வெள்ளி, 13 ஏப்ரல், 2012

Indian Railway பயணிகள் முதலாளிகளா – கோமாளிகளா – ஏமாளிகளா ?


சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே பட்ஜெட்டில், 9 ஆண்டுகளுக்கு பிறகு பயணிகளின் ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டது. 150 கி.மீ மேல், கி.மீ. ஒன்றுக்கு  இரண்டாம் வகுப்பு கட்டணம் ஐந்து பைசாவும், ஏ.சி சேர் கார் கட்டணம் பத்து பைசாவும், மற்றும் முதல் வகுப்பு, ஏ.சி கட்டணமும் உயர்த்தப்பட்டன. பயணிகளின் ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு வலுத்ததலால் (உபயம்: மம்தா), ரயில்வே அமைச்சர் ராஜினாமா செய்ய நிர்பந்திக்கப்பட்டு, புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சர் மூலமாக, முதல் மற்றும் ஏ.சி வகுப்பு கட்டணங்களை தவிர்த்து, மற்ற கட்டண உயர்வுகள் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
சராசரி மக்கள் இந்த ரயில் கட்டண உயர்வால் மிகவும் பாதிக்கப்படுவார்கள் என்று தங்கள் மாநிலத்தில் பால் மற்றும் பஸ் கட்டணத்தை உயர்த்திய ஜெயலலிதாவும் மம்தாவும் கண்டித்ததுதான் வேடிக்கை கலந்த வேதனை.
ஏதோ, ரயில்வே நிர்வாகமே நஷ்டத்தில் இயங்குகிறது என்றும், அதை சரிகட்டுவதற்கு, இந்தக் கட்டண உயர்வு அவசியம் என்று நியாயப்படுத்துவது எந்த விதத்தில் உண்மை என்பதை ரயில்வே அமைச்சர் வெளியிட்ட வரவு-செலவு பட்ஜெட் கணக்கைக் கொண்டே நாம் முடிவு செய்யலாம். அந்த அறிக்கையில், ரயில்வே நிர்வாகத்தின் 2011-12 வருடத்தில், மொத்த வருமானம் ரு. 106647 கோடி என்றும், செலவு போக நிகர வருமானம் ரு. 9610 கோடி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போற்றுவோர் போற்றட்டும்; தூற்றுவோர் தூற்றட்டும்; போகட்டும் கண்ணனுக்கே என்பது போல், ஏற்றுவோர் ஏற்றட்டும்; கண்டிப்போர் கண்டிக்கட்டும்; அவஸ்தை எல்லாம் மக்களுக்குத்தான். அது பயணிகள் கட்டணமாகட்டும், சரக்கு கட்டணமாகட்டும், விழுவது மக்கள் தலையில்தான், வீழ்வதும் மக்கள்தான். ஆனால்,  இலவசமாகவும், சலுகைகளாகவும் (அதாங்க ஒசியில்)  பயணம் செய்பவர்களுக்கு, இந்த உயர்வுகளால் எவ்வித நஷ்டமுமில்லை..  அவஸ்தையுமில்லை. ஓசியில் பயணம் செய்கிறவர்கள்தான், காசுக் கொடுத்து பயணம் செய்யும் மக்களின் சுமையைக் கட்டண உயர்வின் மூலம், மேலும் கூட்டுவதுதான் கொடுமையிலும் கொடுமை.
உண்ண உணவு, இருக்க இடம், உடுக்க உடை போன்ற மனிதனின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்திச் செய்ய வேண்டிய முக்கியமான பொறுப்பிலிருக்கும் இந்த நாட்டை ஆள்பவர்களுக்கும், அதன் அதிகாரிகளுக்கும், ஏன் அரசாங்க உத்தியோகத்திலிருக்கும் அனைவருக்கும், தங்கள் சம்பளத்தை தவிர கிடைக்கின்ற இலவசங்களும், சலுகைகளும் (கிம்பளம் அல்ல) எண்ணிலடாங்கா. உதாரணத்துக்கு, நமது ஜனாதிபதி திருமதி, பிரதீபா பாட்டில், பதவியேற்ற பின் இந்த நான்கரை ஆண்டுகளில், 22 நாடுகளுக்கு (மொத்தம் 79 நாட்கள்), தன் குடும்பத்தினருடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டதற்காக செலவிடப்பட்ட தொகை வெறும் ரு.205 கோடி தான். இன்னும் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் வேறு பாக்கியுள்ளதாம். இவர், மற்ற முன்னாள் ஜனாதிபதிகளைக் காட்டிலும் நாள்கள் மட்டுமல்ல, நாடுகள் மட்டுமல்ல.. செலவையும் அதிகப்படுத்தி சாதனைச் செய்துள்ளார். இந்த சுற்றுப்பயணங்களெல்லாம் நாட்டு நலனுக்காக மேற்கொள்ளப்பட்டது என்பதை நம்பித்தான் ஆக வேண்டும்.
ரயில்வே துறையில் பணியில் உள்ளவர்களுக்கும், அவர் தம் குடும்பத்துக்கும், எந்த இடத்துக்கும், எப்போது வேண்டுமானாலும், ரயிலில் இலவசமாகச் சென்று வர சலுகைக் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் அரசாங்க ஊழியர்கள் அனைவருக்கும், வருடத்துக்கு ஒரு முறை LTA  எனப்படும் பயண விடுப்பு என்ற சலுகையும் வழங்கப்படுகிறது.  இவையனைத்தும் சம்பளம் போக மேற்கொண்டு வழங்கப்பட்ட சலுகைகள். இதன் மூலமாக கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்படுவதாக ஒரு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டுக்காகவும், அரசாங்கத்துக்காகவும் இவர்கள் உழைப்பதால் (?), இந்த சலுகைகளும் இலவசங்களும், இவர்களுக்கு தரப்படுகின்றன. சரி, உழைப்பதற்கு சம்பளம்தானே தர வேண்டும். சலுகைகளும் இலவசங்களும் தரப்பட வேண்டிய அவசியம் என்ன? இவர்கள் மட்டும்தான் நாட்டுக்காக உழைக்கின்றார்களா? மக்கள் வரிப் பணத்தில்தான் ஒரு அரசாங்கமே இயங்குகிறது. வரிப்பணம் கட்டுபவர்களுக்கு எந்த சலுகைகளும் இலவசங்களும் இல்லை. மாறாக, வரியைப் போடுபவர்களுக்கும் வரியை கட்டாமல் ஏய்ப்பவர்களுக்கும்தான் சலுகைகளும் இலவசங்களும் வாரி வழங்கப்படுகின்றன.
ஒரு மளிகைக்கடையில் வேலைச் செய்யும் ஊழியருக்கு, அதன் உரிமையாளர், அந்த ஊழியரின் உழைப்புக்கு ஈடாக சம்பளத்தை தவிர, அவருடைய குடும்பத்துக்கு மாதந்தோறும், மளிகைப் பொருள்களை இலவசமாகத் தருவாரா? நகைக்கடையில் பணிப்புரியும் ஊழியர்கள், வருடம் ஒரு முறை, போனஸாக, இலவசமாக தங்க நாணயங்கள் தங்களுக்கு பரிசாக கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியுமா?
உழுபவனுக்கு நிலம் சொந்தம் குடியிருப்பவர்க்கு வீடு சொந்தம் என்பது போல், இந்த நாட்டை ஆள்பவர்களுக்கும், அதன் ஊழியர்களுக்கும்தான் இந்த நாடு சொந்தம் போலும். ஜனநாயகத்தின் முதலாளிகளாக இருக்க வேண்டிய மக்கள், இப்படி கோமாளிகளாகவும், ஏமாளிகளாகவும் இருப்பதற்கு யார் காரணம்?
0
இந்திரஜித்

கருத்துகள் இல்லை: