செவ்வாய், 6 மார்ச், 2012

உத்தரப் பிரதேசத்தில் முலாயம் ஆட்சி: சிஎன்என்-ஐபிஎன் கணிப்பு

புது தில்லி, மார்ச் 5: உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் முன்னாள் முதல்வர் முலாயம் சிங் தலைமையிலான சமாஜவாதி கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்று சிஎன்என் ஐபிஎன் - தி வீக் - சிஎஸ்டிஎஸ் நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய வாக்குக் கணிப்பில் தெரியவந்திருக்கிறது.  403 உறுப்பினர்களைக் கொண்ட உத்தரப் பிரதேச சட்டப் பேரவையில், 232 முதல் 250 இடங்களை சமாஜவாதி கட்சி கைப்பற்றும்.  இப்போது ஆட்சியில் இருக்கும் முதல்வர் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சிக்கும் 65 முதல் 70 இடங்கள் வரையே கிடைக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சிக்கு 36 முதல் 44 இடங்களும் பாஜகவுக்கு 28 முதல் 38 இடங்களும் கிடைக்கும் என்று வாக்குக் கணிப்பில் முடிவில் கூறப்பட்டிருக்கிறது.  கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 22 இடங்களும் பாஜகவுக்கு 51 இடங்களும் கிடைத்தன. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு சற்று அதிகமான இடங்கள் கிடைக்கும் நிலையில், பாஜகவுக்கு பெரும் தோல்வி ஏற்படும் என்று தெரிகிறது.  பதிவான மொத்த வாக்குகளில் சமாஜவாதிக்கு 34 சதவீதமும், பகுஜன் சமாஜ் கட்சிக்கு 24 சதவீதமும் பாஜகவுக்கு 14 சதவீதமும் காங்கிரஸ் கட்சிக்கு 12 சதவீதமும் கிடைக்கும் என்று வாக்குக் கணிப்பில் தெரியவந்திருக்கிறது.  இந்தத் தேர்தலில் மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் சமாஜவாதிக் கட்சிக்கு செல்வாக்கு அதிகரித்திருப்பதாகவும் கணிக்கப்பட்டிருக்கிறது.

கருத்துகள் இல்லை: