திங்கள், 8 ஜூலை, 2013

காதலி குழந்தையுடன் காதலன் வீட்டில் சத்தியாகிரகம் !

வேலூர் மாவட்டம், ஆற்காடு அடுத்த காவனூர் அருகே புதுபுங்கனூர், பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் பாலனின் மகள் அனுராதா (20). இவரும் அதே ஊரை சேர்ந்த வாலிபர் பொன்முடியும் காதலித்தனர். நெருங்கி பழகியதில் அனுராதா கர்ப்பமானார். தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி காதலனிடம் கேட்டதற்கு பொன்முடி மறுத்து விட்டார். இதையடுத்து கடந்த டிசம்பர் 30ம் தேதி ராணிப்பேட்டை மகளிர் போலீசில் அனுராதா புகார் செய்தார். அதில், ‘தன்னை காதலன் பொன்முடி திருமணம் செய்ய மறுப்பதாகவும், இதற்கு அவரது பெற்றோர் கோவிந்தசாமி (60),  நவநீதம் (55), அண்ணன் ஜெகதீசன் (32) ஆகியோர் தான் காரணம் என குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து பொன்முடியின் பெற்றோரை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு வாலாஜா கோர்ட்டில் நடந்து வருகிறது.
இந்நிலையில் கடந்த மாதம் 28ம் தேதி அனுராதாவுக்கு, பெண் குழந்தை பிறந்தது. நேற்று முன்தினம் வக்கீலுடன், பொன்முடியின் வீட்டுக்கு அவர் சென்றார். வீடு பூட்டிக்கிடந்ததால் குழந்தையுடன், காதலன் வீட்டு முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். விசாரித்ததில் 2 மாதத்துக்கு முன்பு அவர்கள் சென்னை சென்று விட்டதாக தெரிவித்தனர். திடீரென பலத்த மழை பெய்யவே குழந்தையுடன் அனுராதா தவிப்பதை பார்த்த கிராம மக்கள், பொன்முடியின் வீட்டு பூட்டை உடைத்து உள்ளே தங்க வைத்தனர். நேற்று 2வது நாளாக தர்ணா தொடர்ந்தது.
அனுராதா கூறியதாவது: நானும், எங்கள் தெருவை சேர்ந்த பொன்முடியும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். அப்போது என்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கட்டாயப்படுத்தி உல்லாசமாக இருந்தார். திருமணம் செய்து கொள்ளும்படி காதலனிடம் வற்புறுத்தினேன். அதற்கு தனது பெற்றோர் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறி என்னிடம் பேசுவதை தவிர்த்தார். இந்நிலையில் எனக்கும், செய்யாறு அடுத்த அழிவிடை தாங்கி கிராமத்தை சேர்ந்த விஜயராகவன் என்பவருக்கும் கடந்த ஆண்டு டிசம்பர் 3ம் தேதி எனது தாயார் திருமணம் செய்து வைத்தார். திருமணமான 5 நாட்களில் 3 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. அதனால் விஜயராகவன் எனது தாயாருடன் என்னை அனுப்பி விட்டார்.
இதையடுத்து, காதலன் பொன்முடியிடம் சென்று எனது கர்ப்பத்துக்கு நீதான் காரணம் எனக்கூறி திருமணம் செய்து கொள்ளும்படி மீண்டும் வற்புறுத்தினேன். மறுத்ததால் போலீசில் புகார் செய்தேன். எனது தாயாரும் என்னை ஒதுக்கி வைத்துள்ள நிலையில் பொன்முடிதான் வாழ்க்கை தர வேண்டும். என்னையும் குழந்தையையும் பொன்முடி ஏற்றுக்கொள்ளும்வரை இங்கிருந்து செல்ல மாட்டேன்Õ என்றார்.

கருத்துகள் இல்லை: