வியாழன், 23 ஜூன், 2011

என்னமோ இளையராஜாங்கறாளே. அவனால இப்படி யோசிக்க முடியுமா?”

அடிமைத்தனம் – வருணதருமம் – இந்து ராஷ்டிரம்; பரப்பிரம்மம் – அத்வைதம்” என்று நாடகமாடியவர்களிடமிருந்தும, ஆடிக் கொண்டிருப்பவர்களின் இதயத்திலிருந்தும் சிம்பனி ஊற்றெடுக்க முடியாது. 
திருச்சி – பெல் (BHEL)   அக்கிரகாரத்தைச் சேர்ந்த குழுவொன்று பாலே நடன நிகழ்ச்சிக்கு சிம்பனி இசைத் துணுக்குகளைச் சேகரித்துத் தொகுக்க (திருட) ஒரு பாடல் பதிவுக் கூடத்திற்கு வந்தது. ஆங்கிலப் படங்களில் சிம்பனி இசை ஒலிக்கத் தொடங்கியவுடனே ஒரு பிராணி வாய் திறந்தது. ”ஆகா… என்ன இமாஜினேஷன்! (கற்பனை). என்னமோ இளையராஜா இளையராஜாங்கறாளே. அவனால இப்படி யோசிக்க முடியுமா?”
தங்களுக்குப் புதியதொரு இசை மேதை கிடைத்துவிட்டானென மகிழ்கிறது லண்டன் பிலார்மோனிக் குழு. ”உலகத்தில் சொல்ல வேண்டியதை எல்லாம் 3000 வருடங்களுக்கு முன்பே கங்கைக் கரையிலும் காவிரிக்கரையிலும் சொல்லி முடித்துவிட்டதாக மமதை கொண்டிருக்கும் அரிசி உணவை உட்கொள்ளும் பிராணிகளோ” (புதுமைப்பித்தன்) சங்கடத்தில் நெளிகின்றன.
இளையராஜாவின் சிம்பனி பற்றி எழுதவேண்டும்; ஆனால் எழுதக்கூடாது. இதைச் சனாதனிகள் செய்து விட்டார்கள் – எழுத வேண்டியதை எழுதாமல் இருட்டடிப்பு செய்ததன் மூலம். ராக் என்றால் என்ன? ராப் என்றால் என்ன? மைக்கேல் ஜாக்சன் கொண்டு வரும் இசைக் கருவிகளின் மொத்த எடை என்ன? பாபாசெகல் வெற்றியின் ரகசியம் என்ன? – என்று கூவத்தில் முக்குளித்து முத்தெடுக்கும் பார்ப்பனப் பத்திரிகைகள், சிம்பனி என்றால் என்ன, இளையராஜாவுடைய சாதனையில் பரிமாணம் என்ன என்ற கேள்விகளை மட்டும் எழுப்பிப் பரிசீலிக்கவில்லை. இந்த மவுனத்திற்குக் காரணம் அழுக்காறு, அச்சம்.
அவாள், ஆசார, நியமங்களை மீறிக் கடல் கடந்தார்கள்; ஆங்கிலக் கல்வி கற்றார்கள்; குடுமியை மறைத்து டர்பன் கட்டினார்கள்; கோட்டு, சூட்டு போட்டார்கள்; வெள்ளைக்காரியைக் கூத்தியாளாக வைத்துக் குடித்தனம் நடத்தினார்கள். எல்லாம் சரிதான், ஒரு சிம்பனி இசை அமைக்க முடியவில்லையே ஏன்? செம்மங்குடியிடமும் பாலமுரளியிடமும் ‘நீங்கள் ஏன் இதுவரை சிம்பனி அமைக்கவில்லை’ என்று பேட்டி எடுத்திருக்கலாமே. ‘சரிகமபதநி’க்குள் சகலமும் அடக்கம் என்கிறீர்களே சிம்பனி அதற்குள் அடங்குமா? அடங்காதா? ”சிவபெருமான் அருளிய இசையில் சிம்பனி உண்டா” என்று ஆய்வுக் கட்டுரை எழுதியிருக்கலாமே. இவை எதையும் மேற்படி பத்திரிகைகள் செய்யவில்லை. தங்கள் சங்கீத கலாநிதிகளுக்கும் சிம்பனிக்கும் காததூரம் என்பது அவர்களுக்குத் தெரியும்.
ஏனென்றால் இசை இதயத்தின் மொழி; ஆன்மாவின் கவிதை. சநாதனிகளுடைய ஆன்மாவின் மொழியோ அக்கிரகாரத்தைத் தாண்டியதில்லை. இசையை மடடுமல்ல, இந்தியச் சமூகத்தையே எந்தத் துறையிலும் வளரவிடாமல் தடுப்பது இந்தப் பார்ப்பன இந்துப் பாரம்பரியம்தான். இந்த உண்மையை அம்பேத்கார் துணிந்து வெளியிட்டபோது அதையும் இருட்டடிப்பு செய்தார்க்ள. அதனால்தான் உயிர்வாழும் பிணமான சங்கராச்சாரி ( செத்துப்போன சீனியர் சங்கராச்சாரி ) முன்னால் மணிக்கணக்கில் மண்டியிட்டுக் கிடக்கும் தொலைக்காட்சிக் காமெரா இளையராஜாவை ஏறெடுத்தும் பார்க்க மறுக்கிறது.
ஒருவேளை ”இசை முழுவதுமே – சிம்பனி உட்பட  – தியாகப் பிரும்மத்துக்குள் அடக்கம்” என்று இளையராஜா சரணடைந்து இருந்தால் அவாள் ஆசீர்வதித்திருக்கக்கூடும். மாறாக, ஹேய்டன், பாக், மொசார்ட், பீத்தோவன் ஆகியோரின் வரிசையில் தியாகய்யரையும் சேர்த்தார் இளையராஜா. அப்படிச் சேர்த்தது அவர்களுக்குப் பொறுக்கவில்லை. (தியாகய்யரைப் போய் அம்மேதைகளுடன் சேர்த்தது நமக்கும்தான் பொறுக்கவில்லை). அவர்களைப் பொறுத்தவரை ‘கர்நாடக இசையென்னும் மந்திரச் சிமிழுக்குள், உலகமே அடக்கம். ‘சரஸ்வதி மஹாலின் சமஸ்கிருத ஓலைச்சுவடியைத் திருடிச் சென்றுதான் வெள்ளக்காரனே ராக்கெட் விட்டான்’.
‘சங்கரா பரணம்’, ‘தில்லானா மோகனாம்பாள்’ என்று டஜன் கணக்கில் படமெடுத்து, அவற்றில் இரண்டு மேற்கத்திய இசைத் துணுக்குகளை இசைத்துக் காட்டி எல்லாம் எமக்குள் அடக்கமென்று அற்பத்தனமாகப் பெருமைப்பட்டுக் கொண்டார்கள். அல்லது மேற்கத்திய இசையை விபச்சாரத்திற்கு இணையாக வைத்துக் கொச்சைப் படுத்தினார்கள். இதையெல்லாம் நடுவீதியில் போட்டு உடைத்தார் இளையராஜா. அந்த ஆத்திரம்தான் இந்த மகா மவுனத்திற்கு காரணம்.
மக்கள் எல்லா அறிவையும் பெற உரிமை படைத்தவர்கள்; இசைத் துறையிலும் மக்களின் பாமரத்தனத்தை அகற்ற வேண்டும். அதைச் செய்யாமல் மக்களின் அறியாமை குறித்து வருந்திப் பயனில்லை. ஆனால் மெல்ல மெல்ல அறிவொளி பெறத் தொடங்கும் மக்களை முட்டாள்களாகவே வைத்திருப்பது எப்படி என்று கவலைப்படுகிறார்கள் சனாதனிகள். இல்லையென்றால் பார்ப்பனர்களிலேயே நூற்றுக்கு தொண்ணூற்று ஒன்பது பேருக்கு பரிச்சயமில்லாத கர்நாடக இசையைப் பற்றி பக்கம் பக்கமாக விமர்சனம் எழுதுபவர்கள் சிம்பனியை அறிமுகப்படுத்தி ஏன் எழுதக்கூடாது? சிம்பனி இசை வடிவம் ஐரோப்பியப் பாரம்பரியம். 200 ஆண்டு பாரம்பரியம் இருந்தும் இந்த இசையை ரசிக்கத் தெரிந்தவர்கள் அங்கேயே குறைவு. இசை அமைக்கத் தெரிந்தவர்களோ வெகு குறைவு. இது ஆசியர்களுக்கு, இந்தியருக்கு, தமிழர்களுக்கு வெகுதூரம்; தாழ்த்தப்பட்டவர்களுக்கோ வெகு வெகுதூரம்.
உலகளவில் விஞ்ஞானிகளோ, ஓவியர்களோ, திரைப்பட இயக்குநர்களோ தத்தமது துறை பற்றி ஒன்றாகக் கூடி விவாதித்துவிட முடியும்; ஆனால், இசைத்துறை அப்படியல்ல. இசை விவரணைக்கு அடங்காதது. உணர்ச்சிச் செறிவானது. வேறு எந்த வடிவத்திலும் சொல்ல முடியாததை இசை சொல்கிறது. மங்கலான மேக வலைப் பின்னல்களாக நம்மைச் சுற்றிக் கவியும் இசை, மாயத தோற்றமல்ல; உண்மை. சுலபமாக உணர்ந்து மற்றவர்க்கும் எடுத்துச் சொல்ல இசை கணிதமல்ல. விஞ்ஞானங்களில் ஆகத் துல்லியமானது கணிதம்; கலைகளில் ஆகச் சூக்குமமானது இசை. மார்க்சிய இசையறிஞர் ஐஸ்லர் சொல்வது போல ஐன்ஸ்டீனின் ”ஆற்றல் பற்றிய விதி”யைக் கூட ஜனரஞ்சகமாக விளக்கிவிடலாம்; ஆனால் பீத்தோவனின் ஆக்கத்தை அவ்வாறு எளிதாக விளக்கிவிட முடியாது.
மோசார்ட் - பாக் -பீத்தோவான்
இத்தகையதொரு துறையில்தான் இளையராஜா சாதனை படைத்திருக்கிறார். பாக், மொசார்ட், பீத்தோவனை ரசிக்கத் தெரிந்தவர்களெல்லாம் புதிதாக சிம்பனியைப் படைத்துவிட முடியாது. அதற்குப் பயிற்சியும், ஆற்றலும் மட்டுமல்ல, மன எழுச்சியும் வேண்டும். அது கர்நாடக இசை ‘மேதை’களிடம் கிடையாது. செக்குமாடுகள் மான்களாக முடியாது. கர்நாடக இசையில் செய்வதாகச் சொல்லிக் கொள்ளப்படும் புது முயற்சிகள் கூட வெறும் கழைக்கூத்துகளே.
இன்னொருபுறம் அவர் பாவலருடன் இசைக் குழுவிலிருந்தார், இசையுடனேயே வளர்ந்தார். இன்று சிம்பனி அமைத்துவிட்டார் என்று கூறுவது பாமரத்தனமானதும் அவரது கடும் முயற்சியைக் குறைத்து மதிப்பிடுவதுமாகும். இசை பற்றிய நமது அறிவை, ரசனையை விரிவாக்கிக் கொள்ளும்போதுதான் நமக்கு மறுக்கப்பட்ட அறிவின் பரிமாணம் புரியும். இல்லையேல் நாளை ராஜாவின் சிம்பனி வெளிவந்து அதை உலகவே ரசிக்கும் போது நாம் ரசிக்க முடியாது. நம்மூர் ஆள் போட்ட சிம்பனியை நம் காதிலேயே நுழைவிடாமல் இசை மடமை நம் காதை அடைத்துக்கொண்டிருக்கும்.
திரை இசை இல்லாமல் தனியானதொரு மேதைமையிலிருந்தும் ஊற்றெடுத்து சிம்பனி வந்து விடவில்லை. இதை இளையராஜாவே கூறுகிறார். நமக்குத் தெரிந்த இளையராஜா சினிமா இசை அமைப்பாளர்தான். பல படங்களில் அவரது பின்னணி இசையைக் கேட்கும்போது காட்சியைப் பார்க்காமல் கண்ணை மூடிக் கொள்ளத் தோன்றுகிறது. பாடல் இசை அமைப்புக்களைக் கேட்கும்போது அந்தப் படத்தைப் பார்த்துவிடக் கூடாது என்ற உணர்வேற்படுகிறது. ஒருசில இயக்குநர்களின் படங்களைத் தவிர மற்ற எல்லாவற்றுக்கும் இது பொருந்தும். அவரது இசை பிரம்மாண்டமான வண்ண ஓவியமாக விரிகிறதென்றால் திரைப்படத்தின் காட்சிகள் பொங்கல் வாழ்த்து அட்டைகளை நினைவுபடுத்துகின்றன. இந்தக் கணிப்பில் ஒருவேளை சில பிழைகள் இருக்கலாம்; ஆனால் பொதுவில் இதுவே உண்மை.
  தொடரும்

கருத்துகள் இல்லை: