பா.ம.க – ராமதாசு – வன்னிய சாதிவெறி போன்ற சொற்களே இல்லாமல், மிகவும் கவனமாக தயாரிக்கப்பட்ட பல மொண்ணை அறிக்கைகள் இளவரசன் மரணத்தையொட்டி வெளிவந்து கொண்டிருக்கின்றன. சீமான் வெளியிட்ட அத்தகையதொரு அறிக்கையை விமரிசித்து நாம் நேற்று முன்தினம் ஒரு பதிவு எழுதியிருந்தோம்.
அதற்குப் பின்னூட்டமிட்ட சிலர் வளைத்து வளைத்து பல வார்த்தைகளில் ஒரு கேள்வியை எழுப்பியிருக்கிறார்கள். “எல்லா கட்சிகளும் மழுப்பியிருக்கும்போது எங்கள் செந்தமிழனை மட்டும் ஏன் வறுக்கிறீர்கள்?”, “சாதிப்பூசல் வந்து தமிழர் ஒற்றுமை கெட்டு விடக்கூடாது என்ற நல்லெண்ணத்தின் காரணமாகத்தான் அண்ணன் பா.ம.கவை பெயர் குறிப்பிட்டு சொல்லவில்லை” – இதுதான் அவர்களுடைய லா பாயின்ட்.
இலை மலர்ந்தால் ஈழம் மலரும்
இனி விசயத்துக்கு வருவோம். சீமான் மீது நமக்கு தனிப்பட்ட பகை எதுவும் கிடையாது. சொல்லப்போனால் அவருடைய பொதுக்கூட்டத்தை இந்து மதவெறியர்கள் தாக்கியபோது அதைக் கண்டித்து குரல் கொடுத்திருக்கிறோம். கருணாநிதி ஆட்சியில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறை வைக்கப்பட்ததை எதிர்த்தும் குரல் கொடுத்திருக்கிறோம். இதெல்லாம் சொற்ப காலம்.
2009 வாக்கில் ஈழப்பிரச்சினையை முன்வைத்து அவர் நடத்தத் தொடங்கிய இனவாத-சந்தர்ப்பவாத அரசியல், இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று பாசிச ஜெயாவுக்கு காவடி எடுத்தது, ஈழத்தை கோட்சே ஆதரித்தால் நான் கோட்சே கட்சி என்று கொள்கை விளக்கமளித்தது, மும்பை முஸ்லிம் இனப்படுகொலையை நடத்திய சிவசேனாவை ஆதரித்து தேர்தல் வேலை செய்தது, முத்துராமலிங்கத் தேவர் வழிபாடு .. என வெகு வேகமாக தன்னைத்தானே அவர் அம்பலமாக்கிக் கொண்டார். பிறகு பெரியார் எதிர்ப்பை மையமாகக் கொண்ட பார்ப்பன அடிவருடி அரசியலை, “திராவிட இயக்க எதிர்ப்பு” என்ற பெயரில் தனது கட்சியின் கொள்கைப் பிரகடனமாக வெளியிட்டார். பிறகு மூக்குடைபட்டு மழுப்பினார்.

சீமான் கடை விரித்து வருவது ராஜ் தாக்கரே பாணியிலான இனவெறி அரசியல். இதற்குப் பொருத்தமாக, பிழைப்புவாத லும்பன்களுக்கே உரிய சவடால் பேச்சை அவர் ஆயுதமாக ஏந்தியிருக்கிறார். இந்த சவடால் பேச்சின் காரணமாக அரசியல் எதிர்காலம் அடிபட்டு ஆஸ்பத்திரியில் கிடப்பவர்கள் தமிழினத்தின் எதிரிகள் அல்லர். சீமானுக்கு மூத்தவர்களான பல இனவாதிகள். சீமான் அளவுக்கு இவர்களுக்குத் தொண்டையில் தெம்பில்லை என்பது மட்டுமின்றி, விஜய்-தனுஷ் ரசிகர்களின் அறிவு மட்டத்திற்குப் பொருந்தும் விதத்தில் தமிழின விடுதலைக்கு திரைக்கதை வசனம் எழுதும் திறன் இவர்களுக்கு இல்லை.
“உலகம் உருண்டையானது” என்ற அறிவியல் உண்மையை வெளியிடுவதாக இருந்தாலும் கூட, தொண்டை நரம்பு புடைக்காமலோ, யாருக்காவது சவால் விடாமலோ, ஒரு கையால் தனது இன்னொரு கையை குத்தித் தள்ளாமலோ அவரால் அதனை வெளியிட முடியாது. “காலைப் பிடித்துக் கெஞ்சிக் கேட்கிறேன்” என்ற வரியை அவர் மேடையில் பேசினாலும், அது “மென்னியைப் பிடித்து கொன்று விடுவேன்” என்பதாக நம் காதில் ஒலிக்கும். காரணம் அவ்வளவு காரம், அவ்வளவு போர்க்குணம்.
அடுத்த பாயின்ட் என்னவென்று தெரியாமல் வாய்தா வாங்குகிறாரா, அல்லது அடுத்த குண்டு வீச்சை எதிர்கொள்ளும் திறன் கூடியிருக்கும் தமிழர்களுக்கு உள்ளதா என்று சர்வே எடுக்கிறாரா
வைகோவுக்கு ஒரு ஸ்டைல் இருக்கிறது. அவர் பேச்சின் இடையே தனது தோளில் கொள்கை உறுதியோடு விரைப்பாகத் தொங்கும் குவாலியர் சூட்டிங் பாண்ட் பிட்டை ஏற்றி இறக்குவார். சீமான் திரைப்பட இயக்குநர் என்பதால், தனது பேச்சின் ஒவ்வொரு வரி முடிந்த பின்னரும் ஒரு “சைலன்ட் ஷாட்” வைத்திருக்கிறார். அந்த சைலன்ஸ் என்பது புயலுக்கு முந்தைய அமைதிக்கு இணையானது. காமெராவின் பானிங் ஷாட் போல அவர் கூட்டத்தை ஒருமுறை பார்ப்பார். அடுத்த பாயின்ட் என்னவென்று தெரியாமல் வாய்தா வாங்குகிறாரா, அல்லது அடுத்த குண்டு வீச்சை எதிர்கொள்ளும் திறன் கூடியிருக்கும் தமிழர்களுக்கு உள்ளதா என்று சர்வே எடுக்கிறாரா என்று யாரும் கண்டுபிடிக்க முடியாது.
வலுவான செவிப்புலன் வாய்க்கப் பெறாத தமிழர்கள், சீமானின் கருத்துக்களால் நடுங்கும் ஸ்பீக்கர் செட்டைக் கூட எதிர்கொள்ள இயலாது. அதிகம் சொல்வானேன். ஏற்கெனவே வைகோவின் மைக் செட்டுக்கு இருந்து வந்த செல்வாக்கை சீமான் கட்டிய குழாய் விஞ்சி விட்டது.
இதன் காரணமாக அவர் தமிழின விடுதலைக்கான அடுத்த போர்வாளாக ஆனது மட்டுமின்றி, அடுத்த தமிழக முதல்வருக்கான காத்திருப்போர் பட்டியலுக்கும் வந்து விட்டார். இதன் காரணமாகத்தான் அவருடைய கருத்துகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் தரவேண்டியிருக்கிறது என்பதை சீமானின் ஆதரவாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இனி அவருடைய அறிக்கையின் வரிகளுக்கு வருவோம்.
“நம்மை பிளக்கும் சாதிய சக்திகளையும், அவைகள் உருவாக்கும் கீழ்த்தரமான உணர்வுகளையும் புறந்தள்ளிட வேண்டும். இதனை செய்யத் தவறினால், தமிழனுக்கு என்று ஒரு அரசியலை உருவாக்கும் நமது முயற்சியும், நம் இனத்தின் விடுதலையும், உரிமை மீட்பும் கேள்விக்குறியாகி விடும் என்பதை தமிழினத்திற்கு நாம் தமிழர் கட்சி வலியுறுத்திக் கூற கடமைபட்டுள்ளது.”
சாதிய சக்தி“கள்” என்று சீமான் குறிப்பிடுகிறாரே, இளவரசனையும் திவ்யாவையும் பிரித்த சாதிய சக்தி பா.ம.க மட்டும்தானே. அங்கே “கள்” ளுக்கு வேலை என்ன? தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக “பிராமணர் முதல் தேவர்-நாடார் வரையிலான” சாதிச் சங்கங்களை ஒன்றிணைத்து மாமல்லபுரத்தில் விழா நடத்தியது வன்னியர் சங்கம்தானே!
உலகத்துக்கே தெரிந்த இந்த உண்மையை சீமான் கூறாமல் தவிர்ப்பதற்கு காரணம், தமிழின ஒற்றுமை மீது அவருக்கு இருக்கும் அக்கறையாம். இதன்படி ஆர்.எஸ்.எஸ்ஸை இந்து மதவெறியர்கள் என்றோ, தாலிபானை இசுலாமிய மதவெறியர்கள் என்றோ சொல்வது தவறு. மதவாத சக்திகள் என்றுதான் சொல்லவேண்டும். வெளிப்படையாக சொல்லவில்லையே தவிர பா.ம.க தான் அந்த சாதிய சக்தி என்பதில் அண்ணன் தெளிவாகத்தான் இருக்கிறார் என்கிறார்கள் பின்னூட்டம் போடும் அவருடைய தம்பிகள்.
மாமல்லபுரம் சாதி வெறியர்கள் மாநாட்டில்
மாமல்லபுரம் சாதி வெறியர்கள் மாநாட்டில்
“ஆழம்” மாத இதழில் (ஜூலை 2013) சீமானின் பேட்டி வெளிவந்துள்ளது. அதில் அண்ணனுடைய அறிவின் ஆழம் அன்டார்ட்டிக்கா வரை செல்கிறது. “ஒரு மாநில அரசு (ஈழப்பிரச்சினையில்) இதற்கு மேல் என்ன செய்திருக்க முடியும்?” என்ற கேள்விக்கு கீழ்வருமாறு பதிலளிக்கிறார் சீமான் :
“நானோ, ஐயா ராமதாஸோ, அண்ணன் திருமாவளவனோ முதலமைச்சராக இருந்திருந்தால் இலங்கையில் யுத்தமே நடந்திருக்காது! மலையாளி மலையாள மண்ணையும், கன்னடன் கன்னட மண்ணையும், தெலுங்கன் தெலுங்கு மண்ணையும் ஆள்வதைப் போல, ஒரு தமிழன் தமிழ்நாட்டை ஆண்டிருந்தால் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக யுத்தம் நடத்தும் துணிவே இந்திய அரசுக்கு வந்திருக்காது. அப்படி நடத்த முற்பட்டிருந்தால் இந்தியாவுக்குள் தமிழ்நாடு இருந்திருக்காது!”
“நான் வன்னியன்” என்று ராமதாசு தெளிவாக பிரகடனம் செய்த பிறகும், அவரால் ஏத்தி விடப்பட்ட சொந்தங்கள் “நாங்கள் பல்லவ பரம்பரை” என்று கூறி மாமல்லபுரம் கோயில் மீது டான்ஸ் ஆடியபிறகும், நத்தம் காலனி தாக்குதல், மரக்காணம் தாக்குதல் என்று சாதிவெறித்தனங்களை அடுத்தடுத்து அரங்கேற்றிய பிறகும், சாதிச் சங்க கூட்டணி அமைத்து திராவிட இயக்கத்தை தமிழகத்தை விட்டு ஒழிப்பேன் என்று ராமதாசு சபதம் போட்ட பிறகும், “அவர் டம்லர்தான். அவர் ஆட்சியில் இருந்தால் ஈழத்து டம்லர்களையும் காப்பாற்றியிருப்பார்” என்கிறார் சீமான்.
“வட தமிழ்நாட்டை தனியாகப் பிரி. அப்போதுதான் வன்னியர் முதல்வராக முடியும்” என்கிறார் மருத்துவரய்யா. அய்யா முதல்வராக இருந்திருந்தால், இந்திய அரசை எதிர்த்து தமிழ் நாட்டையே தனிநாடு ஆக்கியிருப்பார் என்கிறார் சீமான். குச்சு கொளுத்தி என்று தாழ்த்தப்பட்ட தமிழர்களிடம் பட்டம் பெற்ற மருத்துவரய்யா, வன்னியில் கதறிய ஈழத்தமிழரை காப்பாற்றியிருப்பாராம்.
இப்படி சொன்னால் தாழ்த்தப்பட்ட மக்கள் உள்ளிட்ட வன்னியரல்லாத அந்நியத் தமிழர்கள் காறித்துப்பி விடுவார்கள் என்பதால், முதல்வர் பதவியை திருமாவுக்கும் தனக்கும் வழங்கிக் கொள்கிறார். “உயிரைப் பணயம் வைத்து” ஈழம் சென்று வந்த வைகோ வடுகர் என்பதால் அவருக்கு இந்த முதல்வர் பட்டியலில் இடம் கிடையாது.
ஏனென்றால் ஈழத் தமிழனுக்கு நேரும் துன்பம் கண்டு துடிக்க வேண்டுமென்றால், உங்கள் உடம்பில் தெலுங்கு, மலையாளி, கன்னட கலப்பில்லாத தமிழ் ரத்தம் ஓட வேண்டுமாம். அப்படிப்பட்ட தமிழ் ரத்தம் கொங்கு ஈசுவரன், சேதுராமன், பொன் இராதா கிருஷ்ணன், அர்ஜுன் சம்பத் போன்றோரின் உடலில்தான் ஓடுகிறதாம். ஏனென்றால் இவர்களெல்லாம் தமிழ்ச் சாதிகளாம்!
ஆல் இன் ஆல் அழகுராஜா
இதுக்குத்தான் ஊருக்குள்ள ஒரு ஆல் இன் ஆல் அழகுராஜா வேணுங்கிறது
பெரியார்தாசன் சொல்லும் ஒரு நகைச்சுவை நினைவுக்கு வருகிறது. “தமிழனுக்கு அறிவு இல்லை, தமிழனுக்கு மானம் இல்லை” என்று என்ன வேண்டுமானாலும் திட்டுங்கள். எவனும் கேட்கமாட்டான். “செட்டியாருக்கு அறிவில்லை, தேவருக்கு மானமில்லை” என்று சொல்லிப் பாருங்கள். நீங்கள் வீடு போய் சேர முடியாது. இங்கே செட்டியாரும் முதலியாரும்தான் இருக்கிறான். தமிழன் இல்லை” என்பார்.
தமிழன் தன் பெயருக்குப் பின்னால் ஒட்ட வைத்திருந்த சாதியைக் கத்தரித்தார் பெரியார். வன்னியத் தமிழன், கவுண்டத் தமிழன் என்று “தமிழ்ச்சாதி”களை உருவாக்கி வரும் இந்த “நாம் தமிழர்கள்”, பெரியார் மரபை ஒழித்துக்கட்டி தமிழின உணர்வை உருவாக்கப் போகிறார்களாம்! பார்ப்பனியம்-சாதியம் என்ற இந்த விளக்குமாத்துக்கு தமிழின உணர்வு என்றொரு பட்டுக் குஞ்சம்!
வினவு, பா.ம.க வின் பெயரைச் சொல்லி சாதி வெறியர்கள் என்று சாடினால், தமிழர்களைப் பிளவு படுத்துவதாக குதிக்கிறார்கள் “நாம் டம்லர்” தம்பிகள். நாம் மட்டுமா? நத்தம் காலனி தாழ்த்தப்பட்ட மக்கள் ராமதாசின் பெயரைச் சொல்லித்தான் மண்ணை வாரி இறைக்கிறார்கள். நாடே காறித் துப்புகிறது. எனில் நத்தம் காலனி மக்கள் தமிழினத் துரோகிகளா, காடு வெட்டி குருதான் தமிழினப் போராளியா?
அண்ணன் இதனைத் தெளிவாக விளக்குகிறார். “பரமக்குடி, தர்மபுரி, மரக்காணம் கலவரங்கள் குறித்து உங்கள் பார்வை என்ன?” என்ற ஆழம் பத்திரிகையின் கேள்விக்கு சீமானின் பதில் இது:
“எங்கள் தமிழினப் பிள்ளைகளிடையே சாதியப் பிரிவினையை உண்டு பண்ணுகிற அரசியல் மேலாதிக்க சக்திகள்தான் இதற்கெல்லாம் காரணம்… இந்த திராவிடக் கட்சிகளின் தலைமை எதுவும் இங்கே ஒரு சாதிய வேரோ இங்கே ஓர் ஆழமான உறவு வேரோ இல்லாதவை! பள்ளரையும் பறையரையும் மோதவிட்டு, படையாட்சியையும் பறையரையும் மோதவிட்டு அரசியல் செய்தால்தான் இவர்கள் பிழைப்பு நடத்த முடியும்… நான் முதலமைச்சரானால், “என்னப்பா.. இமானுவேல் நம்ம ஐயாப்பா. தேவரும் நம்ம ஐயாப்பா. ரெண்டு பேருமே நம்ம பாட்டன்யா. போய் அவங்கள சாமியா நெனச்சி கும்பிட்டு வாய்யா. நமக்குள்ள சண்டை போட்டுக்கிடறது பைத்தியக்காரத்தனமில்லையா. வாய்யா கிருஷ்ணசாமி, வாய்யா சேதுராமன் ரெண்டு பேரும் ஒண்ணா போய்க் கும்பிடுங்க. நானும் உங்களோட வரேன்” என்று சமாதானம் செய்து வைப்பேன்.” என்கிறார்.
“அப்படீன்னா இதுதான் மான்டிலாண்ணே? ஆமாண்டா, இதுக்குத்தான் ஊருக்குள்ள ஒரு ஆல் இன் ஆல் அழகுராஜா வேணுங்கிறது!”
அழகுராஜா தத்துவத்தின் படி வெட்டுன தேவரையும் வெட்டுப் பட்ட இமானுவேலையும் கும்பிட வைப்பாராம். மேலவளவு முருகேசனை தேவமார்கள் கும்பிடணும். அவரை வெட்டிய தேவர் சாதிவெறியர்கள் அம்புட்டுப் பேரையும் தாழ்த்தப்பட்டவர்கள் கும்பிடணும். இளவரசனை சின்னய்யா கும்பிடணும். காடு வெட்டி குருவுக்கு நத்தம் காலனியில கோயில் கட்டணும்.
“இவ்வளவு அருமையான திட்டம் அண்ணன் கையில் இருக்கையில தெக்கு வடக்கு தெரியாம நாம தவிச்சுகிட்டிருக்கோமே, அண்ணன் இப்பவே இதை செஞ்சு காட்டிரலாமே” என்று நீங்கள் நினைக்கலாம்.
செஞ்சிருவாரு. ஆனால் அதுக்கு முன்னாலே நீங்க ஒரு சின்ன வேலை செய்யணும்னு அண்ணன் சொல்லியிருக்காருல்ல, அதக் கவனிங்க. அண்ணனை நீங்க முதல்வராக்கணும். அப்பதான் அவரால சமாதானம் செய்து வைக்க முடியுமாம். தமிழனுக்கு தமிழுணர்வு வந்து அவன் ஓட்டுப் போட்டு, அண்ணன் தனிப்பெரும்பான்மை பெற்று முதல்வராகி அப்புறம்தான் சாதிச் சண்டையை நிறுத்தணும்னா, தமிழினம் எந்தக் காலத்திலயும் விடுதலை பெறவே முடியாது. அண்ணனை முதல்வராக்குறது தமிழுணர்வாளர்கள் பொறுப்பு. தேர்தல்ல நின்னாதான் முதல்வராக முடியுமா என்ன? அதிரடிப்படை -2 மாதிரி முதல்வன் -2 எடுக்கச் சொல்லி இயக்குநர் சங்கர் கிட்ட கேட்டுப் பாக்கலாமே.
செந்தில்
மலையைத் தூக்கி தோள்ல வையி. தூக்கி காட்டுறேன்
பழைய காமெடியா யாவகத்துக்கு வருதே! ஊர்க்காரங்கள்ட்ட காசு வசூல் பண்ணிட்டு, மலையைத் தூக்கி தோள்ல வையி. தூக்கி காட்டுறேன்னு சொல்வாரே செந்தில், அதே காமெடிதான். இது ரீமிக்ஸ்.
திராவிடக் கட்சிகளுக்கு இங்கே தமிழ்ச் சாதிய வேர் இல்லையாம். அந்த காரணத்தினாலதான் திராவிட இயக்கம் தமிழ்ச் சாதிகளை மோதவிடுதாம். இப்போ தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக வன்னியர்களையும், பிற ஆதிக்க சாதிகளையும் தூண்டுவது யார்? கருணாநிதியா, வைகோவா, விஜயகாந்தா, ஜெயலலிதாவா? வன்னியர், கவுண்டர், தேவர் என்று இங்கே தமிழ் வேர் உள்ள சாதிகள்தானே தாழ்த்தப்பட்ட மக்களை ஒடுக்குகிறார்கள். அது ஒடுக்குமுறை இல்லையாம், தமிழர்களுக்குள் மோதலாம்.
சீமான் கூறுவதற்கு நேர் எதிராகத்தான் இருக்கிறது எதார்த்தம். நேர் எதிராகத்தான் இருக்கிறது மக்கள் கருத்து. இங்கே வேரோ ஆள்பலமோ இல்லாத சாதிக்காரன் கட்சித் தலைவனாக இருந்தால்தான் ஓரளவு நடுநிலையாக இருப்பான் என்ற கருத்தின் அடிப்படையில்தான் எம்ஜியார், கருணாநிதி, ஜெயலலிதா போன்றோர் தமிழகத்தின் முதல்வர் பதவிக்கு கொண்டுவரப்படுகின்றனர். சீமானுக்கு புரியும் மொழியில் சொல்வதன்றால், “வன்னியத் தமிழனையோ, கவுண்டத் தமிழனையோ, தேவர்குலத் தமிழனையோ நம்ப முடியாது. வடுகர் கருணாநிதியை, மலையாளி எம்ஜியாரை, கன்னடத்து ஜெயாவை நம்பலாம்” என்று பெரும்பான்மைத் தமிழர்கள் கருதுகின்றனர். இது தாழ்த்தப்பட்ட மக்களின் கருத்து மட்டுமல்ல, வன்னியரைப் பள்ளி என்று ஏசும் கவுண்டர் முதல் தேவர், கள்ளர், நாடார் உள்ளிட்ட அனைத்து சாதிகளும் ஒருவரைப் பற்றி ஒருவர் வைத்திருக்கும் கருத்து இதுதான்.
மற்ற சாதிக்காரனை நம்ப முடியாது என்கிறான் ஒரு சாதித் தமிழன். சாதிய உணர்வின் பிச்சையில் தமிழன உணர்வுக்கு வாழ்வு கொடுக்கிறான் வேர் உள்ள சாதித் தமிழன். இப்பேற்பட்ட தமிழுணர்வுதான் புரட்சியை சாதிக்கும் என்கிறார் சீமான்.
இந்தக் கேவலமான நிலைமை குறித்து நமக்கு மகிழ்ச்சியோ, வருத்தமோ கிடையாது. கல்லானாலும் தமிழன் மிதிக்கும் கல்லாவேன், மரமானாலும் தமிழன் வெட்டும் மரமாவேன் என்பது நம் கொள்கையல்ல. அது இனவாதிகளின் கொள்கை. மதிப்பாகச் சொல்லிக் கொண்டால் – தமிழினவுணர்வு.
திராவிடக் கட்சிகளைச் சாடி விட்டு, சாதிய வேர் உள்ள தமிழர்களின் கட்சிகளுக்கு வருகிறார் சீமான். “ராமதாஸ் அய்யா கடந்த காங்கிரசு ஆட்சியில் ஈழப்படுகொலைகள் நடந்த போதே அதைக் கண்டித்து மத்திய அமைச்சரவையிலிருந்து விலகியிருந்தாலோ, அண்ணன் திருமாவளவன் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ்-திமுக கூட்டணியிலிருந்து விலகி தனித்து நின்றிருந்தாலோ நான் அவர்கள் பின்னால் நின்றிருப்பேன். நாம் தமிழர் கட்சியைத் தொடங்க வேண்டிய அவசியமே வந்திருக்காது”
கருணாநிதி ஈழத்தமிழருக்கு துரோகம் செய்தது கிடக்கட்டும், பச்சைத் தமிழ் இரத்தம் உடம்பில் ஓடும் ராமதாசும், திருமாவும் ஏன் பதவி விலகவில்லை? ஈழத் தமிழினத்தின் இனப்படுகொலைக்கு இவர்கள் இருவரும் துணை நின்றார்கள் என்பது சீமானின் முதல் குற்றச்சாட்டு. இந்தக் குற்றத்தின் உடன் விளைவாக நாம் தமிழர் என்றொரு கட்சியை துவக்க வேண்டிய சூழ்நிலையை உருவாக்கி விட்டார்கள் என்பது, அவர்கள் மீது சீமான் வைக்கும் இரண்டாவது குற்றச்சாட்டு.
முதல் குற்றம் முடிந்து விட்டது. இரண்டாவது குற்றத்தின் விளைவை நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.