ஏப். 11: "2 ஜி அலைக்கற்றை முறைகேடு தொடர்பான வழக்கில் தயாநிதி மாறனுக்கு எதிராகப் புகார் கூறிவிட்டு, இப்போது அதற்கு முரணாக சி.பி.ஐ.க்கு கடிதம் எழுதியது ஏன்?' என்று "டெலிகாம் வாட்ச் டாக்' என்ற சமூக அமைப்பை உச்ச நீதிமன்றம் கேள்வி கேட்டுள்ளது.
இது தொடர்பாக ஒரு வாரத்தில் பதில் அளிக்கவேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. "2ஜி அலைக்கற்றை' முறைகேடு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, கே.எஸ். பணிக்கர் ராதாகிருஷ்ணன் கொண்ட அமர்வு முன் விசாரணை நடந்தது. இந்த வழக்கில் "பொதுநல வழக்கு மையம்' (சென்டர் ஃபார் பப்ளிக் இன்ட்ரெஸ்ட் லிட்டிகேஷன்) என்ற அமைப்பின் சார்பில் மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் ஆஜர் ஆனார். "தயாநிதி மாறன் அமைச்சராக இருந்தபோது, தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளார்.
அத்துடன், இந்த வழக்கு தொடர்பாக மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தை விசாரிக்க வேண்டும்' என்று அவர் மனு தாக்கல் செய்திருந்தார். அத்துடன், "டெலிகாம் வாட்ச் டாக்' என்ற அமைப்பு சார்பிலும் பத்திரிகையாளர் பரஞ்சாய் குஹா தாகூர்த்தா சார்பிலும் பிரசாந்த் பூஷண் ஆஜரானார். இவை தொடர்பான வழக்குகளில் சி.பி.ஐ. சார்பில் வழக்குரைஞர் கே.கே. வேணுகோபால் ஆஜரானார். அவரது வாதம்: ""இந்த வழக்கில் பிரசாந்த் பூஷண் ஆஜராகியுள்ள டெலிகாம் வாட்ச் டாக் அமைப்பின் செயலர் அனில் குமார் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், தயாநிதி மாறன் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்தபோது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார். ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்கும்படி ஏர்செல் நிறுவனர் சிவசங்கரனுக்கு தயாநிதி நெருக்கடி கொடுத்தார் என்று அனில்குமார் தனது மனுவில் கூறியுள்ளார். ஆனால், அவரே சி.பி.ஐ. அலுவலகத்துக்கு பிப்ரவரி 5ம் தேதி அனுப்பிய கடிதத்தில், அதற்கு முரணான கருத்தைத் தெரிவித்துள்ளார். தயாநிதி மாறனுக்கு எதிராக ஒரு வார இதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் புகார் அளித்ததாகவும், உள்நோக்கத்துடன் மாறனுக்கு எதிராக சிவசங்கரன் புகார் கூறியுள்ளதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், தயாநிதிக்கு எதிரான வழக்கைத் திரும்பப் பெறலாம் என முடிவு செய்துள்ளதாகக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள அனில் குமார், வழக்கில் சிவசங்கரனையே எதிரியாகச் சேர்க்கலாம் என்பதையும் கூறியுள்ளார். ஒரு வழக்கு நீதிமன்றத்தில் உள்ளபோது, புகார் கொடுத்த நபர் திடீரென்று அதற்கு மாறான கருத்தை எப்படிக் கூறலாம்? இதனால், அனில் குமாரின் நம்பகத் தன்மை மீது சி.பி.ஐ.க்கு சந்தேகம் தோன்றுகிறது'' என்று கே.கே. வேணுகோபால் வாதிட்டார். ""அது மட்டுமின்றி, வழக்கில் ஆஜராகும் பிரசாந்த் பூஷண் மேலும் இரு மனு தாரர்களுக்காக வாதாடுகிறார். அவர்கள் கூறும் புகார்களின் நம்பகத் தன்மை குறித்தும் சந்தேகம் எழுகிறது'' என்றார் வேணுகோபால். இதைக் கேட்ட நீதிபதிகள், இது குறித்து ஒரு வாரத்தில் விளக்கம் அளிக்க அனில்குமாருக்கு நோட்டீஸ் பிறப்பிக்க உத்தரவிட்டனர். ""அனில் குமார் எந்தச் சூழலில் சி.பி.ஐ.க்கு கடிதம் எழுதினார் என்றும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவுக்கு முரணாகக் கடிதம் எழுதவேண்டிய நிர்பந்தம் என்ன என்பதையும் அவர் ஒரு வாரத்தில் நீதிமன்றத்துக்குத் தெரிவிக்கவேண்டும்'' என்று உத்தரவிட்டனர். இதையடுத்து, விசாரணையை வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக