திருச்சியில் முன்னால் அமைச்சர் K.N.நேருவின் தம்பி ராமஜெயம் கடந்த 29.03.2012 அன்று மர்மமான முறையில் கொல்லப்பட்டார்.!
கடந்த தி.மு.க ஆட்சியில் தனது அண்ணன் K.N.நேருவின் அனைத்து அரசுத்துறை, கட்சி சம்பந்தமான எல்லா பேரங்களுக்கும் இடைத்தரகராக இருந்தவர்தான் இந்த ராமஜயம். திடீர் பணக்கார அரசியல் ரவுடிகளின் பண்பான ரியல்எஸ்டேட், கல்குவாரி கான்ட்ராக்ட் , கடத்தல், கட்டப்பஞ்சாயத்து என சகல வழிகளிலும் சாம்ராஜ்யத்தை விரிவு படுத்தியதும், கோடிக்கணக்கில் சொத்து சேர்த்தும் இந்த வகையில்தான்.
நிலபேரங்கள், வீடு, ஹோட்டல்கள் இவரால் வளைக்கப் பட்டபோதும், கட்சியில் உள்ள பிணக்குகள்கூட இவர் தலையீடு இல்லாமல் முடிவது கிடையாது. தி.மு.க தலைவரின் வாரிசுகள் வரும் போதும் போகும் போதும் தி.மு.கவின் தலைமையின் தனி கவனத்தை ஈக்கும்படி செயல்பட்டதுடன் தனது உறவுக்காரர் நெப்போலியனையே ஓரங்கட்டியதும் இந்த வகையில்தான்.திருச்சியில் சாதாரண ஏர்செல் நிறுவனத்தின் ஏஜண்டாக செயல்பட்ட(Managing Director) காரணத்தால் M D என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்டார். அண்ணன் அமைச்சர் என்பதால் அரசு அதிகாரிகள் , நில உரிமையாளர்கள், என சகல பிரிவினரையும் மிரட்டி காரியம் சாதித்தனர். இதனால்தான் அமைச்சரின் இலாக்காவில் உள்ள வேலை வாய்ப்புகளுக்கு ஒரு தொகை நிர்ணயித்து வசுலித்தும், குவாரி கான்ட்ராக்ட் முதல் ரியல் எஸ்டேட் வரை, ‘ஜனனி’ மினரல்ஸ், ‘கேர் காலேஜ்’ என தனது சாம்ராஜ்ஜியத்தை சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேஷியா, தென் ஆப்ரிக்கா என பரந்து விரிந்த வர்த்தக தொடர்பு மூலமாகவும் பல ஆயிரம் கோடிக்கு அதிபதியாகவும் மாறினார்.
இந்த காலகட்டத்தில் தான் திருச்சியில் 2007-ல் நில அதிபர் துரைராஜ் காரில் உயிரோடு எரித்து கொன்ற வழக்கிலும் , அதே நிலத்தில் தங்கராஜ் என்பவர் தற்கொலை செய்து கொண்டதிலும் , ராஜெயத்தின் தலையீடு உள்ளதாக காவல்துறை சந்தேகித்தது. ‘கலைஞர் அறிவாலயம்’ , காஞ்சனா பிளாசா, மாயாஸ் ஹோட்டல், பிரபல SRM மருத்துவக்கல்லூரி(‘பாரிவேந்தர் பச்சைமுத்து உடையார்’) கட்டுவது உள்ளிட்ட பிரச்சனையில் மிரட்டப்பட்டதும் திருச்சி மக்கள் அறிந்தது தான். நில அபகரிப்பு நடந்ததாக சில வழக்குகள் தற்சமயம் பதிவு செய்து விசாரிக்க பட்டுவந்தது.
ஆளும் அ.தி.மு.க தலைவி ஜெயலலிதா சட்டமன்ற தேர்தலின் போது வாக்கு சேகரிக்க சென்ற இடமெல்லாம் தி.மு.க அமைச்சர்களை விட ராமஜயத்தை கடுமையாக விமர்சித்தார். திருச்சியில் வாக்கு கேட்டபோது திருச்சியை ‘இந்த கொள்ளை கும்பலிடமிருந்து மீட்க வாய்ப்பு தாருங்கள் ‘ என்று ஓட்டு கேட்டார். நேரு குடும்பத்தின் மீது அரசியலை தாண்டி எரிச்சலூடன் ஜெ அணுகுவதற்கு காரணம் ‘அழகிரி பாணி’ அரசியலில் ராமஜெயம் கைதேர்ந்தவர் என்பதுதான். வாகன விபத்தில் மரணமடைந்த சட்டமன்ற உறுப்பினரும், மற்றொரு தீடிர் பணக்கார அரசியல் ரவுடியுமான மரியம் பிச்சை இறப்பை திசைதிருப்பி K.N.நேரு குடும்பத்தினர் மீதும், தி.மு.க அலுவலகம் மீதும் அ.தி.மு.க குண்டர்கள் தாக்குதல் தொடுத்தது வாசகர்களுக்கு நினைவிருக்கும். இப்படி பலதரப்பினருக்கும் ஆளும் அ.தி.மு.கவுக்கும் தலைவலியாக கருதப்பட்ட ராமஜெயம் கடத்தி படுகொலை செய்யப்பட்டார் என்பது ஆச்சரியமல்ல !
மர்மங்கள் நிறைந்த அவரது வளர்ச்சி பாதை ஓட்டுபொறுக்கி அரசியலை ருசித்தவர்கள் வளரும் அதே பாதைதான். போலிசு – அதிகார வர்க்கம், நீதிமன்றங்கள் என அனைத்தும் இப்படிபட்ட திடீர் பணக்கார அரசியல் ரவுடிகளை உருவாக்கி கொண்டிருக்கிறது. மறுகாலனியாக்க சுழல் அவர்களின் வளர்ச்சிக்கு பெரிதும் வாய்ப்பை வளர்த்திருக்கிறது.
இவரது கொலை மர்மமாகவே நீடிக்கும் நிலையில் பத்திரிக்கைகளும், மக்களும் ஆளாளுக்கு ஓரு வகையில் பேசிக் கொண்டுள்ளனர். இன்று தூத்துக்குடி பெண் கவுன்சிலர் பிடிபட்டதாக செய்தி வந்துள்ளது.
கொலை எப்படி நடந்தது ! யார் செய்தார்கள் என்ற புலனாய்வுகள் ஒரு புறமிருக்கட்டும். தனது அண்ணனின் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி ரவுடி ராஜ்ஜியத்தை உருவாக்கி அதனுடன் தொழில் சாம்ராஜ்ஜியத்தை பலபடுத்திய புதிய பாணியிலான திடீர் அரசியல் ரவுடிதான் ராமஜயம்.
இவர்களது தாதா தனத்தால் பாதிக்கப்பட்டவர்களில் கீழ்நிலை மக்கள் மட்டுமல்லாமல் மேல்தட்டு பிரிவினரும் அடங்குவர். ரவுடிகளுக்கிடையிலான கோஷ்டி மோதலும் கூட உண்டு.
தருணத்திற்க்காக காத்திருந்த அதில் ஒருவர் தி.மு.க ஆட்சியை இழந்த தருணத்தில் வேலையை முடித்துள்ளார் என்பது மட்டும் அப்பட்டமான உண்மை.! தி.மு.க, அ.தி.மு.க இரு ஆட்சிக்காலங்களிலும் இத்தகைய அதிகார சண்டைகள் வழமையாக நடக்கும் ஒன்றுதான். அதே நேரம் இரு ஆட்சிகளிலும் இரு தரப்பு காண்ட்ராக்ட் முதலாளிகள் எதிர் தரப்பிற்கு கப்பம் கட்டி விட்டு தொழிலை செவ்வனே தொடர்வதும் வாடிக்கையான ஒன்றுதான். அதே நேரம் இதில் ஏகபோகமாக செயல்படுபவர்கள் மட்டும் எதிர்தரப்பு ஆட்சியின் போது சட்டபூர்வமாகவோ, சட்ட விரோதமாகவோ வேட்டையாடப்படுவார்கள்.
ஜெயா ஆட்சியில் தி.மு.க பிரமுகர்கள் மீது சொத்து குவிப்பு வழக்குகள், நில மோசடி வழக்குகள் என்று தீவிரமாக நடந்து வரும் வேளையில்தான் அது போதாது என்று ராமஜெயம் கொல்லப்பட்டிருக்கிறார். இந்த அரசியல் சூழ்நிலையில் குறிப்பிட்ட எதிர்தரப்பினர் பயன்படுத்திக் கொண்டு அவரை கொன்றிருக்கின்றனர். இதில் யார் கொன்றார்கள் என்பதை விட இத்தகைய கொலைகளுக்கும், கொள்ளைக்கும் காரணமான திடீர் பணக்கார அரசியல் ரவுடிகளை தோற்றுவிக்கும் அரசியல் – சமூக சூழ்நிலையைத்தான் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக