒரு ஆரம்பமே. எந்த அளவுக்கு வெற்றி பெறும் என்பது போகப்போகத் தான் தெரியும்.இவ்வாறு, தே.மு.தி.க., வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

- நமது நிருபர்  

கருத்துகள் இல்லை: