வியாழன், 23 ஜூன், 2011

ஒரு மெழுகுவர்த்தியின் பயணம்'..சிறையில் மெழுகுவர்த்தி செய்ய கற்றுக் கொள்ளும் கனிமொழி!

டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள திமுக எம்பி கனிமொழி, அங்கு மெழுகுவர்த்தி செய்யக் கற்று வருவதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

கனிமொழி அடைக்கப்பட்டுள்ள திகார் சிறையில் பெண் கைதிகளுக்கான 6ம் எண் பிரிவில், மெழுகுவர்த்தி தயாரிப்புப் பணி நடைபெறுகிறது.

கைதிகள் உபயோகமாக நேரத்தை செலவிடும் வகையில் இந்த தொழில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் மெழுகுவர்த்திகள் சிறையிலுள்ள விற்பனை மையத்தின் மூலமாகவே பொது மக்களுக்கு விற்கப்படுகின்றன.

இந்த மையத்தில்தான் சக கைதிகளிடம் மெழுகுவர்த்தி செய்ய கனிமொழி கற்று வருகிறார்.

அதே நேரத்தில் தனது பெரும்பாலான நேரத்தை புத்தகங்கள் படிப்பதிலும் எழுதுவதிலும் செலவிட்டு வருகிறார்.

தனது ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்பட்டாலும் அதை சாதாரணமாகவே எடுத்துக் கொண்டு சக கைதிகள், காவலர்களிடம் இயல்பாகப் பழகி வருவதாகவும் கூறுகின்றனர்.

இந் நிலையில் முன்பு வேறு சில பெண் கைதிகளோடு சேர்த்து அடைக்கப்பட்டிருந்த கனிமொழி தற்போது தனி அறைக்கு மாற்றப்பட்டுள்ளார். பாதுகாப்பு காரணங்களுக்காக அவருக்கு தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிறை இயக்குநர் ஜெனரல் நீரஜ் குமார் கூறுகையில், சக கைதிகளிடையே அவ்வப்போது நடைபெறும் சண்டைகளில் கனிமொழி சிக்கிக் கொள்ளக் கூடாது என்பதற்காக கனிமொழியை தனி அறைக்கு மாற்றியுள்ளோம். கனிமொழி சிறை விதிகளை முழுமையாகவும், கண்டிப்போடும் கடைப்பிடிக்கிறார் என்றார்.

தினமும் திமுக தலைவர்கள் பலர் கனிமொழியைச் சந்திக்க வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

English summary
The DMK MP Kanimozhi who is lodged in Tihar prison over 2g Spectrum case is learing the process of making candles from other prisoners

கருத்துகள் இல்லை: