வெள்ளி, 12 ஜூலை, 2013

ஆந்திராவை மூன்று மாநிலங்களாக பிரிக்க மத்திய அரசு முடிவு ! தெலுங்கானா , ராயசீலிமா, ஆந்திரா !

புதுடில்லி: "தெலுங்கானா' என்ற பெயரில், புதிய மாநிலம்
உருவாக்கப்படுவதற்காக, ஆந்திராவை, மூன்று மாநிலங்களாகப் பிரிக்க, காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இதற்கான முடிவு, இன்று நடைபெற உள்ள, அக்கட்சியின் உயர்மட்டக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட உள்ளது. ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களுடன், ராயலசீமாவும் தனி மாநிலமாக உருவாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்ட போது, கடந்த, 1956ம் ஆண்டு, சென்னை மாகாணத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்த ஆந்திராவின் பல பகுதிகள், ஒருங்கிணைக்கப்பட்டு, ஆந்திர பிரதேசமாக உருவானது.நீண்ட கால போராட்டம்:
அதற்கான ஏற்பாடுகளை செய்த, அப்போதைய ஐதராபாத் நிஜாம், தெலுங்கானா பகுதி மக்களின் எதிர்ப்பையும் மீறி, அந்தப் பகுதியையும் ஒருங்கிணைந்த ஆந்திர பிரதேசமாக அறிவித்து விட்டார். அப்போது துவங்கிய பிரச்னை, இப்போது வரை, 60 ஆண்டுகளாக கொழுந்து விட்டெரிந்த வண்ணமாகவே உள்ளது.
மத்தியில் ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு அரசுகளும், தெலுங்கானா மாநிலம் அமைப்போம் என உறுதியளித்து, ஆட்சிக்கு வந்ததும், அந்தக் கோரிக்கையை புறந்தள்ளி விடுவதால், அப்பகுதி மக்கள், தாங்கள் தொடர்ந்து ஏமாற்றப்படுவதாக உணர்கின்றனர். இப்போது ஆந்திரா என அழைக்கப்படும் மாநிலத்தில், மூன்று முக்கிய பகுதிகள் உள்ளன. தெலுங்கானா, கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமா ஆகிய பகுதிகள் இணைந்து தான் ஆந்திராவாக உள்ளன. இதில், "திரிலிங்கா' என்ற வார்த்தையே, "தெலுங்கானா' என மருவிவிட்டது எனக் கூறும், தெலுங்கானா மக்கள், தங்கள் பகுதியின் காவல் தெய்வங்களாக, மூன்று லிங்கங்களான, காலேஷ்வரம், ஸ்ரீசைலம் மற்றும் தாரக்ஷாரமா ஆகிய சிவன் கோவில்களைக் குறிப்பிடுகின்றனர் தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டால், அதில், இப்போதைய தலைநகர் ஐதராபாத்தின் பெரும் பகுதி, அடிலாபாத், கம்மம், கரீம் நகர், மகபூப் நகர், மேடக், நல்கொண்டா, நிஜாமாபாத், ரங்காரெட்டி, வாரங்கல் ஆகிய, 10 மாவட்டங்கள் அப்பகுதியில் அமையும். கடந்த, 2009ம் ஆண்டு, மிகப் பெரிய போராட்டம் வெடித்தது. அதையடுத்து, டிசம்பர் மாதம், தெலுங்கானா மாநிலம் அமைக்கப்படும் என, மத்திய அரசு உறுதியளித்தது. தெலுங்கானா பகுதி மக்கள் போராட்டத்தை விலக்கிக் கொண்டனர்; ஆனால், பிற பகுதியினர் போராட்டத்தில் ஈடுபட்டதால், தெலுங்கானா மாநில கனவு இன்னமும் நிறைவேறாமல் உள்ளது.சமீப காலமாக, தெலுங்கானா மாநில போராட்டம் மீண்டும் வலுத்துள்ளதால், ஆந்திராவை, ஆந்திரா, தெலுங்கானா, ராயலசீமா என, மூன்றாகப் பிரித்து, பிரச்னைக்கு தீர்வு காணலாம் என, காங்கிரஸ் தலைமையிலான, மத்தியில் ஆளும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முடிவு செய்துள்ளது. அரசியல் சட்டத்தை திருத்தினால் மட்டுமே, இது போன்ற மாநில பிரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்பதால், மிகவும் கவனமாக இந்த விஷயத்தை மத்திய அரசு கையாளுகிறது. தெலுங்கானா மாநிலம் ஏற்படுத்துவது தொடர்பாக, காங்கிரஸ் உயர்மட்டக் குழு இன்று கூடி, முக்கிய முடிவு எடுக்க உள்ளதாக, அக்கட்சியின் பொதுச் செயலர்களில் ஒருவரான, திக்விஜய் சிங் நேற்று கூறினார்.
காங்., ஆலோசனை:
டில்லியில் நேற்று, பத்திரிகை யாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: ஆந்திராவைப் பிரித்து, தனித் தெலுங்கானா மாநிலம் உருவாக்குவதற்கான ஏற்பாடுகள், முழு வீச்சில் நடந்து வருகின்றன. இறுதி முடிவு எடுப்பதற்கான, காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டக்குழு கூட்டம், டில்லியில் நாளை (இன்று) நடக்கிறது. அந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் பற்றி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகளின் தலைவர்களுடன் கலந்தாலோசிக்கப்படும்; பின், எதிர்க்கட்சித் தலைவர்களுடனும் ஆலோசனை செய்யப்படும். ஏனெனில், அரசியல் சட்டத்தை திருத்த வேண்டிய அவசியம் உள்ளதால், எதிர்க்கட்சிகளின் ஆதரவும், ஒருமித்த கருத்தும் அவசியம். எந்த மாதிரியான முடிவு எடுக்கப்படும் என்பது குறித்து, இப்போது நான் எதையும் கூற முடியாது. இவ்வாறு, திக்விஜய் சிங் கூறினார். தெலுங்கானாவுக்கு இன்றைய கூட்டத்தில் பச்சைக்கொடி காட்டப்படுமானால், ராயலசீமா என்ற பெயரில் புதிய மாநிலம் உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுப்படும். ஒருங்கிணைந்த ஆந்திரா, மூன்று மாநிலங்களாக உடைபடும். dinamalar.com

கருத்துகள் இல்லை: