திங்கள், 3 அக்டோபர், 2011

தெலுங்கானா மாநிலம் கோரி இதுவரை 600 பேர் தற்கொலை!




ஹைதராபாத்: தெலுங்கானாவை தனி மாநிலமாக அறிவிப்பதில் தாமதம் ஏற்படுவதால் 18 வயது கல்லூரி மாணவி தீக்குளித்து இறந்தார். தெலுங்கானா விவகாரத்திற்காக இதுவரை 600 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Telangana Protest
ஆந்திர மாநிலத்தில் உள்ள ஹயாத் நகரைச் சேர்ந்தவர் டி. பவானி (18). நகோலேவில் உள்ள நவோதயா ஜூனியர் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். அவர் தெலுங்கானா போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். கடந்த 3 ஆண்டுகளாக போராட்டம் நடந்து வருகின்றபோதிலும் இன்னும் தெலுங்கானா தனி மாநிலமாக்கப்படவில்லை. இதைக் கண்டித்து பவானி நேற்று காலை 11 மணியளவில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீயை வைத்துக் கொண்டார்.
இதில் பவானி உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.

அவர் இறப்பதற்கு முன்பு வீட்டுச் சுவற்றில் ஜெய் தெலுங்கானா! தெலுங்கானா தனி மாநிலமாகாது என்று அஞ்சித் தான் நான் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று எழுதி வைத்திருந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பவானியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஒஸ்மானியா பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

மதியம் 2 மணியளவில் நகர் கர்ணூல் எம்.எல்.ஏ. நாகம் ஜனார்த்தன் ரெட்டி பவானி வீட்டுக்கு வந்து அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். இதையடுத்து அவர் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து பீதாம்பர்பேட்டையில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டார். சுமார் 1 மணி நேரத்திற்கு இந்த போராட்டம் நீடித்தது. இதனால் அங்கு போக்குவரத்து ஸ்தம்பித்தது.

இதே போன்று தெலுங்கானா தனி மாநிலமாக அறிவிக்கப்படாததால் மனமுடைந்த ஆந்திர அரசு போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்த நடத்துநர் லக்ஷ்மையா (30) மின்விசிறியில் தூக்கு போக்கு தற்கொலை செய்து கொண்டார்.

மேதக் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ரவீந்தர் தெலுங்கானா தனி மாநிலமாக்கப்படாததை கண்டித்து தீக்குளித்தார். படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

தெலுங்கானாவை தனி மாநிலமாக்கக் கோரி கடந்த 2009-ம் நவம்பர் மாதத்தில் இருந்து இது வரை 600 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதில் பெரும்பாலானோர் மாணவ, மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தெலங்கானா ராஷ்டிர சமிதி தலைவர் சந்திரசேகர ராவ் இன்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசுகிறார். தெலுங்கானா விவகாரத்தில் சமரசத்திற்கே இடமில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: