திங்கள், 3 அக்டோபர், 2011

வெள்ளவத்தைக்கு அல்லது வெளிநாட்டிற்கு ஓடும் யாழ்மக்கள் ஊர் காலியாகிறதா?

jaffna1105-1யாழ்ப்பாணத்தின் எதிர்காலம்?
- கிருஸ்ணமூர்த்தி அரவிந்தன்
யுத்த கால யாழ்ப்பாணம் அழிவுகளால் உருமாறியது.  யுத்தத்திற்குப் பிந்திய யாழ்ப்பாணம் திட்டமிடப்படாத ஒருங்கமைக்கப்படாத அபிவிருத்திப் பணிகளால் உருமாறிக்கொண்டிருக்கிறது.  இதை மேலும் சுருக்கமாகச் செல்லவதாயின் யாழ்ப்பாணத்தின் முகம் அல்லது அதனுடைய அடையாளம் சடுதியாக மாறிக்கொண்டிருக்கிறது எனலாம்.  இந்த உருமாற்றத்தை வளர்ச்சியின் விளைவான மாற்றம் என்று யாரும் கொள்ளக் கூடும்.  அதில் உண்மையுண்டு.  ஆனால் அதையும்விட இது ஒரு அபாயநிலைமையை நோக்கிச் செல்லும் உருமாற்றம் என்று சொல்வதே பொருத்தமானதாக  இருக்கும்.  யாழ்ப்பாணத்தின் இன்றைய செயல்களுக்கும் நிகழ்ச்சிகளுக்கும் அதனை ஒரு அபாயப் பிராந்தியத்துக்கே கொண்டு செல்கின்றன. 
  திட்டமிடப்படாத-ஒழுங்கமைக்கப்படாத - எதிர்காலம் குறித்த சிந்தனைக்குட்படுத்தப்படாத - காரியங்களே இன்றைய யாழ்ப்பாணத்தில் அதிகமாக மேற்கொள்ளப்படுகின்றன.  இவை கடந்த கால யாழ்ப்பாணத்தையும் எதிர்கால யாழ்ப்பாணத்தையும் பாதிப்புக்கு உட்படுத்தும் நிகழ்காலத் தவறுகளாகும்.
.
என்றபோதும் யாழ்ப்பாணம் கடந்த ஐந்து நூற்றாண்டுகளாக மிகப்பெரிய சவால்களை எதிர்கொள்ளவேண்டி நிலையில் - யதார்த்தத்திலேயே இருக்கின்றது.  கி.பி. 1500 களில் ஏற்பட்ட ஐரோப்பியர்களின் வருகையோடு யாழ்ப்பாணத்தின் சுயாதீனம் பெருமளவுக்கும் பாதிப்படையத் தொடங்கியது.  யாழ்ப்பாணத் தனித்துவங்களில் ஐரோப்பியக் கலப்பு அல்லது ஊடுருவல் அல்லது ஆதிக்கம் என்ற நிலை கி.பி. 1500க்குப் பின்னர் ஏற்பட்டது. 
கடந்த 500 ஆண்டுகளாக ஏற்பட்ட உருமாற்றத்தையும்விட 1950 இற்குப் பின்னர் உருவாகிய அரசியல் நிலமைகளின் விளைவான தாக்கம் அதிகமானது. இதன் விளைவாக அகரீதியிலும் புற நிலையிலும் யாழ்ப்பாணம் உருமாறியது.
     திருமண பந்தத்தை தேர்வு செய்யும் போதே தன் உறவு வட்டாரத்திற்குள் ஊருக்குள் தேர்வு செய்யும் முறைமையைப் பின்பற்றி ‘கண்காணக் கூடிய இடத்தில் கலியாணம் ‘அடிக்கடவைக்குள் சம்மந்தம்’ என்ற நிலை தகர்ந்து கடந்து கண்டம் விட்டுப் புலம் பெயர்ந்து வாழும் பெயர்வுகள் வாழ்வாகியது. கூட்டுக் குடும்பச் சமூகமானது உறவுகளைப் பிரிந்து வாழும்  நிலையைக் கொண்டது.
     யாழ்ப்பாணத்தில் தொழிலுக்கும் இடமில்லை. குடியிருப்புக்கும் நிலமில்லை என்றதொரு நிலையில் வன்னியை நோக்கிய குடியேற்றத் திட்டங்கள் கடந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில் (1950 களில்) இருந்து நிகழ்ந்தது.
இப்போது யுத்தத்திற்குப் பின்னர் இன்னொரு வகையான உருமாற்றத்திற்கு உள்ளாகி வருகிறது.  இதைத்தான் இப்போது நாம் கவனிக்க வேண்டும்.
யுத்தத்திற்குப் பின்னர் ஏற்பட்டிருக்கும் புதிய நிலைமைகளின் விளைவாக ஏகப்பட்ட பலமாற்றங்கள் சடுதியாக நடைபெறுகின்றன. நீண்ட நாள் பசி கிடந்தவன் உணவைக் கண்டதும் அவாப்படுவதைப் போல 30 ஆண்டுகளாக எத்தகைய முன்னேற்றங்களும் இன்றி தடைப்படுத்தப்பட்டிருந்தவர்கள் போருக்குப் பிறகு உருவாகிய அமைதிச் சூழலில் விழுந்தடித்துக்கொண்டு கட்டுமானங்களைச் செய்வதிலும் காணிகளைப் புனரமைப்பதிலும் வாழ்வை வசதிப்படுத்துவதிலும் துரிதமாகச் செயற்படுகின்றனர்.
இது ஒரு வகையில் தவிர்க்கமுடியாத அவசிய நிலையே.  இதனை நாம் புரிந்துகொள்ள முடியும். ஆனால் யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரையில் தற்போது மக்களால் தனிப்பட்ட ரீதியிலும் அரசினால் பொதுவாகவும் முன்னெடுக்கப்பட்டு வரும் புனரமைப்பு மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் ஒழுங்குபடுத்தப்பட்ட திட்டமிடலுக்குப் புறம்பாகவே நடைபெறுகின்றன.  ஆனால் இவை நிச்சயமாக திட்டமிடப்பட்டே மேற்கொள்ளப்பட வேண்டும்.  காரணம் யாழ்ப்பாணத்தின் புவியியல் அமைப்பு – நிலம் - மற்றும் இயற்கை வளங்கள் போன்றன யாழ்பாண அபிவிருத்திக்கு முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தும் நிலையிலேயே உள்ளன. 
யாழ்ப்பாணம் கடலாலும் கடல் நீரேரிகளாலும் சூழப்பட்ட ஒரு சிறிய பிரதேசம்.  கோடை காலத்தில் இருண்ட நிரப்பரப்பாக காட்சியளிக்கும் பல பகுதிகளும் மாரி காலத்தில் நீர்ப்பரப்பாக மாறிவிடுகின்றன.  ஆகவே யாழ்ப்பாணத்தில் பெருமளவு பகுதிகளை மாரியிலும் பயன்படுத்த முடியாது. கோடையிலும் பயன்படுத்த முடியாது.  எஞ்சிய நிலப்பகுதியிலேயே எதனையும் செய்ய முடியும். jail-ltte
25 ஆண்டுகளுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் இருந்த விவசாய நிலம் இன்றில்லை.  ஒரு பகுதி நிலம் உயர்பாதுகாப்பு வலயம் மற்றும் படையினரின் கட்டுப்பாட்டில் தற்காலிகமாக இருந்தாலும் பொதுவாக யாழ்ப்பாணத்துத் தோட்டக் காணிகளில் பெரும்பாலானவைகள் இன்று வீடுகளாகவும் வளவுகளாகவும் வணிக நிலையங்களாகவும் தொடர்ந்து மாற்றப்பட்டு வருகின்றன.
‘மப்பன்றி மழை காணா மண்ணில் சப்பாத்தி முள்ளும் சரியாய் விளையாது ஏரேறாது’ என்றிருக்கும் நிலத்தில் ‘கல்லுடைத்துப் பயிர்வளர்த்த யாழ்ப்பாணத்தவர்கள்’ அந்த நிலத்தையும் தொழிலையும் மெல்ல மெல்லக் கைவிட்டு வருகின்றனர்.
வெளிநாட்டுக் காசு உள்@ர் தொழிலை நம்பியிருக்க வேண்டிய அவசியத்தைக் குறைக்கிறது.  இதனால் தொழிலையும் விட வசதியான இருப்பிடம் முக்கியமாகிறது.  எனவே தோட்டக் காணிகளை வீடுகளாகவும் வளவுகளாகவும் வர்த்தக வளாகங்களாகவும் யாழ்;ப்பாணம் மாற்றிக்கொண்டிருக்கிறது. 
தோட்டக் காணிகளை அப்படியே வைத்துக்கொண்டு குடியிருப்பதற்காக யாழ்ப்பாணத்திற்கு வெளியே செல்வது பற்றி யாரும் அக்கறைப்படவில்லை – விரும்பவும் இல்லை. அப்படிச் சென்றால் அவர்கள் ஒன்றில் கொழும்பு – வெள்ளவத்தைக்குப் போகிறார்கள் அல்லது புலம் பெயர்ந்து போகிறார்கள்.  யாழ்ப்பாணத்திற்கு வெளியே போகவிரும்பாதவர்கள் யாழ்ப்பாணத்திற்குள்ளேயே தொடர்மாடி அமைப்புக்களிலேயே குடியிருப்புக்களை நிர்மாணிக்கலாம். இதற்குத்தான் திட்டமிடலும் ஒழுங்கமைத்தலும் அவசியமென்பது.
பெரும்பாலும் சிறுதானியப் பயிர்களுக்கும் கிழங்கு வகைகளுக்கும் பேர் போன யாழ்ப்பாணம் இன்று அதை இழந்து வருகிறது. முன்னர் பச்சைப் பசேல் என்றிருக்கும் யாழ்ப்பாணத்து கிராமங்கள் இப்பொழுது அனல் பறக்கும் ஊர்களாக மாறியுள்ளன. பயிர்மணம் மாறி கட்டிட வாசனை தலைதூக்கியுள்ளது. 
இதில் அபாய நிலை என்னவென்றால் எதிர்கால யாழ்ப்பாணத்திற்கு தண்ணீர் பிரச்சினை என்பது பெரும் சவாலாக உள்ளதாக கூறப்படுகின்றமையே.  யாழ்ப்பாணத்திற்கான நீரினை யாழ்ப்பாணத்திற்கு வெளியே  இருந்து கொண்டுவருவதற்கான முயற்சிகள் கடுமையாக நடைபெறுகின்றன.  அது கூட இன்னும் சரியாகத் தீர்மானிக்கப்படாத நிலையிலேயே அல்லது எந்த உத்தரவாதமும் இல்லாத நிலையிலேயே உள்ளது.
யாழ்ப்பாணத்தின் குடிசனப் பரம்பலை கவனத்திற்கொண்டும் யாழ்ப்பாணத்தின் நிலம்  மற்றும் இயற்கை வளங்கள் தொழில் வளம் போன்றவற்றைக் கருத்திற்கொண்டுமே யாழ்ப்பாணத்திற்கு வெளியேயான குடியேற்றத்திட்டங்கள் கடந்த நூற்றாண்டில் முன்னெடுக்கப்பட்டன.  இதன்படி வன்னியில் கிளிநொச்சி முரசுமோட்டை தருமபுரம் பிரமந்தனாறு விசுவமடு உடையார்கட்டு சுதந்திரபுரம் தேவிபுரம் முத்துஐயன்கட்டு திருவையாறு வட்டக்கச்சி உருத்திரபுரம் அக்கராயன்குளம் வன்னேரிக்குளம் வவுனிக்குளம் துணுக்காய் மல்லாவி முழங்காவில் கரியாலைநாகபடுவான் கனகராயன்குளம் ஜெயபுரம் போன்ற பல குடியேற்றத் திட்டங்கள் உருவாக்கப்பட்டன.
புலப்பெயர்வும் வன்னிக் குடியேற்றங்களும் இல்லாதிருந்தால் யாழ்ப்பாணத்தின் குடிப்பரம்பல் - அல்லது சனத்தொகை என்பது இன்று யாழ்ப்பாணத்திற்கான பிரதான சவாலாக மேலும் இருந்திருக்கும்.  குடியிருப்புக்கான நிலம் விவசாயச் செய்கைக்கான நிலம் தண்ணீர் மற்றும் இயற்கை வளங்கள் போன்றவை பெரும் பற்றாக்குறையை ஏற்படுத்தி இருக்கும்.
தற்போது யாழ்ப்பாணத்தில் உள்ள மக்கள் புதிதாக நிர்மாணப் பணிகளை மேற்கொள்வதற்குப் போதிய இடவசதி இல்லாத நிலையே காணப்படுகிறது.  அரச நிர்வாகங்களைக்கூட மேலும் விரிவாக்கம் செய்வதற்கோ நவீனப்படுத்துவதற்கோ முடியாத நிலையே அங்கே காணப்படுகிறது. வடக்கு மாகாண சபை பல வீடுகளின் கோடிகளுக்குள் இயங்குகிறது என்று ஒருவர் வேடிக்கையாகச் சொன்னது ஏற்றுக்கொள்ளக் கூடிய உண்மையே.
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் பொறியியல் பீடம் விவசாய பீடம்; போன்றவற்றைக் கூட எதிர்காலத்தில் நிர்மாணிப்பதற்கோ வரிவாக்கம் செய்வதற்கோ அங்கே இடவசதி இல்லை.  யாழ்ப்பாணக் குடாநாட்டின் வீதிகளை விரிவாக்கம் செய்வதற்கே முடியாத நிலை இதற்கு சிறந்த உதாரணம்.  தற்போதுள்ள நகரில் குடியிருப்புக்களை விஸ்தரிக்கவும் நவீனப்படுத்தவும் வேண்டுமாயின் அது மிகப்பெரிய சவாலுக்குரிய பணியாகவே இருக்கும்.
எனவேதான் இருக்கின்ற அளவுக்குள் சுருக்கிக் கொள்ளுதல் அல்லது சுருங்கிக் கொள்ளுதல்; என்ற நிலையில் யாழ்ப்பாணத்தின் திட்டங்கள் உள்ளன.  இதற்கு மேலாக முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்திப் பணிகள் எல்லாம் எந்தத் திட்டங்களுக்குள்ளும் முறைப்படுத்தப்படவில்லை.  இதனால்தான் பயிர்ச்செய்கை நிலங்கள் வீடுகளாகவும் வளவுகளாகவும் வணிக வளாகங்களாகவும் மாற்றப்படுகின்றன.  
உண்மையில் யாழ்ப்பாணத்தைக் குறித்துச் சிந்திப்போர் தற்போது யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகள் தொடர்பாக புதிய சிந்தனையுடனேயே இருப்பர்.
யாழ்ப்பாணத்தின் நிலப்பிரச்சினை இயற்கை வளங்களின் பற்றாக்குறை சனப்பரம்பல் போன்றவற்றை வைத்து யாழ்ப்பாணத்தின் எதிர்காலம் குறித்துச் சிந்திக்கும்போது அங்கே அமைக்கப்படவேண்டிய குடியிருப்புக்களின் முறைகளில் உடனடியாகப் பாரிய மாற்றம் செய்யப்படுவது அவசியம்.  தொடர்மாடி அல்லது செறிவடர்த்தி கூடிய குடியிருப்புத்திட்டத்தை ஆரம்பிக்க வேண்டிய அவசியத்தில் தற்போதய யாழ்ப்பாணம் உள்ளது. இவ்வாறு கூறுவது இன்று வேடிக்கையாக இருக்கலாம்.  ஆனால் எதிர்கால நெருக்கடியின்போது இந்தக் கூற்றின் வலு உணரப்படும்.

கருத்துகள் இல்லை: