சனி, 10 மார்ச், 2012

சங்கரன்கோவில்: “டாக்டரை சென்னையில் ‘பிக்ஸ்’ பண்ணியாச்சு!”

Viruvirupu
சங்கரன்கோவிலில் போட்டியிடும் கட்சிகள் அனைத்துமே (ஆம். அனைத்துமே) ஏதோ ஒரு வகையில் ஜாதி வாக்குக் கணக்கு போட்டுத்தான் அரசியல் செய்கின்றன. அந்த வகையில் தொகுதிக்குள் உள்ள தலித் வாக்குக்களை கவர, எல்லோருமே ஏதோ ஒரு வியூகம் வைத்திருக்கிறார்கள். இதில் அ.தி.மு.க.-வின் வியூகம்தான் வித்தியாசமானது.
பிரசாரத்துக்கு போய் இறங்கியுள்ள அமைச்சர்களிடம் சீனியர் அமைச்சர் ஒருவர், “தலித் வாக்ககளைப் பற்றி நாம கவலைப்பட வேண்டாம்” என்று சொல்லி திகைக்க வைத்திருக்கிறார்.
இது என்ன புதிய புரளி? ஒருவேளை ஆதரவு எக்கச்சக்கமாக இருப்பதால், தலித் வாக்குகள் இல்லாமலே ஜெயித்து விடுவோம் என்ற இறுமாப்பா?
“சேச்சே, அதல்ல விஷயம். அமைச்சர் கூறியதற்கு அர்த்தம் வேறு” என்றார் எமக்கு நெருக்கமான ஒரு அ.தி.மு.க. பிரபலம். “மற்றைய அமைச்சர்களை தலித் வாக்காளர்கள் தொடர்பாக எதுவும் செய்ய வேண்டாம் என்று சீனியர் அமைச்சர் சொன்னது உண்மைதான்.
அதிலுள்ள சூட்சுமம் என்னவென்றால், தலித் ஏரியாவை ‘கவர்’ பண்ண அம்மா, வேறு ஒருவரை ஏற்பாடு செய்துவிட்டார்” என்றார் அவர்.
அவரது கூற்றின்படி, அந்த நபர் டாக்டர். கிருஷ்ணசாமி!
கடந்த சட்டமன்ற தேர்தலில் டாக்டர், அ.தி.மு.க. கூட்டணியில் இருந்தார். அதன்பின் அவரை யாரும் கண்டுகொள்ளவில்லை.
“சென்னையிலேயே வைத்து டாக்டரை ‘கவனிக்க வேண்டிய விதத்தில்’ கவனித்து விட்டார்கள். பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்குப் பிறகு, சட்டசபையில் ஆளும்கட்சிக்கு எதிராக ஆக்ரோஷமாக குரல் கொடுத்தவரே டாக்டர்தான் தி.மு.க. சட்டமன்றத்துக்கு வெளியே இருந்த நாட்கள் அவை. அப்போது விஜயகாந்த், மதில்மேல் பூனையாக இருந்தார்.
அதன்பின் சங்கரன்கோவில் இடைத்தேர்தல் வருகிறது என்றதும், அம்மா தரப்பில் இருந்து, டாக்டரோடு பேச வேண்டிய விதத்தில் பேசி விட்டார்களாம். டாக்டர் இப்போதெல்லாம் பரமக்குடி சம்பவத்தைப் பற்றிப் பேசுவதே இல்லை.
டாக்டருடன் வைத்துள்ள டீல் என்ன?
எமது அ.தி.மு.க. கனெக்ஷன் தகவல்களின்படி டாக்டர். கிருஷ்ணசாமி, “தொகுதிக்குள் உள்ள தலித் ஓட்டுக்களை சிந்தாமல் சிதறாமல் அ.தி.மு.க.-வுக்கு பெற்றுத் தரவுவேண்டியது எனது பொறுப்பு” என்று சாலஞ்ச் விட்டு களத்தில் இறங்கியுள்ளார். அவருக்கு வேண்டிய வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
கூடவே நிபந்தனையாக, “சங்கரன்கோவிலில் தலித் ஏரியாக்களில் கிடைக்கும் ஓட்டுக்களைப் பொறுத்தத்தான் வருங்காலத்தில் அ.தி.மு.க. கூட்டணியில் நீங்கள் இருக்கிறீர்களா, இல்லையா என்பது முடிவு செய்யப்படும்” என்று கூறப்பட்டும் உள்ளது! அதனால்தான், அவரது ரூட்டில் குறுக்கிட வேண்டாம் என்று அ.தி.மு.க. அமைச்சர்களிடம் சொல்லப்பட்டும் உள்ளது.
டாக்டரும், தொகுதிக்குள் சுறுசுறுப்பாக போய் இறங்கியுள்ளார். தொகுதிக்குள் தலித் வாக்காளர்கள் அதிகமுள்ள பகுதிகளான கழுகுமலை ரோடு, புளியம்பட்டி, சீவலராயநேந்தன், இளவன்குளம் கிராமம் என்று சுழன்று கொண்டிருக்கிறார்.
“தென் தமிழகத்திலுள்ள தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் அனைவரையும் தேவேந்திர குல வேளாளர் என்று அழைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை முதல்வரிடம் வைக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஒன்றுதிரண்டு அ.தி.மு.க.-வை ஜெயிக்க வைத்தால்தான், அதை நிறைவேற்றுவதாக முதல்வர் கூறியிருக்கிறார்” என்பதே டாக்டரின் மெயின் பிரசாரம்.
அ.தி.மு.க. ஜெயிப்பது டாக்டருக்கு வெற்றியல்ல. தலித் ஏரியாக்களில் எவ்வளது ஓட்டுக்கள் அ.தி.மு.க.-வுக்கு விழுகிறது என்பதிலேயே டாக்டரின் வெற்றி தங்கியுள்ளது. www.viruviruppu.com

கருத்துகள் இல்லை: