வியாழன், 23 ஜூன், 2011

பத்திரிகைகள் சொல்லும் பொய்யை உண்மையாக்கவே கனிமொழி கைது-கலைஞர்

கலைஞர் 
சென்னை: 2ஜி விவகாரம் தொடர்பாக பத்திரிகைகள் எழுதி வரும் பொய்யை உண்மையாக்க சிபிஐ துடிக்கிறது. அதனால்தான் கனமொழியைக் கைது செய்து பத்திரிகைகள் கூறுவது உண்மை என்று மாற்றப் பார்க்கிறது சிபிஐ என்று கூறியுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.

தனக்கு சாதகமாக எழுதினால் அந்தப் பத்திரிக்கை சொல்லி விட்டது பார், இந்தப் பத்திரிக்கை சொல்லி விட்டது பார் என்று மேற்கோள் காட்டுவார் கருணாநிதி. அதேசமயம், யாராவது விமர்சித்தோ அல்லது உணமையைச் சொல்லியோ எழுதி விட்டால் அந்த பத்திரிக்கையை நாறடித்து விடுவார். அதேபோலத்தான் சமீப காலமாக கனிமொழி கைது தொடர்பாக பத்திரிகைகளை கடுமையாக சாடி வருகிறார் கருணாநிதி.

சமீபகாலத்திய கருணாநிதி பேட்டிகளிலெல்லாம், கனிமொழி குறித்த கேள்விகளைக் கேட்கும்போதெல்லாம் பத்திரிகைகளும், சிபிஐயும்தான் காரணம் என்று அவர் குற்றம் சாட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது மகள் கனிமொழியை திஹார் சிறைக்குப் போய் பார்த்து விட்டு நேற்று இரவு சென்னை திரும்பிய கருணாநிதியை செய்தியாளர்கள் வழக்கம் போல சந்தித்தனர். அப்போது அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு வழக்கம் போல பதிலளித்தார் கருணாநிதி.

அந்த கேள்வி பதில் விவரம்:

கேள்வி: டெல்லியில் கனிமொழியைப் பார்த்தீர்களா? எப்படி இருக்கிறார்?

கருணாநிதி: திகார் சிறைச்சாலையிலே எப்படி இருப்பார்களோ அந்த அளவுக்கு வாடிக் கொண்டிருக்கின்றார். சிறிதும் மனிதாபிமானமற்ற முறையில் கனிமொழியும், சரத்குமாரும் அந்தச் சிறையிலே அடைக்கப் பட்டிருக்கிறார்கள். கனிமொழி மீது போடப்பட்ட வழக்கு, குற்றச்சாட்டு இவைகள் எல்லாமே பத்திரிகைகளிலே எழுதிய அவதூறுச் செய்திகளின் அடிப்படையில் போடப்பட்ட வழக்குகள்தான். அப்படி அவதூறாக வெளியிடப்பட்ட செய்திகளை உண்மைதான் என்று நிரூபிப்பதுதான் இன்றைய தங்களுடைய கடமை என்று சி.பி.ஐ. அதிகாரிகள் கருதுகிறார்கள் என்று நினைக்கிறேன்.

கனிமொழி உடல் முழுவதும் வீக்கம், கொப்பளம்

நான் டெல்லிக்கு கனிமொழி, சரத்குமார் மற்றும் ராஜா போன்றவர்களைச் சந்திப்பதற்காகச் சென்றேன். அங்குள்ள நிலையில் திகார் சிறையில் கனிமொழிக்கு அந்தச்சூழல் ஒத்துவராமல் உடம்பெல்லாம் வீக்கங்களாகவும், கொப்பளங்களாகவும் வந்து மிகுந்த அவஸ்தையில் இருக்கிறார். அதேபோலத்தான் சரத்குமாரின் உடல் நிலையும் மிகவும் பலவீனமாக இருக்கிறது.

கேள்வி: கனிமொழியின் நிலையைப் பார்க்கும்போது, ஊடகங்களைத் தவிர்த்து அதற்குயார் காரணம் என்று நினைக்கிறீர்கள்?

கருணாநிதி: கேட்பவர்கள் கூட காரணமாக இருக்கலாம்.

கேள்வி: கனிமொழியின் ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றம் தற்போது நிராகரித்துள்ளது. அடுத்த கட்டமாக என்ன செய்யப்போகிறீர்கள்?

கருணாநிதி: அதைப் பற்றித்தான் வழக்கறிஞர்களிடம் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

கேள்வி கேட்கிற நிலையில் காங்.குடன் உறவு

கேள்வி: காங்கிரசுக்கும் தி.மு.க.வுக்கும் உள்ள உறவு எப்படி இருக்கிறது?

கருணாநிதி: நீங்கள் கேள்வி கேட்கிற நிலைமையில் இருக்கிறது.

கேள்வி: அப்படியென்றால் பிரச்சினை இருக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாமா?

கருணாநிதி: எந்த பிரச்சினையும் இல்லை.

கேள்வி: டெல்லியில் காங்கிரஸ் தலைவர்கள் யாரையாவது சந்தித்தீர்களா?

கருணாநிதி: யாரையும் பார்க்கவில்லை. மத்திய அமைச்சர் வயலார் ரவி அவர்கள்தான் நண்பர் என்ற முறையில் சந்தித்தார். அதிகார பூர்வமாக எந்தத் தலைவர்களையும் நானும் பார்க்கவில்லை, அவர்களும் பார்க்கவில்லை.

கேள்வி: தி.மு.கழகத்தின் பொதுக்குழுக் கூட்டம் எப்போது?

கருணாநிதி: ஜுலையில் தேதி இன்னும் நிச்சயமாகவில்லை.

கேள்வி: மத்திய அமைச்சரவை மாற்றத்தில் தி.மு.க.வுக்கு மேலும் வாய்ப்பு இருக்குமா?

கருணாநிதி: எனக்குத் தெரியாது.

கேள்வி: ஊழல் எதிர்ப்புச் சட்டத்தில் முதலமைச்சரை தமிழகத்திலே சேர்த்ததைப் போல, பிரதமரும் லோக்பால் மசோதாவில் சேர்க்கப்பட வேண்டும் என்பதுதான் உங்களுடைய கருத்தா?

கருணாநிதி: உங்கள் யூகத்திற்கே விட்டு விடுகிறேன். நாங்கள் கொண்டு வந்த சட்டத்தில் முதல்வரை சேர்த்துத்தான் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்டோம். இப்போது என்ன செய்ய வேண்டும் என்பதை உங்கள் யூகத்திற்கே விட்டு விடுகிறேன்.

லோக்பால் மசோதா

கேள்வி: "லோக் பால்'' மசோதா பற்றி தி.மு.கழகத்தின் நிலைப்பாடு என்ன?

கருணாநிதி: ஏற்கனவே திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றபோதே, இதுபோன்ற ஒரு சட்டம் ஊழல் ஒழிப்புச் சட்டம் மாநில அளவில் தமிழக அரசினால் கொண்டு வரப்பட்டது. அந்தச் சட்டத்தில் முதல்வரையும் இணைத்து, முதல்வர் உட்பட அனைவரையும் அந்தச் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டலாம், அவர்கள் மீது வழக்குப் போடலாம் என்று உரிமை கொடுக்கப் பட்டிருந்தது. அதுதான் தி.மு.கழகத்தின் நிலை. இப்போது டெல்லியில் என்ன முடிவெடுக்கிறார்கள் என்று தெரியவில்லை. தெரிந்த பிறகு அதைப் பற்றிச் சொல்கிறேன்.

கேள்வி: தாங்கள் புதிய தலைமைச் செயலகம் கட்டியதையொட்டி இன்றைய தினம் தமிழக அரசு விசாரணைக் கமிஷன் ஒன்றை நீதிபதி தங்கராஜ் அவர்களைக் கொண்டு அமைத்திருக்கிறார்களே, அதைப் பற்றி?

கருணாநிதி: எந்த அடிப்படையில் விசாரணைக் கமிஷனை அமைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. வந்த பிறகு சொல்கிறேன்.

சுய விளம்பரப் போராட்டத்தை ஆதரிக்க மாட்டேன்

கேள்வி: அன்னா ஹஸாரே நடத்துகின்ற போராட்டத்தை நீங்கள் ஆதரிக்கிறீர் களா?

கருணாநிதி: பொதுவாக நல்ல காரியங்களுக்காக நடத்தப்படுகின்ற போராட்டத்தை நான் ஆதரிப்பேன். தங்கள் சுய விளம்பரத்திற்காகவோ, அரசாங்கத்தை பயமுறுத்துவதற்காகவோ நடைபெறுகின்ற உள்நோக்கம் கொண்ட எந்தப் போராட்டத்தையும் எங்களால் ஆதரிக்க முடியாது என்றார் கருணாநிதி.

English summary
DMK chief Karunanidhi once agains has slammed Media and CBI for Kanimozhi's ordeal. He slammed CBI and Media in his yesterday's brief interaction with mediapersons after his return from Delhi. He went to Tihar jail to meet his daughter Kanimozhi, who has been lodged there for her involvement in 2g scam. Karunanidhi said, CBI arrested my daughter only to prove what media is writing against her right. "Kanimozhi is suffering in Tihar jail, her arrest and imprisonment is inhuman", he added.

கருத்துகள் இல்லை: