கடந்த தி.மு.க., ஆட்சியின்போது அமல்படுத்தப்பட்ட இலவச கலர் "டிவி', இலவச இன்சூரன்ஸ் திட்டம் உள்ளிட்ட திட்டங்களில் கமிஷன் நிதி முறைகேடுகள் நடந்திருப்பதாக ஆரம்பம் முதலே அ.தி.மு.க., குற்றம் சாட்டி வருகிறது. ஆட்சி மாற்றத்துக்கு பின், இத்திட்டங்கள் தொடர்பான கோப்புகளை கையிலெடுத்துள்ள தமிழக அரசு, சிறப்பு அதிகாரிகள் குழு மூலமாக தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது. தவிர தனியார் நிலம், சொத்துகள் அபகரிப்பு நடந்துள்ளதா என்றும் மாநிலம் முழுவதும் தகவல் திரட்ட போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது. தமிழக சட்டம் - ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., ஜார்ஜ், மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு போலீஸ் அதிகாரிகளை சந்தித்து, நிலம் அபகரிப்பு குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறார். இதன் விளைவாக, நிலம் அபகரிப்பு கும்பலுக்கு எதிரான நடவடிக்கை வேகப்படுத்தப்பட்டுள்ளது. நிலம் அபகரிப்பு குற்றங்களில் பெரும்பாலானவை போலீஸ் உயரதிகாரிகளின் துணையுடன் நடந்திருப்பதாக அரசுக்கு தகவல்கள் சென்றுள்ளன. தனியார் நிலத்தை ஆக்கிரமிக்கும் முன்னர் அரசியல் பிரமுகர்கள், ரியல் எஸ்டேட் அதிபர்கள், கட்டுமான நிறுவன அதிபர்கள், போலீஸ் உயரதிகாரிகளை சந்தித்து பேசியதாகவும், அப்போது, எங்கள் மீது புகார் வந்தால் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டாம்' என்று கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
அமைச்சர்கள், கட்சி பிரமுகர்களின் சிபாரிசு, நிர்பந்தம் காரணமாக போலீஸ் உயரதிகாரிகளில் பலரும், நிலம் அபகரிப்புக்கு துணை போயுள்ளனர். இதற்கு பிரதிபலனாக பணமாகவும், வீட்டு மனைகளாகவும், அபார்ட்மென்ட் வீடுகளாகவும் உயரதிகாரிகளுக்கு பினாமிகள் பெயரில் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதேபோன்று, இவ்விவகாரங்களுக்கு அடிமட்ட அளவில் உதவி செய்த ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர்கள், டி.எஸ்.பி.,க்கள் சிலருக்கும் லட்சக்கணக்கிலான பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. கடந்த தி.மு.க., ஆட்சியின் போது ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை கோவையில் மொத்தமாக விலைக்கு வாங்கி, ரியல் எஸ்டேட் தொழிலை உச்சத்துக்கு கொண்டு சென்ற, "திடீர்' சினிமா பட அதிபருடன் போலீஸ் உயரதிகாரிகள் இருவர் நெருங்கிய தொடர்பு வைத்து, வீட்டு மனைகள் மற்றும் நிலங்களை "மிகக் குறைந்த விலையில்' வாங்கியதாக அப்போதே குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதேபோன்று, தமிழகத்தின் பல்வேறு இடங்களில், முக்கிய பொறுப்புகளில் பணியாற்றிய ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் சிலர் மீதும் புகார் கிளம்பியது. எனினும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், ஆளுங்கட்சியினர் தயவில் பொறுப்புகளில் இருந்ததால், சட்டப்படியான நடவடிக்கைகளில் இருந்து எளிதாக தப்பினர். தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், தமிழக அரசின் பார்வை, போலீஸ் உயரதிகாரிகள் மீதும் விழுந்துள்ளது. கடந்த ஆட்சியில் அமைச்சர்கள், கட்சி பிரமுகர்களுடன் தனிப்பட்ட தொடர்பு வைத்திருந்த போலீஸ் அதிகாரிகள் குறித்து, ரகசிய தகவல் திரட்ட அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான விசாரணை மற்றும் ரகசிய தகவல் சேகரிப்பில், தற்போது முக்கிய பொறுப்புகளை வகிக்கும் போலீஸ் உயரதிகாரிகளில் சிலர் ஈடுபட்டுள்ளனர்.
போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், உயரதிகாரிகள் அரசுக்கும், மக்களுக்கும் தான் விசுவாசமாக பணியாற்ற வேண்டுமே தவிர, ஆளுங்கட்சியினருக்கு அல்ல. ஆனால், சமீப ஆண்டுகளில் உயரதிகாரிகளில் பலரும் அத்து மீறி செயல்பட்டுள்ளதாகவும், அதன் மூலமாக பணப்பயன் அடைந்ததாகவும் தற்போதைய அரசுக்கு புகார்கள் சென்றுள்ளன. உயரதிகாரிகளே ஆளுங்கட்சியினருக்கு சாதகமாகச் செயல்பட்டதால், கீழ் நிலையிலுள்ள போலீசாரும் கடமையை மீறியுள்ளனர். அரசு ஊழியர் ஒருவர் சொந்தமாக வாகனம் வாங்கினால் கூட, அதை முறைப்படி பதிவு செய்ய வேண்டுமென பணியாளர் நடத்தை விதிகள் கூறுகின்றன. ஆனால், போலீஸ் உயரதிகாரிகள் சிலர், தங்களது வருமானத்துக்கும் அதிகமான மதிப்பில் பினாமி பெயரில் சொத்துகளை வாங்கியுள்ளதாக தற்போது புதிதாக புகார் எழுந்துள்ளது.
திருப்பூரில் செயல்பட்டு வந்த பாஸி வர்த்தக நிறுவனத்தின் அதிபர்களை மிரட்டி மூன்று கோடி ரூபாய் பறிக்கப்பட்டது தொடர்பான வழக்கில், ஐ.பி.எஸ்., அதிகாரி ஒருவர் மீதும் குற்றச்சாட்டுகள் உள்ளன. அதேபோன்று, இரு ஆண்டுகளில் தென்மாவட்டத்தில் பணியாற்றிய பெண் போலீஸ் உயரதிகாரி ஒருவர், ஆளுங்கட்சி பிரமுகரின் வீட்டில் தங்கி, அவரது "கைப்பாவையாக'வே மாறி, கட்டப்பஞ்சாயத்து மூலமாக பல லட்சம் ரூபாய் சம்பாதித்து போலீஸ் துறைக்கு இழுக்கு ஏற்படுத்தியதாகவும் மேலிடத்துக்கு புகார்கள் சென்றுள்ளன. இவை உள்ளிட்ட போலீஸ் உயரதிகாரிகளின் கடந்த கால முறைகேடுகள் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. மற்றபடி, அதிகாரப்பூர்வ விசாரணைகள் எதுவும் இப்போதைக்கு நடக்கவில்லை. இவ்வாறு போலீஸ் உயரதிகாரி தெரிவித்தார்.
தொழில் பார்ட்னர்கள்: கோவை மாநகர் மற்றும் மாவட்ட போலீசில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர்கள், டி.எஸ்.பி.,க்களில் சிலர், கடந்த 10 ஆண்டுகளில் கோடீஸ்வரர்களாக மாறியுள்ளதாகக் கூறப்படுகிறது. திருப்பூரில் பனியன் நிறுவனம், கோவை புறநகரில் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், டிராவல்ஸ் நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்களில் மறைமுக பங்குதாரர்களாக உள்ளதாக போலீசாரில் சிலர், முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் அனுப்பியுள்ளனர்; இதுகுறித்தும் ரகசிய விசாரணை நடக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக