வியாழன், 12 ஏப்ரல், 2012

வனயுத்தம் வீரப்பன் படம் இடைக்கால தடைநக்கீரன் கோபால் தொடர்ந்த வழக்கில்,


நக்கீரன் கோபால் தொடர்ந்த வழக்கில், கன்னட நடிகர் ராஜ்குமாரை சந்தன கடத்தல் வீரப்பன் கடத்திய சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் 'வனயுத்தம்' என்ற தமிழ் படத்தையும், 'அட்டகாசம்' என்ற கன்னட படத்தையும் வெளியிடுவதற்கு சென்னை சிட்டி சிவில் கோர்ட்டு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை 17-வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டில் நக்கீரன் ஆசிரியர் கோபால் தாக்கல் செய்த மனுவில், "பல ஆண்டுகளாக வீரப்பனை பற்றி தவறான தகவல்கள் வெளியிடப்பட்டு வந்தன. அதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு, நிருபருடன் காட்டுக்குள் சென்று வீரப்பனைப் பற்றிய உண்மைத் தகவல்களை மக்களுக்கு கொடுத்தோம்.

ராஜ்குமார் மீட்பு

1997-ம் ஆண்டில் கர்நாடக மாநில வனத்துறை அதிகாரிகள் 9 பேரை வீரப்பன் கடத்திச் சென்றார். அவர்களை மீட்பதற்காக தமிழகம் மற்றும் கர்நாடக அரசுகளின் தூதராக சென்று அவர்களை உயிருடன் மீட்டேன்.

அதன்பிறகு பின்னர் 30.7.2000 அன்று நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்திச் சென்றார். அதிலும், இரு மாநில அரசுகள் வழங்கிய 10 நிபந்தனைகளின் அடிப்படையில், 5 முறை காட்டுக்குள் சென்று வீரப்பனை சந்தித்து பேசி, ராஜ்குமாரை மீட்டேன்.

மூலக்கதை

இந்த நிலையில் வீரப்பன் பற்றிய உண்மைத் தகவல்களை வெளியிடுவதாகக் கூறிக்கொண்டு, ஏ.எம்.ஆர்.ரமேஷ், வி.சீனிவாஸ், கே.ஜெகதீஷ் ஆகியோர் சினிமா படம் எடுக்கின்றனர். இந்த படத்தில் ராஜ்குமாரை வீரப்பன் கடத்திய சம்பவம்தான் மூலக்கதையாக உள்ளது என்று அந்த படத்தில் டிரைலர் காட்சிகளை பார்க்கும்போது தெரிகிறது.

ராஜ்குமார் கடத்தல் பற்றிய படம் என்பதால், அதில் தூதராகவும், பத்திரிகையாளராகவும் பணியாற்றிய என்னுடைய ஒரு கதாபாத்திரம் இல்லாமல் இருக்க முடியாது. ஆனால் படத்தைப் பற்றி என்னுடன் எந்தவொரு கருத்தையும் அவர்கள் கேட்கவில்லை.

விளக்கம் அளிக்காமல்

எனவே எனக்கு படத்தை காட்டாமல் திரையிடக் கூடாது என்று நோட்டீஸ் அனுப்பினேன். ஆனால் அதற்கு அவர்கள் செவிசாய்க்கவில்லை. எனவே இந்த படம் என்னுடைய வாழ்க்கை, பத்திரிகை தொழில், மக்கள் மத்தியில் உள்ள நற்பெயர் போன்றவற்றை குலைக்கும் விதத்தில் இருக்கும் என்று தெரிகிறது.

எனவே 'வனயுத்தம்' மற்றும் 'அட்டகாசம்' ஆகிய படங்களை வெளியிட தடை விதிக்க வேண்டும். இந்த படத்தில் என்னைப் பற்றிய கதாபாத்திரம் குறித்து விளக்கம் அளிக்காமலும், எனது அனுமதியை பெறாமலும் உள்ள நிலையிலும், எனது கதாபாத்திரம் நேரடியாகவோ, அல்லது மறைமுகமாகவோ இருக்கும் நிலையிலும், அந்தப் படங்களை வெளியிட தடை விதிக்க வேண்டும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

இடைக்காலத் தடை

இந்த மனுவை நீதிபதி கணேசமூர்த்தி விசாரித்தார். இந்த 2 சினிமா படங்களையும் வெளியிட ஏப்ரல் 17-ந் தேதி வரை இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் பதிலளிக்கும்படி இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் பிறப்பிக்க நீதிபதி உத்தரவிட்டார்

கருத்துகள் இல்லை: