டாக்டர் கிருஷ்ணசாமிக்காக தென்காசி தொகுதியில் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக தேர்தல் வேலைகள் நடைபெற்றுவரும் நிலையில் தென்காசியில் கிருஷ்ணசாமி தனது மகளை நிறுத்தப் போவதாக செய்திகள் வருகின்றன.
தென்காசி தொகுதியை விட்டுத் தருவதாக தந்த உத்தரவாதத்தின் பெயரிலேயே அதிமுக அணியிலிருந்து டாக்டர் கிருஷ்ணசாமி திமுக பக்கம் மெதுவாக சாய ஆரம்பித்தார். இந்நிலையில், தனக்காக கேட்டுப் பெற்ற தென்காசி தொகுதியில் தனது மகள் சங்கீதாவை நிறுத்தும் முடிவில் அவர் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
தொடக்கத்தில் காங்கிரஸ் கோட்டையாக இருந்த தென்காசி தொகுதி, 1998-ம் ஆண்டுக்குப் பின் காங்கிரஸிடமிருந்து கைநழுவிப் போனது. அதே சமயம் 1998-லிருந்து இங்கே தனித்துப் போட்டியிட்டு ஒவ்வொரு முறையும் 1 லட்சத்துக்கு அதிகமான வாக்குகளைப் பெற்று தன்னுடைய வாக்கு வங்கியை நிரூபித்து வருகிறார் கிருஷ்ணசாமி. இந்தமுறை வலுவான கூட்டணி பலத்துடன் களமிறங்க வேண்டும் என்பதற்காகவே திமுக-வுடன் ஒப்பந்தம் போட்டிருக்கிறார்.

மாநிலங்களவை தேர்தலில் திமுக வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவாக புதிய தமிழகத்தை வாக்களிக்க வைத்த கிருஷ்ணசாமி, அப்போதிருந்தே தென்காசி தொகுதிக்குள் தனக்கான தேர்தல் வேலைகளையும் தொடங்கி விட்டார். தொகுதியில் உள்ள கிளைச் செயலாளர்களைச் சந்தித்துப் பேசியவர், தொகுதி மக்கள் பிரச்சினைகளுக்காக மக்கள் இயக்கங்களையும் நடத்தினார். இன்னொரு பக்கம், மாநிலப் பொதுக்குழு, புதிய நிர்வாகிகளுக்குப் பாராட்டு விழா, விருந்து என களைகட்டியது தென்காசி.
கூட்டணி கட்சியினருடன் இணக்கமாக இருக்க வேண்டும். மது அருந்தக் கூடாது என அன்புக் கட்டளைகளைப் போட்டு தொண்டர்களைத் தேர்தலுக்குத் தயார்படுத்திக் கொண்டிருக்கும் கிருஷ்ணசாமி, ’இந்தத் தொகுதியிலிருந்து எம்.பி.யானவர்களும் அமைச்சரா னவர்களும் தொகுதி மக்களுக்காக எதையுமே செய்யவில்லை’ என்பதைச் சுட்டிக்காட்டி மக்களை கவரும் விதமாக பிரச்சாரம் செய்துவருகிறார் .
இதனிடையே, ’’தற்போது ஒட்டப்பிடாரம் எம்.எல்.ஏ-வாக இருக்கும் கிருஷ்ணசாமி, அந்த தொகுதியை கைவிட தயாராக இல்லை. இதனால் தென்காசி தொகுதியில் தனது மகள் சங்கீதாவை களமிறக்க திட்டமிட்டிருக்கிறார்.
முறைப்படி திமுக கூட்டணி தொகுதி பங்கீடுகள் உறுதியானதும் மகளை தேர்தலில் நிறுத்தும் முடிவை அறிவிப்பார் கிருஷ்ணசாமி’’ என்கிறார்கள் தென்காசியில் உள்ள புதிய தமிழகம் கட்சிப் பொறுப்பாளர்கள் tamil.thehindu.com