ராஜாவின் மனைவி பரமேஸ்வரி, ராஜாவின் அண்ணனும், சென்னை அண்ணா பல்கலை பருவநிலை மாற்ற ஆய்வுத்துறை இயக்குனருமான ராமச்சந்திரன், திருச்சி பி.எஸ்.என்.எல்.,லில் வேலைபார்க்கும் சகோதரி மகன் மற்றும் அவர்களின் உறவுக்கார பெண் ஆகிய நால்வரையும் விசாரணைக்காக, திருச்சி வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி, அவர்கள் நால்வரும் நேற்று, காலை 10.30 மணிக்கு திருச்சி வருமான வரித்துறை அலுவலகத்துக்கு வந்தனர். அவர்களிடம், வருமான வரித்துறை துணை கமிஷனர் ஆல்பர்ட் மனோகரன் உள்ளிட்ட குழுவினர் விசாரணை நடத்தினர். ஒரு மணிநேர விசாரணைக்கு பின், உறவுக்கார பெண்ணும், ராஜாவின் சகோதரர் மகனும் அனுப்பப்பட்டு விட்டனர். அதன்பின், ராஜாவின் மனைவி பரமேஸ்வரியிடமும், ராமச்சந்திரனிடமும், வருமான வரித்துறை துணை கமிஷனர், அவர்களது சொத்துக்கள் தொடர்பாக துருவித் துருவி விசாரணை நடத்தினார்.
பரமேஸ்வரிக்கும், ராமச்சந்திரன் குடும்பத்துக்கும் திடீரென பெரிய அளவில் சொத்துக்கள் கிடைத்தது எப்படி என்றும், சில நிறுவனங்களில் பங்குதாரராக சேர பணம் எங்கிருந்து வந்தது என்றும், அவர்கள் பெயரில் உள்ள சொத்துக்கள் வாங்க பணம் எங்கிருந்து வந்தது என்றும் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. அதற்கு பதில் சொல்ல முடியாமல் இருவரும் திணறியதாக, வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ராஜா மனைவியும், அண்ணனும் வருமான வரித்துறையினரின் மூன்று மணி நேர விசாரணைக்கு பின், வெளியே வந்து, காரில் புறப்பட்டுச் சென்றனர். விசாரணைக்கு வந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவின் குடும்பத்தினருடன், பிரான்சிஸ், முத்துகுமாரசுவாமி, சுரேஷ்குமார் ஆகிய மூன்று ஆடிட்டர்களும் வந்திருந்தனர்.
இதுகுறித்து ஆடிட்டர் முத்துகுமாரசுவாமி நிருபர்களிடம் கூறுகையில், ""பரமேஸ்வரி உள்ளிட்ட நான்கு பேர் தாக்கல் செய்த வருமான வரிக்கணக்கில் ஏற்பட்ட சந்தேகத்தை தீர்க்கவே, விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இது வழக்கமான விசாரணை தான்,'' என்று தெரிவித்தார். ஆனால், ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கை அமலாக்கத்துறை, சி.பி.ஐ., வருமான வரித்துறை ஆகிய மூன்று துறைகளும் விசாரித்து வருவதால், அந்த ஊழலுக்கும், இவர்களிடம் உள்ள சொத்துக்களுக்கும் தொடர்பு இருக்குமோ? என்ற சந்தேகத்தின் பேரில் தான் விசாரணை நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் இன்னும் இரண்டு வாரங்களில், மூன்றாவது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவுள்ள நிலையில், ஊழல் வழக்கில் சிக்கியுள்ள ராஜாவின் குடும்பத்தாரிடம், திருச்சி வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்தியுள்ள விசாரணை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக