ஞாயிறு, 7 ஜூலை, 2013

தேர்தல் அறிக்கையில் சேது சமுத்திர திட்டம் வெளியிட்ட அ.தி.மு.க ! தற்போது சேது சமுத்திர திட்டம் கூடாது எனபது ஏன்?

திருவாரூர்: ""சேது சமுத்திரத் திட்டத்துக்காக, என்னையும் அழித்துக் கொள்ள தயாராக இருக்கின்றேன்,'' என, திருவாரூரில் நடந்த பொதுக்கூட்டத்தில், தி.மு.க., தலைவர் கருணாநிதி ஆவேசமாக பேசினார்.திருவாரூர் தெற்கு வீதியில், கருணாநிதியின், 90வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் மற்றும் லோக்சபா தேர்தல் நிதியளிப்பு விழா நேற்று நடந்தது. மாவட்டச் செயலாளர் கலைவாணன் தலைமை வகித்தார்.தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசியதாவது:
சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றினால், தூத்துக்குடி துவங்கி வேதாரண்யம், கடலூர் துறைமுகம் வரை, விரிவடைந்து, நம்முடைய வணிகம் முழுவதும் பரவிடும். உலக தொடர்பு தமிழகத்துக்கு இன்னும் அதிகமாக கிடக்கும். அந்நிய செலவாணி மேலும் அதிகரிக்கும்.இலங்கையைச் சுற்றிக் கொண்டு நடக்கும் கடற்பயணம், செல்கின்ற கப்பல்கள், சேது சமுத்திர திட்டம் நிறைவேறினால், அவ்வளவு தொலைவு செல்லாமல், தூரமும், செலவும் குறைவாகும்.சேது சமுத்திர கால்வாய் திட்டம் வந்தே தீர வேண்டும் என்பது அண்ணாதுரை கனவு, ஈ.வே.ரா., கனவு, என் அருமை நண்பர், ஆருயிர் நண்பர் எம்.ஜி.ஆர்., கண்ட கனவு. இவர்கள் கனவு குறித்து சட்டசபையில் விளக்கமாக பேசியிருக்கிறேன்அண்ணாதுரை எடுத்துக்கூறி, தி.மு.க., தேர்தல் அறிக்கையில் வெளியிட்டது. அ.தி.மு.க., எனப்படும் ஜெயலலிதாவின் கட்சியும் வெளியிட்ட தேர்தல் அறிக்கையிலும் வெளியிடப்பட்டது.


தற்போது அதை அவர்களே மறந்துவிட்டு, சேது சமுத்திர திட்டம் நிறைவேறக்கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் தடை கோருகின்றனர். தமிழர்களுக்காக வாழும், தி.மு.க.,வினை அறவே தோற்கடிக்காமல் இருந்திருந்தால், இந்நேரம், சேது சமுத்திரத் திட்டம் நிறைவேறி இருக்கும்.எனக்காக, கொட்டும் மழையிலும் கூடியிருக்கும் பல்லாயிரக்கணக்கான சொந்த தம்பிகள், தாய், தந்தையருக்கு, நான் மண்ணின் மைந்தராக அல்ல. மரத்தின் கிளையாக மட்டும் அல்ல. தனி மரமாக இல்லை. மரத்தின் வேராக இருந்து, சேது திட்டத்துக்காக என்னையும் நான் அழித்துக் கொள்ள தயாராக இருக்கிறேன். சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற போர் முழக்கம் ஒலித்துக் கொண்டே இருக்கும்.இவ்வாறு கருணாநிதி பேசினார்.

*கொட்டிய மழை:

இரவு 7 மணிக்கு கூட்டம் துவங்கியது. மகளிரணிச்செயலாளர் புதுகை விஜயா, முன்னாள் அமைச்சர்கள் மதிவாணன், வேலு ஆகியோர் பேசினர். அப்போது திடீரென மழை கொட்ட துவங்கியது.கூட்டம் கலைய துவங்கியதால், உடனடியாக கருணாநிதி தன் பேச்சை துவக்கினார். மழை பெய்ததால், "உற்சாக'மடைந்த உடன்பிறப்புகள், மேடையின் முன்புறம் வந்து சத்தம் எழுப்பிக் கொண்டே இருந்தனர்.இதனால், பேரூரை நிகழ்த்த வேண்டிய கருணாநிதி, தன் பேச்சின் இறுதியில் அவரே, தன் "சிற்றுரை'யை முடித்துக் கொள்வதாகக்கூறி பேச்சை முடித்தார்.திருவாரூர் மாவட்டம் சார்பில், கருணாநிதியிடம், ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் முதல் கட்ட தேர்தல் நிதி வழங்கப்பட்டது.


பொதுமக்கள் பணியில் மகத்தான பணி வறுமையை ஒழிப்பதாகும்: கருணாநிதி : திருவாரூர் அருகே காட்டூரில் நேற்று காலை, 11 மணியளவில், தி.மு.க., தலைவர் கருணாநிதி, தன் தாய் அஞ்சுகத்தம்மாள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.அதைத்தொடர்ந்து, திருவாரூர் மாவட்ட, தி.மு.க., சார்பில், ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:கட்சியின் நிகழ்ச்சிகள் எதுவாயினும், அத்துடன் சேர்த்து துணை நிகழ்ச்சியாக நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி இணைக்கப் பெற்று, சாதராண சாமானிய மக்களுக்கு உதவிகளை வழங்குவது மகிழ்ச்சியளிக்கிறது.நாடு சுதந்திரம் பெற்ற பிறகும், ஆங்காங்கே உள்ள ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை அறிவித்தும், செயல்படுத்தியும், வழங்கியும் மக்களை காப்பாற்ற அதற்கான பணியினை தொடர்ந்து செய்ய வேண்டிய கடமை நமக்கு உள்ளது.இந்தக் கடமையினை மத்திய அரசாக இருந்தாலும், மாநில அரசாக இருந்தாலும் அல்லது எதிர்க்கட்சியாக இருந்தாலும், அனைவரும் கடமையினை செய்ய வேண்டியுள்ளது. இன்று பல கோடி பேர், வேலை இல்லாமல் இருந்து வருகின்றனர். மக்கள் பணியில் மகத்தான முதன்மையான பணி வறுமையை ஒழிப்பதாகும்.அதன்படி, உங்களை சந்திப்பது மட்டுமில்லாமல், உங்களுக்கு ஏதாவது பலன் கிடைக்க வேண்டும் என்று இந்த விழா நடக்கிறது. இது போன்று விழா மீண்டும், மீண்டும் நடக்க வேண்டும்.இவ்வாறு கருணாநிதி பேசினார்.

கருத்துகள் இல்லை: