சுகாதாரத்துறையில் நடந்த ஊழலால் நாங்கள் தோல்வியடையவில்லை. 70 சதவீத ஓட்டுகள் சமாஜ்வாடி கட்சிக்கு சென்று விட்டன'' என உத்தரபிரதேச முதல்வர் மாயாவதி தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் முலாயம்சிங் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து தனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் மாயாவதி, கவர்னர் பி.எல்.ஜோஷியிடம் நேற்று சமர்ப்பித்தார். ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்ட கவர்னர், புதிய அரசு பதவி ஏற்கும் வரை அவரை முதல்வர் பதவியில் தொடரும் படி கேட்டுக்கொண்டார். பின்னர் நிருபர்களுக்கு மாயாவதி பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: உத்தரபிரதேச சுகாதாரத் திட்டத்தில் முறைகேடு நடந்ததாக கூறப்படும் விஷயத்தினால் எங்களுக்கு பின்னடைவு ஏற்படவில்லை. அதே போல எல்லா அமைப்புகளிலும் உட்பூசல் இருக்கத்தான் செய்யும். இதுவும் எங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தவில்லை.மைனாரிட்டி மக்களுக்கான இடஒதுக்கீடு தொடர்பாக காங்கிரஸ் கட்சி தீவிர பிரசாரம் செய்தது. முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை பா.ஜ., எதிர்த்தது. இடஒதுக்கீடு தொடர்பான இருகட்சிகளிடையே ஏற்பட்ட முரண்பாடு சமாஜ்வாடி கட்சிக்கு சாதகமாக அமைந்து விட்டது. முஸ்லிம்களுக்கு ஒதுக்கீடு அளிக்கப் போவதாக கூறிய காங்கிரசுக்கே, முஸ்லிம்களின் ஓட்டு கிடைக்கவில்லை. உயர்ஜாதி மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் ஓட்டுகளை கவர நினைத்த பா.ஜ.,வுக்கும் இவர்கள் ஓட்டு கிடைக்கவில்லை. முஸ்லிம்களின் 70 சதவீத ஓட்டு சமாஜ்வாடி கட்சிக்கு சென்று விட்டது. இதனால் அக்கட்சி வெற்றி பெற்றுள்ளது.
நாங்கள் கொண்டு வந்த முன்னேற்ற திட்டங்கள் எல்லாம் சமாஜ்வாடி ஆட்சியில் கிடப்பில் போடப்படும். அப்போது நாங்கள் நடத்திய நல்லாட்சியை மக்கள் நினைப்பார்கள். எனினும் தலித் ஓட்டுகள் பிரியவில்லை. தலித் ஓட்டுகள் முழுவதும் எங்களுக்கு தான் கிடைத்துள்ளது. அதனால், தான் நாங்கள் இரண்டாவது இடத்தில் இருக்கிறோம். பீகாரில் லாலு பிரசாத்தின் நிலைமையில் தான் தற்போது நாங்கள் இருக்கிறோம்.உத்தரபிரதேசத்தை முலாயம் ஆளுவாரா? அகிலேஷ் ஆட்சி செய்வாரா என்பதை அவர்களிடம் தான் கேட்கவேண்டும்.இவ்வாறு மாயாவதி கூறினார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக