வியாழன், 8 மார்ச், 2012

நம்ம கட்சி தோத்தா, மவனே தொலைஞ்சிங்க!சங்கரன்கோவில்

சங். கோவில் அமைச்சர்கள்: வௌக்கு வெச்ச நேரத்திலே தந்தானதானா

Viruvirupu  அரசின் தலைமைச் செயலகம் தற்காலிகமாக சங்கரன்கோவிலுக்கு இடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து, அங்கு திரும்பிய இடமெல்லாம் ஏதாவது ஒரு துறையின் அமைச்சரைப் பார்க்கும் வாய்ப்பு, பொதுமக்களுக்கு கிட்டியுள்ளது.
முன்பு தலைமைச் செயலகம் சென்னையில் இயங்கிய நாட்களில், அமைச்சர்களை நேரில் பார்ப்பது இவ்வளவு எளிதாக இருந்ததில்லை.
மொத்தம் 32 அமைச்சர்கள் அடங்கிய மாநில நிர்வாகம், சங்கரன்கோவிலில் இருந்து நடைபெறுகிறது. ரோட்டுப் போடும் துறையின் அமைச்சரில் இருந்து, ரோபோ தயாரிக்கும் தொழில்நுட்பத்தை கவனிக்கும் துறைக்கான அமைச்சர் வரை, சகல அமைச்சர்களும் சங்கரன்கோவிலின் குறுகிய சந்துகளில், வேட்டியை மடித்துக் கட்டியபடி மக்கள் சேவை செய்யும் முன்னுதாரண அரசு தலைநகர் சங்கரன்கோவிலில் இயங்குகிறது.

முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும், துறைமுகமும்தான் மிஸ்ஸிங்.
இவ்வளவு அமைச்சர்களையும் கவனிப்பதற்காக, அவர்களது பாதுகாப்பு அதிகாரிகள், செயலாளர்கள், உதவியாளர்கள், (சில அமைச்சர்களுக்கு அடியாட்கள்) என்று நிறையப்பேர் சங்கரன்கோவில் முழுவதும் அமைச்சர்களுடன் சுற்றிவருகின்றனர்.
இவ்வளவு பேர் தம்மைக் கவனிப்பதில் அமைச்சர்களுக்கும் சந்தோஷம்தான். ஆனால், அதற்காக ‘கவனிப்பவர்கள்’ எல்லோரும் சந்தோஷம் கொடுக்க கூடியவர்கள் அல்ல என்பதுதான் சங்கரன்கோவில் அமைச்சரவையின் சிக்கல். ஏனென்றால், அமைச்சர்களின் நடவடிக்கைகளை ‘கவனிக்க’ 35 குழுக்களை அமைத்துள்ளது தேர்தல் ஆணையம்.
நம்ம அமைச்சர்கள் மக்கள் சேவை செய்ய வீதியில் இறங்கிய நிமிடத்தில் இருந்து, தேர்தல் ஆணையத்தின் ஒவ்வொரு குழுவும், ஒவ்வொரு அமைச்சரை பின்தொடரத் தொடங்குகிறது. தேர்தல் ஆணையம் நியமித்துள்ள ஒவ்வொரு குழுவிற்கும், ஒரு துணை தாசில்தார், ஒரு துப்பாக்கி ஏந்திய போலீஸ்காரர், ஒரு வீடியோகிராபர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அமைச்சர்களின் ஒவ்வொரு அசைவும் வீடியோ எடுக்கப்படுவதில், மாண்புமிகுகள் சந்தோஷமாக இல்லை.
என்ன காரணம்? ஒரு உதாரணம் பாருங்கள். சென்னையில் ஃபைவ் ஸ்டார் ஹோட்டலுக்கு சாப்பிட போனாலே பில் செலுத்த தேவையில்லாத அமைச்சர்களும் நம்மிடம் உள்ளார்கள். பாவம் அவர்கள், சங்கரன்கோவில் வெயிலுக்கு சந்தில் குச்சி ஐஸ் வாங்கி சாப்பிட்டாலும், பாக்கெட்டில் இருந்து பைசா எடுத்து கொடுக்க வேண்டியுள்ளது. காரணம், பின்னாலேயே தேர்தல் ஆணையத்தின் வீடியோகிராபர், படமெடுத்தபடி வருகிறார்.
என்ன கொடுமை சார் இது?
இந்த லட்சணத்தில்தான், தி.மு.க. நாட்களில் அண்ணன் அழகிரி காட்டிய திருமங்கலம் பார்முலாவை, இங்கே எப்படி இம்பிளிமென்ட் பண்ணுவது என்பதே அமைச்சர்களின் கவலையாக உள்ளது.
கவலைப்படாதிங்கண்ணே.. நம்ம ஆட்சியில்தான் நீளளளமாக பவர்கட் இருக்கே.. இருட்டுக்குள்ளும் நம்மை பின்தொடர, தேர்தல் ஆணைய ஆசாமிகள் என்ன ஆந்தைகளா? வௌக்கு வெக்கும் நேரத்தில தந்தானதானா பண்ணிரலாம்!
கதையோடு கதையாக மற்றொரு விஷயம். சங்கரன்கோவிலிலும் மின்வெட்டு இருக்கிறது. ஒருவேளை தேர்தல் தேதி நெருங்கும்போது 24 மணிநேரமும் மின்சாரம் கொடுக்கப்படுமோ தெரியாது. ஆனால், தற்போது 3 மணி நேர மின்வெட்டு சங்கரன்கோவிலில் அமலில் இருக்கிறது.
சங்கரன்கோவில்வாசிகளே, உங்களுக்கு இடைத் தேர்தல் டயத்திலேயே 3 மணி நேர மின்வெட்டு என்றால்….
….நம்ம கட்சி தோத்தா, மவனே தொலைஞ்சிங்க!

-விறுவிறுப்பு.காமுக்காக, ரிஷி.

கருத்துகள் இல்லை: