ராகுல் காந்தி வாழ்த்துகிறார். மன்மோகன் சிங் பாராட்டுகிறார். ஜெயலலிதா மகிழ்ச்சி தெரிவிக்கிறார். கருணாநிதி கடிதம் எழுது குதூகலிக்கிறார். இன்னும் இன்னும் நாட்டில் இருக்கும் அத்தனை முக்கியத் தலைவர்களும் முலாயம் சிங்கின் பெயரைத்தான் உச்சரித்துக் கொண்டிருக்கிறார்கள். இதுவரை இல்லாத அளவுக்கு முலாயம் சிங் யாதவின் பெயர் தேசிய முக்கியத்துவம் பெற்றுள்ளது. அனைத்து பத்திரிகைகளும் அவரைப் பற்றித்தான் எழுதித் தீர்க்கின்றன. ஒரே காரணம்தான். இந்தியாவின் ஆகப்பெரிய மாநிலத்தில் அவர் பெற்ற அசாத்திய வெற்றி.
மொத்தமுள்ள நானுற்றியிரண்டு இடங்களில் 224 இடங்களைக் கைப்பற்றி விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது அவருடைய சமாஜ்வாதி கட்சி. இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் மூன்றில் இரண்டு பங்கு இடங்களைக் கூடப் பெற்றிருக்கமுடியும்
என்ற அளவுக்கு அவருடைய வெற்றிக்கணக்கு விரைந்து முன்னேறியது. ஆக, உத்தரப் பிரதேச அரசியலைப் பொறுத்தவரை அடுத்த ஐந்தாண்டு காலத்துக்கு முலாயம் சிங்கையோ, அவரது மகன் அகிலேஷையே யாரும் ஆட்டவோ அசைக்கவோ முடியாது.
சரி. உ.பியில் வெற்றிக்கொடி நாட்டிவிட்டார். சந்தேகம் இல்லை. ஆனால் அத்துடன் அனைத்தும் முடிந்துவிட்டதா? அவருடைய அரசியல் வாழ்க்கையில் இன்னும் பிரும்மாண்டமான வெற்றியைப் பெறுவதற்குக் காலம் கைகூடி வந்துள்ளது என்பதுதான் இந்த இடத்தில் கவனிக்கவேண்டிய விஷயம். ஆம், பிராந்தியத் தலைவராக, அவ்வப்போது மட்டும் தேசிய அரசியலில் நனைந்த முலாயம் சிங்கின் பங்களிப்பு இனி தேசிய அரசியலுக்கும் தேவைப்படுகிறது.
கணிசமான அளவு நாடாளுமன்ற உறுப்பினர்களையும் பிரும்மாண்டமான எண்ணிக்கையில் சட்டமன்ற உறுப்பினர்களையும் கைவசம் வைத்திருக்கும் முலாயம் சிங் யாதவ், விரைவில் வரவிருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலின்போது முக்கியமான தலைவராகக் கருதப்படுவார். அந்தத் தேர்தல் ஒருவகையில் அடுத்து வரவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டமாகக்கூட இருக்கலாம். அணி மாற்றங்களைத் தீர்மானிக்கலாம். அப்போது முலாயம் சிங்கே நடுநாயகமாக நிற்பார்.
2014 ஆம் ஆண்டிலோ அல்லது அதற்கு முன்போ மக்களவைத் தேர்தல் நடக்கும். அப்போது அடுத்த பிரதமரைத் தேர்வு செய்யும் சக்தி இந்தியாவின் வேறெந்தத் தலைவரைக் காட்டிலும் முலாயம் சிங்குக்கு அதிகம் என்பதுதான் இன்றைய நிலவரம்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு அவர் பெற்ற வெற்றியை அளவுகோலாகக் கொண்டு பார்த்தால் வரும் மக்களவைத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சிக்கு மொத்தமுள்ள எண்பது இடங்களில் 45 முதல் 55 வரை இடங்கள் கிடைக்கக்கூடும். அப்படியொரு வெற்றி கிடைக்கும் பட்சத்தில் அவர்தான் கிங்மேக்கர். அவர் கைகாட்டுபவர்தான் பிரதமர். அவருடைய ஆசிபெற்றவர்கள் பலரும் அமைச்சராவார்கள்.
ஒருவேளை காங்கிரஸ் அல்லது பாஜக அல்லாத அரசு உருவாகும் பட்சத்தில் மூன்றாவது அணி ஆட்சியில் அமரும். அந்த அணியில் பிரதான கட்சியாக சமாஜ்வாதி இருக்கக்கூடும். எனில், யார் பிரதமர்? அப்போதும் முலாயம் சிங் யாதவ் கிங் மேக்கராகவே இருப்பார் என்று சொல்லமுடியாது. கிங்காக மாறுவதற்கும் முயற்சி செய்யலாம்.
காங்கிரஸ் அல்லது பாஜகவைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் தேசிய அளவில் பலம் பொருந்திய தலைவர்கள் பட்டியலில் இருப்பவர்கள் நிதீஷ் குமார், ஜெயலலிதா, முலாயம் சிங் யாதவ், மமதா பானர்ஜி, மாயாவதி, சரத்பவார், கருணாநிதி, சந்திரபாபு நாயுடு என்று வெகு சிலர் மட்டுமே. ஆனால் வேறெந்த தலைவரைக் காட்டிலும் முலாயம் சிங்குக்கு
ஒரு கூடுதல் பலம் இருக்கிறது. அதுதான் அவருடைய மாநிலத்தில் மக்களவைத் தொகுதிகளில் எண்ணிக்கை.
அதை வைத்துக்கொண்டு பார்த்தால் இந்தியாவின் பிரதமர் பதவி முலாயம் சிங்கை வந்தடைய வாய்ப்பிருக்கிறது. அதை அவர் ஏற்றுக்கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது. பிரதமர் பதவி வந்துவிட்டது என்பதற்காக உ.பியை அம்போவென்று விட்டுவிடப்போவதில்லை. முதல்வர் பதவியை மகன் அகிலேஷ் யாதவிடம் பத்திரமாக ஒப்படைத்துவிட்டு, டெல்லிக்கு விமானமேறக்கூடும்.
அரசியலில் இதுதான் நடக்கும் என்று எதையும் திட்டவட்டமாகச் சொல்லமுடியாது. எதுவும் நடக்கும்!
0
ஆர். முத்துக்குமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக