சனி, 14 ஏப்ரல், 2012

சுப்பிரமணிய சுவாமி+அ.தி.மு.க+BJP

உச்சநீதிமன்றம் சென்ற சுப்பிரமணிய சுவாமிக்கு உறுதுணையாக நின்றது பி.ஜே.பி.யோடு அ.தி.மு.கழகம்

சேது சமுத்திரத் திட்டம் தமிழ் மண்ணின் 150 ஆண்டுகாலக் கனவு. அந்தத் திட்டம் செயல் படுத்தப்பட வேண்டும் என்று அவ்வப்போது தமிழக அரசியல் களம் சூடேறியிருக்கிறது. திராவிட இயக்கம் தோன்றிய பின்னர் அந்தத் திட்டம் மீண்டும் உயிர் பெற்றது.
திராவிட முன்னேற்றக் கழகம் பிறந்தது. சேது சமுத்திரத் திட் டத்தை அண்ணா லட்சிய முழக்க மாக்கினார். சேலம் இரும்பாலை, நெய்வேலி நிலக்கரி, தூத்துக்குடி துறைமுகம் என்று அவர் முன் வைத்த முழக்கங்களெல்லாம் செயல்வடிவம் பெற்றுவிட்டன. சேது சமுத்திரத் திட்டம் மட்டும் இன்னும் நிறைவேறவில்லை.
அண்ணாவிற்குப் பின்னால் கலைஞரும், அண்ணாவின் பெயரால் கழகம் கண்ட அமரர் எம்.ஜி.ஆரும் சேதுசமுத்திரத் திட்டத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். மைய அரசில் இடம் பெறும் வாய்ப் புக் கிடைத்ததும் சேது சமுத்திரத் திட்டத்தைச் செயல்படுத்த கலைஞர் பெரும் முயற்சி எடுத்தார். அந்த முயற்சியில் வெற்றிபெற்றார். சேது சமுத்திரத் திட்டத்தைச் செயல் படுத்த மைய அரசு முன்வந்தது. அப்போது பொறாமை உள்ளங்கள் பொசுங்கிப் போயின.
இந்தத் திட்டத்தை தொ டர்ந்து இலங்கை  அரசு எதிர்த்து வந்தது. இந்தத் திட்டம் செயல்பட் டால் கொழும்பு துறைமுகத்தின் மகிமை போய்விடும். பெரும் பொரு ளாதாரப் பாதிப்பு ஏற்படும் என்று அந்த அரசு பிரதமர் நேருவிடமே முறையிட்டது.

அரபிக்கடல் வழியாக வரும் கப்பல்களும், இந்தியாவின் மேற்குக்கரையிலிருந்து கிழக்குக் கரைக்கு வரும் கப்பல்களும் தற்போது இலங்கையைச் சுற்றிக்கொண்டு சென்னைக்கு வருகின்றன. சேதுக் கால்வாய் வெட்டப்பட்டால் தூத்துக்குடிக்கு தெற்கே சற்று தொலைவில் நமது கடற்பரப்பு வழியாக இந்தக் கப்பல்கள் சென்னை, கொல்கத்தாவிற்கு வந்து சேரும். இதனால் பயண தூரமும் குறைகிறது. எரிபொருளும் மீதமாகிறது.


இந்தத் திட்டம் நிறைவேறினால் தென் மாவட்டங்கள் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் காணும். மாநிலமே வளம் பெறும். எனவேதான் நாட்டின் நலனிலும் தமிழகத்தின் வளர்ச்சியிலும் அக்கறை கொண்ட அனைத்துத் தரப்பினரும் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றியே ஆகவேண்டும் என்று போராடுகிறார்கள்.


முந்தைய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது சேதுக்கால்வாய் திட்டம் தொடங்கப்பட்டது. பணிகளும் வேகம் பெற்றன. ஆனால் அதற்கு பி.ஜே.பி.யும் முட்டுக்கட்டை போட்டது. செல்வி ஜெயலலிதாவின் அ.தி.மு.கழகமும் எதிராக நின்றது.


சேதுக் கால்வாய் செதுக்கப்படுகின்ற கடற்பகுதியில் ராமர் கட்டிய பாலம் இருப்பதாகவும் ஆகவே அந்தத் திட்டத்தைக் கைவிடவேண்டும் என்றும் மதச்சாயம் பூசினர்.


ஆனால் அதே பி.ஜே.பி.யின் பிரதமர் வாஜ்பாய் முன்னர் சென்னை வந்தார். கடற்கரையில் ம.தி.மு.க. நடத்திய அண்ணா பிறந்த நாள் கூட்டத்தில் பங்கு கொண்டார். அண்ணாவின் கனவான சேது சமுத்திரத் திட்டத்தை பி.ஜே.பி. அரசு செயல்படுத்தும் என்றார்.


சேது சமுத்திரத் திட்டத்தைச் செயல்படுத்தியே ஆகவேண்டும் என்று திருப்பரங்குன்றம் தி.மு.க. மாநில மாநாட்டில் தீர்மானத்தை முன்மொழிந்தவர் அண்ணா. அந்த அண்ணாவின் பெயரால் இன்றைக்குக் கட்சி நடத்துகிறவர்கள் என்ன செய்கிறார்கள்?


சேது சமுத்திரத் திட்டம் கூடாது என்று தனது நிலையை மாற்றிக்கொண்ட பி.ஜே.பி.யோடு அ.தி.மு.கழகம் இணைந்துகொண்டது. அந்தத் திட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்ற சுப்பிரமணிய சுவாமிக்கு உறுதுணையாக நின்றது. சரியான கூட்டணி.


சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று முதல்வர் எம்.ஜி.ஆர். மத்திய அரசுக்கு எத்தனையோ கடிதங்கள் எழுதினார். தமிழகத்தில் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்கள் என்று பிரதமர் இந்திராகாந்தியிடம் ஓர் பட்டியல் சமர்ப்பித்தார். அதில் சேது சமுத்திரத் திட்டமும் ஒன்று.


அன்றைய எம்.ஜி.ஆரின் அ.தி.மு.க. சேது சமுத்திரத்திற்காகக் குரல் கொடுத்தது. அந்த எம்.ஜி.ஆர். துவக்கிய இயக்கத்தை ஆட்டிப் படைப்பவர்கள் அந்தத் திட்டம் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார்கள்.


இன்றைக்கு ராமர் பாலத்தை தேசியச் சின்ன மாக அறிவிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. குரல் எழுப்புகிறது. அதனைத் தவிர தமிழகத்தில் அனைத் துக் கட்சிகளும் சேது சமுத்திரத் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துக என்றும் குரல் கொடுக்கின்றன. ஆனால் இதே அ.தி.மு.க. 2001-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் என்ன கூறியது?

""இந்திய தீபகற்பத்தைச் சுற்றி இதுவரை தொடர்ச்சியான கப்பல் போக்குவரத்திற்கு ஏற்ற பாதைகள் இல்லை. மேற்கிலிருந்து கடல் வழியாக கிழக்கு நோக்கி கப்பல்கள் செல்ல வேண்டுமென் றால், இலங்கையைச் சுற்றிக்கொண்டுதான் செல்ல வேண்டியுள்ளது. இதற்குத் தீர்வாக அமைவதுதான் சேது சமுத்திரத் திட்டம்.

இத்திட்டத்தின்படி ராமேசுவரத்திற்கும் இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையில் உள்ள ஆடம்ஸ் பிரிட்ஜ் பகுதியில் கப்பல் போக்கு வரத்திற்குத் தடையாக உள்ள மணல் மேடுகள், பாறைகளை அகற்றி ஆழப்படுத்தும் கால்வாய் அமைப்பதுதான் சேது சமுத்திரத் திட்டத்தின் தலையாய நோக்கம்'' (2001 - அ.இ.அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை பக்கம் 83-84)


அன்றைக்கு அ.தி.மு.க. என்ன சொன்னது?


சேது சமுத்திரத் திட்டம் தேவை யானதுதான்.


ராமேசுவரத்திற்கும் தலைமன்னாருக்கும் இடையில் உள்ளது ஆடம்ஸ் பிரிட்ஜ் -அது மணல் மேடுகள், பாறைகள்தான். (இராமன் பாலம் அல்ல)
நேற்று சொன்னது மணல் மேடு. இன்றைக் குச் சொல்வது அந்த மணல் திட்டு ராமர் கட்டிய பாலம். எனவே அதனைத் தேசியச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. குரல் எழுப்புகிறது. என்ன இப்படி நிலைமையை மாற்றிக்கொள்கிறீர்களே என்றால் நேற்று சொன்னது நேற்றே ராமேசுவரம் காற்றோடு போய்விட்டது. இன்றைக்குச் சொல்வதுதான் எங்கள் வேதம் என்கிறார்கள்.

ராமேசுவரத்திற்கும் தலைமன்னாருக்கும் இடையேயுள்ள மணல் திட்டு ராமர் கட்டிய பாலம்தான் என்று தொல்பொருள் ஆராய்ச்சிகள் கூறுகிறதாம். சரம் சரமாகச் சரடு விடுகிறார்கள். அந்த மணல் திட்டை ராமர் கட்டிய பாலம் என்று எந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர் தெரிவித்திருக்கிறார்? அப்படி எவருமே தெரிவித்ததில்லை. ஆனால் வரலாற்றைத் திரிக்கிறார்கள்.


ஆரியர்-திராவிடர் போராட்டத்தைச் சித்தரிப்பதுதான் இராமாயண இதிகாசம் என்று பண்டிட் ஜவகர்லால் எழுதி வைத்திருக் கிறார். அது நமக்குத் தெரியும். அதே கருத்தை விவேகானந்தர் எதிரொலித் திருக்கிறார். அதுவும் நமக்குத் தெரியும். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிய ஆரிய-திராவிடர் போராட் டத்தின் இதிகாச வடிவம்தான் இராமாயணம் என்று பேராசிரியர் பி.டி.சீனிவாச அய்யங்கார் கூறியிருக்கிறார். அதனையும் படித்திருக்கிறோம். ஆனால் எந்த வரலாற்று ஆசிரியரும் தொல் பொருள் ஆராய்ச்சியாளரும் ராமன் கடலுக்குள் பாலம் கட்டினான் என்று சொல்லவே இல்லை.


வரலாறு என்பது வேறு. இதிகாசம் என்பது வேறு. எனவே இதிகாசக் கற்பனைகளைச் சுமத்தி வரலாற்றை மறைக்கக் கூடாது. களங்கப்படுத்தக் கூடாது. ஆனால் அந்தக் காரியத்தைத்தான் இன்றைய அ.தி.மு.க. அரசு கூச்சமின்றிச் செய்கிறது. ராமர் பாலத்தை தேசியச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று பிரதமருக்குக் கடிதம் எழுதுகிறார்கள். பொய் சொல்லி வாழ்ந்தவர்களும் இல்லை மெய் சொல்லி கெட்டவர்களும் இல்லை.


உலகிலேயே முதன் முதலாக எகிப்து நாட் டில் நைல் நதி மீதுதான் பாலம் கட்டினார்கள். அந்தப் பாலம் கி.மு. 2 ஆயிரத்து 650-ஆம் ஆண்டில் கட்டப்பட்டது என்பது சரித்திரம்.


இராமாயண காலம் என்ன? 17 லட்சத்து 25 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ராமன் வாழ்ந்தான் என்பது ஒரு கணிப்பு. இராமாயணம், மகாபாரதம் போன்ற இதி காசங்கள் எழுதப்பட்ட காலத் தைக் கணக்கிட்டு இப்படிச் சொல்கிறார்கள்.


பதினேழு லட் சம் ஆண்டு களுக்கு முன் னர் ராமன் பாலம் கட்டி னானாம். அவன் எந்தத் தொழில் நுட்ப அடிப்படையில் கட்டி னான்? பதினேழு லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் உருவான எந்த வடிவமாவது நினைவுச் சின்னமாக இன்றைக்கு இருக்க முடியுமா? இப்படி அறிவிற்கு விருந்து வைக்கும் முறையில் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி வினாக்களைத் தொடுத்திருக்கிறார்.


ராமேசுவரம் -தலைமன்னாருக்கு இடையே யான மணல்திட்டுதான் ராமர்பாலம் என்பது வளமான கற்பனை -தெளிவான பொய் என்பதனை அமெரிக்க நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையமும் அறிவித்திருக்கிறது.


அந்த மணல் திட்டு ராமர்பாலம்தான் என்பத னை நாசா ஆராய்ச்சி நிலையமே ஒப்புக்கொண்டு விட்டது என்று இந்துத்துவா சக்திகள் ஆர்ப்பரித்தன. சேது சமுத்திரத் திட்டத் தலைவர் ரகுபதி இது தொடர்பாக நாசாவிற்கு கடிதம் எழுதினார். அந்த ஆராய்ச்சி நிலையம் விளக்கமாகப் பதில் எழுதியிருக்கிறது.


"இந்தியா-இலங்கைக்கு இடையே கடலுக்குள் உருவாகியிருப்பது இயற்கையான மணல் திட்டு. அதனைத்தான் ஆங்கிலேயர்கள் ஆதாம் பாலம் என்று குறிப்பிட்டனர்' என்று நாசா விளக்கம் தந்திருக்கிறது.


இத்தகைய மணல் திட்டு இங்கு மட்டும் உரு வாகவில்லை. எல்லா கடல்களிலும் ஆழத்தில் ஏற்படும் இயற்கை மாற்றங்களால் உருவாகின்றன என்று ஆராய்ச்சியாளர்களும் விஞ்ஞானிகளும் எத்தனை யோ முறை தெரிவித்துவிட்டனர். ராமேசுவரம்- மன்னார் வளைகுடாவிற்கு இடையே காலம் காலமாக வண்டல் படிந்து உருவாகியிருக்கும் மணல்திட்டு இடைவெளி விட்டு இலங்கையையும் கடந்து உருவாகியிருக்கிறது. அங்கேயும் ராமன்தான் பாலம் கட்டினானா?


ஆஸ்திரேலியாவிற்குக் கிழக்கே இவை போன்ற மணல் திட்டு ஆயிரம் மைல் தூரம் வரை உருவாகி யிருக்கிறது. அதுவும் ராமன் கைங்கர்யம்தானா? விஞ்ஞானத்திற்கு விரோதமாக ஒரு மணல் திட்டிற்கு தெய்வீக முலாம் பூசுவது எந்த வகையில் நியாயம்? அதனைத் தேசிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என்பது ஏற்கத்தக்கதுதானா?


ஒரு மணல்திட்டு ராமர் பாலம் என்பது மூட நம்பிக்கையில் முளைத்த கள்ளிச்செடியாகும். அத னைக் காரணம் காட்டி தமிழகத்திற்கே வளம் சேர்க் கும் சேதுக் கால்வாய்த் திட்டத்தை சீர் குலைக்க முயல்வதை சிந்திக்கத் தெரிந்த எவருமே ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். மணல் திட்டை ராமர் பால மாகவும், தேசியச் சின்னமாகவும் அறிவிக்கவேண்டும் என்பது இந்துத்துவா சக்திகளின் கோரிக்கை; சுப்பிர மணிய சுவாமியின் கோரிக்கை. அந்தக் கோரிக்கை யைத்தான் அ.தி.மு.கழகமும் எதிரொலிக்கிறது.


thanks nakkeeran + rajasekar   thirunelveli

கருத்துகள் இல்லை: