வெள்ளி, 24 ஜூன், 2011

ராகுல் காந்தி பிரதமராவது சாத்தியமா?


இவ்வளவு நாள் என்னமோ விளையாட்டுத்தனமா நேரு மாமா,இந்திரா காந்தி அன்னை,ராஜிவ் அண்ணன்னு சொந்தம் கொண்டாடி மன்னராட்சிக்கு மாறாக ஒரு பரம்பரை ஆட்சி வருவதற்கு இந்திய மக்கள் துணை போய் விட்டார்கள்.அதிகார பிறப்பின் இருப்பால்,விருப்பால் மத்தியிலும்,மாநிலத்திலும் அதற்கான சூழல்கள் உருவாகக் கூடும்.சுயமான முயற்சியாளர்களாய் இருந்திருந்தால் ராகுல்,ஸ்டாலின் போன்ற ஆளுமைகள் இந்தியாவிற்கு தேவையென்றாலும் வாரிசு அரசியலின் விளம்பரத்தால் இவர்கள் ஆட்சி பீடத்தில் அமர்வது இந்தியா என்ற ஜனநாயகத்திற்கு நல்லதல்ல.இருந்தாலும் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்கிற வாசகப் படி இதனை காலம் எப்படி பதிவு செய்யப்போகிறது என்று கணிப்பதற்காக வேண்டி இந்த பதிவு.

இப்ப சுப்ரமணியன் சாமி என்ன சொல்றாருன்னா,ராகுல் காந்தி பிரதமர் பதவிக்கு வர முடியாதாம்!ஏனய்யா உனக்கு எப்ப பார்த்தாலும் குட்டையக் குழப்பி விடுறதே பொழப்பா போச்சுன்னு அலுத்துக்கொள்றவங்களுக்கு அவர் என்ன சொல்றாருன்னா...சோனியா பெருந்தன்மையா பிரதமர் நாற்காலியை மன்மோகன் சிங்கிற்கு விட்டுக் கொடுத்திட்டதாகத்தான் நான் கூட முன்னாடி நம்பிகிட்டிருந்தேன்.ஆனால் சோனியாவுக்கே பிரதமர் நாற்காலி மேல ஒரு கண்ணு இருந்துச்சாம்.அதுல மண்ணை அள்ளிப் போட்டது நம்ம முந்தைய ஜனாதிபதி அப்துல் கலாம் என்கிறார்.எப்படின்னா சட்டப்படி சோனியா பிரதமர் ஆகமுடியாதுன்னு தமிழ்நாட்டுல இருந்து டெல்லிக்கு மூடிய கடிதம் போகிறமாதிரி ஒரு கடிதத்தை எழுதி அதனை சோனியாவுக்கு அனுப்ப அந்தக் கடிதத்தை படிக்கும் போது சாட்சியாக இருந்தவர்கள் அப்போது சதாம் உசைன் ஈராக் ஊழலில் சிக்கிக் கொண்ட நட்வர்சிங்கும்,பிரதமர் மன்மோகன் சிங்கும் என்கிறார் சுப்ரமணியன் சாமி.

எனவே ராகுல் காந்தி சோனியாவின் அனுபவத்திலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் சோனியா மட்டுமல்ல அவரது இரு குழந்தைகளும் பிரதமராக முடியாதுன்னு பத்த வச்சுட்டார்.இதற்கு சுப்ரமணியன் சாமி சொல்லும் இன்னுமொரு காரணமென்னவென்றால் ராகுல் காந்தி இத்தாலியன் பாஸ்போர்ட்டில்தான் வேறு ஒரு பெயரில் ஐரோப்பா முழுவதும் சுற்றி வந்தாராம்.

Does Subramanian swamy got a valid point.?
காலம்தான் இதற்கு பதில் சொல்லவேண்டும்.

எவன் மாட்டுவான்னே ராத்திரி தூங்குற போது சுப்ரமணியன் சாமி நினைச்சுகிட்டு தூங்குவாரோன்னு தெரியல. மாட்டுனது திக்விஜய் சிங்க். சிங்கை ஜன்பத்தின் ஊதுகுழல் என்று ஒரு காய்ச்சு

நானே இந்த திக்விஜய் சிங்க் என்கிற காங்கிரஸ் சிங்குச்சாவை எங்கேயாவது ஒரு பிடி பிடிக்கனுமின்னு பார்த்தேன்.அதற்குள் சுப்ரமணியன் சாமியே முந்திக்கொண்டார்.ஹசாரேவும்,ராம் தேவும் ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்தா முந்தைய முதல்வர் கருணாநிதிக்கு திருமாவளவன் வாய்ஸ் கொடுக்குற மாதிரி காங்கிரஸ்க்கு ஊதுகுழல் திக்விஜய் சிங்க்.நல்லதுக்கு எதிர்ப்பு தெரிவித்தால் பரவாயில்லை,நீ ஏன் ஊழலுக்க்கு எதிராக குரல் கொடுக்கிறாய் என்று திக்விஜய் சிங் அறிக்கை விட்டா இந்தாளை என்ன செய்யலாம்?கரிச்சுக்கொட்டுறதத் தவிர வேறு வழியில்லை.

சரி காங்கிரஸ்தான் இந்த லட்சணத்துல இருக்குதுன்னு பார்த்தா பி.ஜே.பி சொல்லவே வேண்டாம்.தற்போது 2G.4G,ஆதர்ஸ்,காமன்வெல்த் ஊழல்....இதற்கு செயல்படாத பிரதமராக மன்மோகன் சிங்க்,ஊழலுக்கு எதிரான ஹசாரே,ராம் தேவ் குரல்கள்....எவ்வளவு அருமையான சந்தர்ப்பங்கள்.உருப்படியா ஏதாவது மக்களிடம் போய்ச் சேருகிற மாதிரி ஏதாவது செய்ததா என்றால் இல்லை.பல பத்திரிகைகளும்,சில தொலைக்காட்சி ஊடகங்களே இதுவரையிலும் எதிர்க்கட்சி செய்ய வேண்டிய பணியை செய்திருக்கின்றன.

உள்நாட்டுப் பிரச்சினைகளை பின் தள்ளி நாம் சீனாவுடன் தெற்காசிய பொருளாதாரத்தில் போட்டி போட வேண்டிய சூழலில் இருக்கிறோம்.ஊழல், மாவோயிஸ்ட்,பாகிஸ்தான் என்ற பெரும்பிரச்சினகளிலும் சாலை, கல்வி,சுகாதாரம் என்ற அடிப்படைக் கட்டமைப்புக்களிலும் பின் தங்கி 2020ல் இந்தியா வல்லரசு என்ற வார்த்தை இப்ப 2050க்கு பின் தள்ளப்பட்டு விட்டது.எனவே காங்கிரஸ் என்ற வாரிசு அரசியல்,பி.ஜே.பி என்ற மத அடிப்படைகளைக் கடந்து இந்தியா புதிய தலைமைகளையும்,கட்சி மாற்றங்களையும் கொண்டு வரவேண்டும்.அதனை கல்வி மேம்பாடு மட்டுமே செயல்படுத்தும்.
எழுதியவர் ராஜ நடராஜன்

கருத்துகள் இல்லை: