புதுடில்லி: உ.பி., சட்டசபை தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ள நிலையில், அங்கு சமாஜ்வாடி கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் என கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. ஆளும் பகுஜன் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்படுகிறது.
நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உ.பி.,யில், மொத்தமுள்ள 403 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. இதையடுத்து அங்கு யார் ஆட்சியமைப்பார்கள் என்பது குறித்த கருத்துக்கணிப்புகள் வெளிவரத்துவங்கியுள்ளன. ஸ்டார் நியூஸ்- ஏ.சி. நீல்சன் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில், சமாஜ்வாடி கட்சி 160 இடங்களைப்பிடித்து சட்டசபையில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் என கூறப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பகுஜன் சமாஜ் கட்சி 86 இடங்களுடன் இரண்டாவது இடத்தையும், 80 இடங்களுடன் பா.ஜ., மூன்றாவது இடத்தையும், 58 இடங்களுடன் காங்கிரஸ் 4வது இடத்தையும் பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ் மிகவும் ஆவலுடன் கூட்டு வைத்த ராஷ்டிரிய லோக்தளம் 12 இடங்களை பிடிக்கும் எனவும் அந்த கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.
இதே போல், தி ஹெட்லைன்ஸ் டுடே வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில், சமாஜ்வாடி கட்சி 195 முதல் 210 இடங்களைப்பிடிக்கும் என கூறப்பட்டுள்ளது. பி.எஸ்.பி.,க்கு 88 முதல் 98 இடங்கள் வரையிலும், பா.ஜ.,வுக்கு 50 முதல் 56 இடங்கள் வரையிலும், காங்கிரஸ்- ராஷ்டிரிய லோக்தளம் 38 முதல் 42 இடங்கள் வரையிலும் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. அங்கு சுயேட்சைகள் 12 முதல் 18 இடங்களைப் பெறுவார்கள் எனவும் அந்த கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.
இந்தியா டி.வி.,-சி- வோட்டர் எடுத்த கருத்துக்கணிப்பில், சமாஜ்வாடி கட்சி 137 முதல் 145 இடங்கள் வரை பிடிக்கும் என தெரியவந்துள்ளது. மிகச்சில இடங்களில் பகுஜன் முதல் இடத்தை தவறவிட்டுள்ளதாகவும் இந்த கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. பகுஜன் 122 முதல் 130 இடங்கள் வரை பெறலாம் என அந்த கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. பா.ஜ., 79 முதல் 87, காங்., ராஷ்டிரிய லோக்தளம் 39 முதல் 55 இடங்கள் மற்றவை 2 முதல் 10 இடங்கள் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்.,கிற்கு அகிலேஷ் எதிர்ப்பு: கருத்துக்கணிப்புகள் சமாஜ்வாடிக்கு சாதகமாக வெளியாகி வரும் நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த அக்கட்சித்தலைவர் முலாயம் சிங் யாதவ் மகன் அகிலேஷ் யாதவ், உ.பி.,யில் சமாஜ்வாடி கட்சி நிச்சயம் ஆட்சியமைக்கும் என்றும், காங்கிரசின் ஆதரவை கேட்கப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார். மாநிலத்தில் பகுஜன் சமாஜ் கட்சியை தடுக்க காங்கிரஸ் முயலவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக