ஜெயலலிதா பற்றி நடராஜன் வார்த்தைகளில் விளையாடுகிறார்!
Viruvirupu,
அவரது கூற்றில், “ஜெயலலிதாவை நாம் காப்பாற்றினோம்” என்ற சாயல் அடிக்கிறதே தவிர, “ஜெயலலிதா குற்றமற்றவர்” என்று இல்லை.
“பெங்களூரு வழக்கில் எங்கள் குடும்பமே, ‘நாங்கள் தான் பொறுப்பு’ என, ஒப்புக் கொண்டு விட்டோம். ஹனுமான் போல என் மனைவி சசிகலா நெஞ்சை பிளந்து காட்டிவிட்டார். எங்களை பற்றி இனியும் முதல்வருக்கு சந்தேகமிருந்தால், எங்களை குடும்பத்துடன் விஷம் வைத்து கொன்று விடட்டும்” என்றார் நடராஜன்.
பெங்களூரு விசாரணையின்போது சசிகலா, “ஜெயலலிதாவுக்கு ஏதும் தெரியாது” என்று கூறியிருந்தார். ஆனால், நடராஜனின் தனது கூற்றில், ஜெயலலிதா குற்றமற்றவர் என்று கூறுவதை சாமர்த்தியமாக தவிர்த்து விட்டிருக்கிறார்.
ஜெயலலிதாவை காப்பாற்ற, குற்றத்தை நாங்கள் ‘ஏற்றுக் கொண்டிருக்கிறோம்’ என்பதே நடராஜனின் ஸ்டேட்மென்ட்.
தஞ்சையில் விளாரில் புதிய நில அபகரிப்பு புகாரில் சிக்கிய சசிகலா கணவர் நடராஜன் நேற்று மாலை தஞ்சை ஜே.எம். 2 நீதிமன்ற மாஜிஸ்திரேட் முருகன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அதன்பின் வெளியே வந்த அவர், நிருபர்களிடம் கூறியதுதான் மேலேயுள்ள ஸ்டேட்மென்ட்.
“நான் சிறையில் இருப்பதால், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஒரு நன்மையும் வந்துவிடாது. கேடு தான் வரும். உயர்நீதிமன்றத்தில் எனக்கு ஜாமீன் கிடைத்திருப்பதால், அந்த ஆத்திரத்தில் தற்போது மற்றொரு வழக்கு தொடுத்துள்ளனர்” என்று அவர் கூறியிருப்பதுகூட, முதல்வர் ஜெயலலிதா பொய் வழக்கு போடுகிறார் என்பதையே குறிப்பிடுகிறது.
இறுதியில் நடராஜன், “எங்களை பற்றி இனியும் முதல்வருக்கு சந்தேகம் வேண்டாம்; பயப்பட வேண்டாம். தி.மு.க. ஆட்சியில் சொத்துக்குவிப்பு வழக்கு போடப்பட்டது. அதில் வெற்றி பெற்றோம். அதனால் பயப்பட வேண்டாம்” என்றும் கூறியிருக்கிறார்.
அதன் மிகத் தெளிவான அர்த்தம்: இவர்கள் தம்மை சிக்க வைத்து விடுவார்கள் என ஜெயலலிதா பயம் கொள்கிறார் என்பதே! அதை ஒரு பதிலாக எடுத்துக் கொண்டால், அதிலுள்ள மறைமுகமான கேள்வி, “குற்றம் செய்யாவிட்டால், ஜெயலலிதா ஏன் பயப்பட வேண்டும்?” மொத்தத்தில் இவர் கொடுக்கும் கன்குளூஷன், “குற்றம் செய்ததால், பயப்படுகிறார்!”
வார்த்தை விளையாட்டில் நடராஜன், கில்லாடிதான்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக