வெள்ளி, 24 ஜூன், 2011

TNA யின் அடாவடித்தனம் அனுமதி பெறாமல் கூட்டம் ராணுவத்திடம் தகராறு பண்ணி வாக்கு அள்ளும் பேராசை

முன் அனுமதி பெற்றே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் கலந்துரையாடல்களை நடாத்த வேண்டும்: பிரதமர் டீ.எம். ஜயரத்தின


வடக்கில் அரசியல் கலந்துரையாடல்களை நடாத்துவதாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதற்கான முன் அனுமதியைப் பெற்றுக் கொண்டிருக்க வேண்டும் என்று பிரதமர் டீ.எம். ஜயரத்தின தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றம் நேற்றுப் பகல் ஒரு மணிக்கு பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தலைமையில் கூடிய போது தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் சிறப்புரிமை மீறல் பிரச்சினையொன்றை சபையின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

யாழ். அளவெட்டியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கலந்துரையாடல் நடைபெற்ற போது தாக்குதல்கள் நடத்தப்பட்ட சம்பவம் குறித்து அவர் பாராளுமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்தார். பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட அரசியல் கலந்துரையாடல் மீது தாக்குதல் நடாத்தப்பட்டதன் மூலம் பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதுடன், அரசியல் உரிமையும் மறுக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியிருந்தார்.

யாழ். அளவெட்டியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கலந்துரையாடல் நடைபெற்ற போது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இது வரை 11பேரிடமிருந்து சம்பவம் தொடர்பில் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதற்குப் பதிலளித்த பிரதமர் டி.எம். ஜயரத்ன தெரிவித்தார்.

இராணுவத்தினர் தான் இத்தாக்குதல்களை நடத்தினார்கள் என்று விசாரணைகளிலிருந்து உறுதியானால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். தாக்குதல் சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணைகளின் விபரங்கள் முடிவடையாத காரணத்தால் அதனை வெளியிட முடியாதுள்ளது.

எவ்வாறாயினும் இது தொடர்பாக விசேட விசாரணைகள் நடத்தப்படுகின்றன. எனினும் கூட்டமைப்பினர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் பொய்யான தகவல்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

மேலும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரின் தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்கு பூரண பாதுகாப்பு வழங்கப்படும். அதே நேரம் வடக்கில் நடாத்தும் அரசியல் கலந்துரையாடல்களுக்கு முன்கூட்டியே அனுமதி பெறுவதும் மிக முக்கியமானதென்றும் பிரதமர் டி.எம்.ஜயரத்ன கூறினார்.

கருத்துகள் இல்லை: