சனி, 14 ஏப்ரல், 2012

மமதாவை விமர்சித்து facebookகில் கார்ட்டூன்: பேராசிரியர், உறவினர் கைது


கொல்கத்தா: மேற்கு வங்க மாநில முதல்வர் மமதா பானர்ஜியின் கொள்கைகளை விமர்சித்து பேஸ்புக் தளத்தில் கேலிச்சித்திரங்களைப் வெளியிட்டதற்காக ஜாதவ்பூர் பல்கலைக் கழகப் பேராசிரியர் அம்பிகேஷ் மகாபத்ரா மற்றும் அவரது உறவினர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்..
ஜாதவ்பூர் பல்கலைக் கழகத்தில் வேதியியல் துறைப் பேராசிரியராகப் பணியாற்றி வருபவர் அம்பிகேஷ். அரசின் கொள்கைகளை விமர்சித்து கேலிச்சித்தரங்களை போட்டுத் தள்ளியதுடன் தமது பேஸ்புக் பக்கத்திலும் உலவ விட்டுள்ளார்.
குறிப்பாக தினேஷ் திரிவேதியை ரயில்வே அமைச்சர் பொறுப்பிலிருந்து நீக்கிவிட்டு முகுல்ராயை நியமித்த விவகாரத்தை மையமாக வைத்தே இந்த கேலிச்சித்திரம் வரையப்பட்டிருந்தது.

மொத்தம் 65 பேருக்கு இந்த கேலிச்சித்திரங்களை பரவவிட்டார் என்பது அம்பிகேஷ் மீதான புகாரில் ஒன்று. இதையடுத்து மமதா பானர்ஜியை இழிவுபடுத்தி கேலிச்சித்திரத்தை வரைந்து பரவவிட்டதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்து சிறையிலடைத்துள்ளார் மமதா பானர்ஜி.

அம்பிகேஷுடன் அவரது உறவினரான சுப்ரதா சென்குப்தாவையும் போலீஸ் கைது செய்துள்ளது.

முன்னதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் அம்பிகேஷ் வீடு மீது வியாழக்கிழமை இரவு தாக்குதல் நடத்தியிருந்தனர்.

கடும் எதிர்ப்பு

அம்பிகேஷ் மகாபாத்ராவுக்கு தமது கருத்துகளை தெரிவிக்க உரிமை இருப்பதால் கேலிச்சித்திரங்களை வெளியிட்டதில் தவறு இல்லை என்கின்றனர் ஜாதவ்பூர் பல்கலைக் கழக மாணவர்களும் பேராசிரியர்களும்.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது மேற்கு வங்க மாநில அறிவுஜீவிகள் மமதாவை ஆதரித்திருந்தனர். ஆனால் அதே சமூகம் மமதாவின் வெறுப்பேற்றுகிற ஒவ்வொரு நடவடிக்கையாலும் கடுப்பாகிக் கிடக்கிறது

கருத்துகள் இல்லை: