சனி, 25 ஜூன், 2011

Sathyajith சாய்பாபா அந்தரங்க உதவியாளர் பேட்டி


சத்ய சாய்பாபா மரணம் அடைந்த பிறகு புட்டபர்த்தியில் இருந்து காணாமல் போன அவரது அந்தரங்க உதவியாளர் சத்யஜித், சமீபத்தில் சாய்பாபாவின் அந்தரங்க இருப்பிடமான யஜுர் வேத மந்திரம் திறக்கப்பட்டபோதுதான் புட்டபர்த்திக்கு வந்தார். யஜுர் வேத மந்திரத்தின் கதவுகளை திறக்க சத்யஜித்துக்கு மட்டுமே தெரிந்து இருந்ததால்தான் அவர் வரவழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

சத்யஜித் நேற்று மீண்டும் யஜுர் வேத மந்திரத்துக்கு வந்து வணங்கினார்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்ட அவரிடம் நிருபர்கள் பல்வேறு கேள்விகளை கேட்டனர். `யஜுர் வேத மந்திரத்தில் இருந்த தங்கம், வைரம், வைடூரிய நகைகள் மற்றும் பணத்தை அறக்கட்டளை உறுப்பினர்கள் கணக்கில் காட்டாமல் மறைத்து விட்டார்களா? காரில் கடத்தப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட ரூ.351/2 லட்சம் அறக்கட்டளைக்கு சொந்தமானதுதான் என போலீசார் உறுதிப்படுத்தி இருக்கிறார்களே, அதுபற்றி என்ன கூறுகிறீர்கள்?' என்று கேட்டனர்.

அதற்கு பதில் அளித்த சத்யஜித்,

அறக்கட்டளையின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லும் அளவுக்கு நான் பெரியவன் அல்ல. பணம் கடத்தப்பட்டதில் எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை. நான் பக்தராகவும், சாய்பாபாவுக்கு சேவை செய்யவும்தான் ஆசிரமத்துக்கு வந்தேன். சாய்பாபா எனக்கு கொடுத்த பொறுப்புகளை பக்தியுடன் நிறைவேற்றினேன். அந்த பணிகளை செய்வதில் எனக்கு எந்த பிரச்சினையும் ஏற்பட்டது இல்லை.

சத்ய சாய்பாபா உயிருடன் இருந்தபோது நெருக்கமாக இருந்து அவருக்கு சேவை செய்யும் பாக்கியம் எனக்கு கிடைத்தது.

அவர் உடல் நலம் குன்றியதற்கு நான் காரணம் அல்ல. இதுதொடர்பான பத்திரிகை செய்திகள் தவறானவை. உண்மையை சரிபார்க்காமல், பத்திரிகைகள் என்னை குறிவைத்து தாக்குகின்றன.

நான் இப்போதும், பாபா என்னிடம் கொடுத்த பொறுப்புகளை நிறைவேற்றி வருகிறேன். சத்ய சாய்பாபா விட்டுக் சென்ற பணிகளை தொடர்ந்து நிறைவேற்ற வேண்டியது அவரது பக்தர்களின் கடமை ஆகும்’’ என்று கூறினார்.

ரூ.351/2 லட்சம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக, சாய்பாபா அறக்கட்டளை உறுப்பினர்கள் ரத்னாகர், வி.சீனிவாஸ் ஆகியோருக்கு போலீசார் ஏற்கனவே நோட்டீசு அனுப்பியுள்ள நிலையில், அறக்கட்டளை செயலாளர் சக்ரவர்த்திக்கு நேற்று நோட்டீசு அனுப்பினர்.

மேலும், பணம் கைப்பற்றப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஹரிஷானந்த ஷெட்டி, சந்திரசேகர மூர்த்தி, சோகன் ஷெட்டி ஆகியோருக்கு ஹிந்த்பூரில் உள்ள மாஜிஸ்திரேட் கோர்ட்டு நிபந்தனை ஜாமீன் அளித்தது. நகரை விட்டு எங்கும் செல்லக்கூடாது, மறுஉத்தரவு வரும்வரை, ஒருநாள் விட்டு ஒருநாள் போலீசார் முன்பு ஆஜராக வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது.

கருத்துகள் இல்லை: