பெங்களூரு: மூன்று மாத பெண் குழந்தையை, பெற்ற தந்தையே சிகரெட்டால் சூடு வைத்து கொடுமை படுத்தினார். நான்கு நாள் சிகிச்சை பலனின்றி குழந்தை, நேற்று பரிதாபமாக இறந்தது. குழந்தையை கொன்ற கணவருக்கு, தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என, தாயார் கதறினார்.
பெங்களூரு, தேவர் ஜீவனஹள்ளி குஷால் நகரில் வசிக்கும், உமர்பாரூக், 23,வுக்கும், அதே பகுதியில் மோதி ரோட்டில் வசிக்கும், அப்துல்கரீம் மகள் ரேஷ்மா பானுவுக்கும், 2010 டிச., 5ம் தேதி திருமணம் நடந்தது. பாரூக் ஏற்கனவே ஒரு பெண்ணை திருமணம் செய்து, மூன்று மாதம் குடும்பம் நடத்தி விட்டு, விவாகரத்து பெற்றவர்.வரதட்சணை வேண்டாம்: ரேஷ்மாவை திருமணம் செய்யும் போது, தனக்கு வரதட்சணை எதுவும் தேவையில்லை எனக் கூறியுள்ளார். ஆனாலும், ரேஷ்மா வீட்டில் தங்க நகைகள் உட்பட, வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்துள்ளனர். திருமணம் முடிந்து சில மாதம் பிரச்னையின்றி இருந்துள்ளனர். அதன் பின், மனைவியிடம், உங்கள் வீட்டிலிருந்து பணம் வாங்கி வா என, தொந்தரவு செய்துள்ளார். ரேஷ்மாவும் அவ்வப்போது, 1,000, 2,000 என வாங்கி கொடுத்து வந்துள்ளார். திருமணமானதிலிருந்தே மனைவியிடம், எங்கள் குடும்பத்தில், என் அண்ணனுக்கு இரண்டு பெண் குழந்தை தான். எனவே, தனக்கு ஆண் குழந்தை வேண்டும். குடும்பத்துக்கு வாரிசு வேண்டும் என, கணவரும், அவரின் குடும்பத்தாரும் கூறி வந்துள்ளனர்.
பெண் குழந்தை: முதலில் ரேஷ்மா கர்ப்பமாக இருந்த போது, ஸ்கேன் செய்து பார்த்தனர். அப்போது, இரட்டை பெண் குழந்தை என்று தெரிய வந்துள்ளது. இந்த குழந்தைகள் தேவையில்லை என, மனைவியிடம் கூறியுள்ளார். என்ன காரணத்தினாலோ, ரேஷ்மாவுக்கு அபார்ஷனாகி, கர்ப்பம் கலைந்து விட்டது. மீண்டும் கர்ப்பமுற்ற ரேஷ்மா, சில மாதம் தன் தாயார் வீட்டிலிருந்தார். பவுரிங் மருத்துவமனையில், கடந்த ஜனவரி 17ல், அழகான பெண் குழந்தையை பெற்றார். பெண் குழந்தை என்றதால், தந்தை பார்க்க வரவில்லை. குழந்தைக்கு பெயர் வைக்கும் போதும், பாரூக் வரவில்லை. குழந்தை பிறந்து, 40 நாள் கழித்து மனைவி, குழந்தையை அழைத்து செல்ல வந்தபோது, பெண் குழந்தை பெற்றதால், எங்கள் வீட்டில் சேர்க்க மாட்டேன் என்கின்றனர். எனவே, உன் வீட்டிலிருந்து, ஒரு லட்ச ரூபாய் வாங்கி வா. தனி வீடு பார்த்து இருக்க வேண்டும் என்று, பாரூக் கூறியுள்ளார். ரேஷ்மாவின் பெற்றோர், சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர். பாரூக் தினமும் குடித்துவிட்டு, மனைவியிடம் தகராறு செய்துள்ளார். ஏன் பெண் குழந்தை பெற்றாய் என, திட்டியுள்ளார். இரண்டு முறை போலீஸ் ஸ்டேஷனில் ரேஷ்மாவின் தந்தை புகார் கொடுக்கச் சென்றுள்ளார். ஆனால், போலீசார், சமாதானப்படுத்தி அனுப்பி விட்டனர்.
சூடு: சம்பவத்தன்று, குடிபோதையில் வந்த பாரூக், மனைவி ரேஷ்மாவை அடித்துள்ளார். கோபம் அடங்காததால், தொட்டிலில் தூங்கி கொண்டிருந்த மூன்று மாத குழந்தை அப்ரினை தாக்கியுள்ளார். குழந்தையின் வாய்ப்பகுதியில் கையால் குத்தியுள்ளார். பின், சிகரெட் நெருப்பால் குழந்தையின் முகத்திலும், தொடையிலும் சூடு வைத்துள்ளார். குழந்தை கதறி துடித்தது. பதறிப்போன தாய், குழந்தையை சிவாஜி நகர் பவுரிங் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றார். குழந்தை நிலைமை மோசமாக இருந்ததால், குழந்தைகள் நல மருத்துவமனையான வாணி விலாஸ் மருத்துவமனைக்கு அனுப்பினர்.
கதறல்: கடந்த ஞாயிற்றுக்கிழமையிலிருந்து குழந்தைக்கு தீவிர சிகிக்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், குழந்தை நேற்று காலை, 10 மணிக்கு இறந்து போனது. இதையறிந்த ரேஷ்மாவின் கதறல், மருத்துவமனையை உலுக்கி எடுத்தது. குழந்தையின் தந்தை பாரூக், ஏற்கனவே கைது செய்யப்பட்டு, பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது இந்த வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. ரேஷ்மா கூறுகையில், ""என் குழந்தையை கொலை செய்த, என் கணவருக்கு மிகப்பெரிய தண்டனை கொடுக்க வேண்டும். பொதுமக்கள் முன்னிலையில் தூக்கிலிட வேண்டும். அவரது தண்டனை, அவரை போல் தவறு செய்ய நினைப்பவர்களுக்கு பாடமாக அமைய வேண்டும்,'' என, கதறியபடி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக