திங்கள், 3 அக்டோபர், 2011

ஜனாதிபதி - டக்ளஸ் சந்திப்பு - அரசியல் தீர்வு குறித்து பேச்சு





ஜனாதிபதி - டக்ளஸ் சந்திப்பு - அரசியல் தீர்வு குறித்து பேச்சுஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

கடந்த 30ம் திகதி மாலை அமைச்சரின் வாசஸ்தலத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இக்கலந்துரையாடலின் போது பாராளுமன்ற தெரிவுக்குழு மற்றும் அரசியல் தீர்வு போன்ற விடயங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டதாக ஈபிடிபி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

விரைவானதும் கௌரவமானதுமான அரசியல் தீர்வுத் திட்டம் தொடர்பில் இங்கு வலியுறுத்தப்பட்டதுடன் இன்னமும் மீள்குடியேற்றம் செய்யப்படாதிருக்கும் மக்களை விரைவில் மீள்குடியேற்றம் செய்வது தொடர்பிலும் புனர்வாழ்வு நிலையங்களில் எஞ்சி இருக்கும் இளைஞர், யுவதிகளை விரைவில் விடுவிப்பது தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

அத்துடன் அரசியல் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களை கூடிய விரைவாக விசாரணைகள் செய்வது அவர்களை விடுதலை செய்வது குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டது.

மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் மற்றும் அபிவிருத்தி குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.

இங்கு கலந்துரையாடப்பட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரைவாக நடவடிக்கைகள் படிப்படியாக மேற்கொள்ளப்படுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக ஈபிடிபி விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: