சனி, 10 மார்ச், 2012

UP 38 வயதில் நாட்டின் மிக இளம் முதல்வராகிறார் அகிலேஷ் யாதவ்!

Akilesh Yadhav
லக்னெள: சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் குடும்பத்தின் அரசியல் சண்டை ஒருவழியாக தற்காலிக சமாதானத்துக்கு வந்துள்ளது.
உத்தரப் பிரதேச முதல்வராக முலாயம் சிங் யாதவின் மகன் அகிலேஷ் யாதவ் தேர்வு செய்யப்படுகிறார். இன்று நடந்த கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
உத்தரப் பிரதேச சட்டசபைத் தேர்தலில் சமாஜ்வாடி கட்சி தனி மெஜாரிட்டியுடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. மொத்தம் உள்ள 403 தொகுதியில் 224 இடங்களில் சமாஜ்வாடி வெற்றி பெற்றது.
இதைத் தொடர்ந்து முலாயம் சிங்கை விட அவரது அகிலேஷ் யாதவ் மீதே மக்கள் அதிக நம்பிக்கை வைத்து சமாஜ்வாடிக் கட்சியை ஆட்சியில் அமர்த்தியுள்ளதாக பேச்சு எழுந்தது.
இந் நிலையில் அகிலேஷ் யாதவையே முதல்வராக்க முலாயம் சிங்கும் விரும்பினார். இதற்கு எப்போதோ தயாராகிவிட்டார் அகிலேஷ்.
ஆனால், கட்சியின் மூத்த தலைவரான ஆஸம் கான், முலாயமின் தம்பி ஷிவ்பால் சிங் யாதவ் ஆகியோர் இதை எதிர்த்தனர். தங்களை விட வயதில் மிகவும் குறைந்த அகிலேஷ் யாதவிடம் பணிந்து செல்ல முடியாது என்று இவர்கள் வாதிட்டனர்.இவர்களின் எதிர்ப்புக்கு, முலாயம் குடும்பத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. குடும்பம் இரண்டு அணியாக நின்று அகிலேஷ் முதல்வர் - முலாயம் முதல்வர் என வாதிட ஆரம்பித்ததால், தேர்தல் முடிந்து நான்கு தினங்களுக்கும் மேல் பதவி ஏற்பு நடக்காமல் இருந்தது.

இதையடுத்து இவர்களுடன் முலாயம் சிங் பேச்சு நடத்தினார். அகிலேஷ் யாதவுக்கு கட்டுப்பட்டு ஆஸம் கான் நடக்க வேண்டியதில்லை என்றும், அவர் விரும்பினால் சபாநாயகராகலாம் என்றும் முலாயம் சிங் கூறிவிட்டார்.

அதே நேரத்தில் தனது தம்பியை குடும்ப உறுப்பினர்களை வைத்து சமாதானப்படுத்திவிட்டாராம்.

இதையடுத்து இன்று புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சமாஜ்வாடி எம்எல்ஏக்களின் கூட்டம் லக்னெளவில் நடந்ததது. இதில் உத்தரப் பிரதேசத்தின் அடுத்த முதல்வராக அகிலேஷ் யாதவ் தேர்வு செய்யப்பட்டார்.

அஸம்கானே அகிலேஷ் பெயரை முன்மொழிந்தார்

அகிஷேலின் பெயரை அவரது எதிர்ப்பாளர் அஸம் கானே முதல்வர் பதவிக்கு முன்மொழிந்தார். அதனை மற்ற அனைவரும் ஒருமனதாக வழி மொழிந்தனர்.

இளம் முதல்வர்

என்ஜினீயரிங் பட்டதாரியான அகிலேஷ் யாதவ் கட்சியின் மாநிலத் தலைவராகவும், மக்களவை எம்பியாகவும் உள்ளார்.அவர் முதல்வரான 6 மாதத்துக்குள் எம்.பி. பதவியை ராஜினாமா செய்து விட்டு ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு சட்ட மன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

அகிலேஷ் வயது 38தான். இந்த வயதில் முதல்வரான பெருமை நாட்டிலேயே அகிலேஷுக்குதான் கிடைத்திருக்கிறது. இதற்கு முன் அஸ்ஸாமின் பிரபுல்ல குமார் மகந்தா இளம் வயதில் முதல்வரானார்.

அகிலேஷின் பதவி ஏற்பு விழா திங்கள்கிழமை பதவி ஏற்பு விழா நடக்கிறது.

கருத்துகள் இல்லை: