சனி, 8 பிப்ரவரி, 2014

1.50 லட்சம் கோடியாக உயரும் ஏற்றுமதி ! முட்டை, இறைச்சிப் பொருள்கள் !

முட்டை, இறைச்சி உள்ளிட்ட மதிப்புக் கூட்டப்பட்ட வேளாண் பொருள்களின் ஏற்றுமதி நிகழ் நிதியாண்டில் ரூ.1.50 லட்சம் கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுவதாக, மத்திய அரசின் வேளாண், மதிப்புக் கூட்டப்பட்ட உணவுப் பொருள்கள் ஏற்றுமதி வளர்ச்சி வாரியத்தின் ("அபிட்டா') செயலர் சந்தோஷ் சாரங்கி தெரிவித்தார். "அபிட்டா' சார்பில் நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியின் தீவன பரிசோதனை தர நிர்ணய மையத்துக்கு ரூ.4.38 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியின் மூலம் ஏற்றுமதிக்கான கோழி முட்டை, இறைச்சிப் பொருள்களில் அடங்கியுள்ள வேதிப் பொருள்களைக் கண்டறிய நவீன இயந்திரம் நிறுவப்படுகிறது. இதன்மூலம், ஏற்றுமதிக்கான முட்டை, பால், இறைச்சிகளில் அடங்கியுள்ள வேதிப் பொருள்களை கண்டறிந்து, அவற்றைத் தடுக்க முடிவதால் இறக்குமதி நாடுகள் இந்திய உணவுப் பொருள்களை ரத்து செய்வதைத் தவிர்க்க முடியும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், நிறுவப்படும் நவீன இயந்திரத்தை அபிட்டா செயலர் சந்தோஷ் சாரங்கி, பொது மேலாளர் தருண் பஜாஜ் ஆகியோர் நாமக்கல்லில் வெள்ளிக்கிழமை பார்வையிட்டனர்.
பின்னர், கோழி முட்டை, இறைச்சி ஏற்றுமதியாளர்களைச் சந்தித்த அவர்கள், பண்ணையாளர்களின் பிரச்னைகள், கோரிக்கைகளைக் கேட்டறிந்தனர்.
அப்போது பண்ணையாளர்கள் கூறியது: நாட்டின் ஒரு பகுதியில் ஏற்படும் பறவைக் காய்ச்சல் உள்ளிட்ட நோய்த் தாக்குதலால் நோய் பாதிப்பில்லாத பிற பகுதி பண்ணைகளுக்கு ஏற்றுமதி சந்தையில் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்க, பண்ணைகளை தனித் தனியாகப் பிரித்து சான்றுகள் வழங்க வேண்டும்.
இந்திய முட்டை, இறைச்சிகளுக்கு தடை விதித்துள்ள நாடுகளில் தடையை விலக்கிடவும், புதிய நாடுகளில் ஏற்றுமதி வாய்ப்பைப் பெருக்கிடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பண்ணைப் பொருள்கள் ஏற்றுமதியாளர்களுக்கு சிறப்புச் சலுகைகள் பெற்றுத் தர வேண்டும் போன்ற கோரிக்கைகளை அவர்கள் விடுத்தனர்.
அதற்கு சந்தோஷ் சாரங்கி அளித்த பதில்: பண்ணைகளைத் தனித் தனியாகப் பிரித்து சான்றுகள் அளித்திடவும், முட்டை, இறைச்சி ஏற்றுமதியாளர்களுக்கு கூடுதல் சலுகைகள் பெற்றுத் தரவும் பரிசீலனை செய்யப்படும். தவிர, இந்திய முட்டை, இறைச்சிகளுக்கு ஏற்றுமதிச் சந்தையில் தடை விலக்கிடவும், புதிய நாடுகளில் ஏற்றுமதிக்கான வாய்ப்பை விரிவுபடுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பறவைக் காய்ச்சல் பாதிப்பால் சில அரபு நாடுகள் இந்திய முட்டை, இறைச்சிப் பொருள்களுக்கு தடை விதித்திருந்தன. அபிட்டாவின் முயற்சியின் காரணமாக ஒரு சில நாடுகளில் இந்தத் தடை விலக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், கடந்த 2012-13-ஆம் ஆண்டில் ரூ.1.20 லட்சம் கோடிக்கு இந்தியாவிலிருந்து முட்டை, இறைச்சி உள்ளிட்ட மதிப்புக் கூட்டப்பட்ட வேளாண் பொருள்கள் ஏற்றுமதியாகின. இது நிகழ் நிதியாண்டில் ரூ.1.40 லட்சம் கோடி முதல் ரூ.1.50 லட்சம் கோடி வரை உயரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஏற்றுமதி செய்யப்படும் கோழி முட்டை, இறைச்சிப் பொருள்களின் தரத்தை மேம்படுத்த பரிசோதனைக் கூடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இவற்றை பண்ணையாளர்கள் பயன்படுத்தும் போது இந்திய முட்டை, இறைச்சிப் பொருள்களை சர்வதேச தரத்துக்கு இணையாக உயர்த்த முடியும் என்றார் அவர்.
கல்லூரி முதல்வர் கே.ஏ.துரைசாமி, பண்ணைப் பொருள்கள் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் சிங்கராஜ், செயலர் வல்சன், தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர் சங்கச் செயலர் கே.எஸ்.பொன்னுச்சாமி உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். .dinamani.com

கருத்துகள் இல்லை: