வெள்ளி, 24 ஜூன், 2011

பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பவர்கள் தப்ப முடியாது : பாகிஸ்தானுக்கு ஒபாமா எச்சரிக்கை

வாஷிங்டன் : ""எங்களை கொல்லும் நோக்கத்துடன் செயல்படும் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பவர்களை, அமெரிக்கா ஒரு போதும் பொறுத்துக் கொள்ளாது. அமெரிக்காவிடம் இருந்து அவர்கள் திறமையாக தப்பித்துக் கொள்ள முடியாது,'' என்று அதிபர் ஒபாமா மறைமுக எச்சரிக்கை விடுத்தார்.

ஆப்கனிலும், பாகிஸ்தான் எல்லைப் பகுதியிலும், அல்-குவைதா மற்றும் தலிபான் பயங்கரவாதிகள் மறைந்திருந்து, உலக நாடுகளை மிரட்டி வருகின்றனர். "பயங்கரவாதிகளின் கூடாரமாக ஆப்கன் இருக்கிறது' என, அமெரிக்க அதிபர் ஒபாமா கூறி வந்தார். ஆப்கனில், சோவியத் யூனியன் படைகளை விரட்டி அடிக்க, அமெரிக்காவால் வளர்க்கப்பட்ட அல் - குவைதா மற்றும் தலிபான் பயங்கரவாதிகள், இறுதியில், அந்நாட்டையே தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த பின்னர் தான் அமெரிக்கா விழித்தது. அமெரிக்காவுக்கே சவாலாக இந்த பயங்கரவாதிகள் மாறினர்.

அமெரிக்க அதிபராக ஒபாமா பதவியேற்ற பின், கடந்த 2009ம் ஆண்டில், ஆப்கனில் முகாமிட்டுள்ள அமெரிக்கப் படை வீரர்களின் எண்ணிக்கையை மும்மடங்காக அதிகரித்தார். தற்போது, ஆப்கனில் ஒரு லட்சம் அமெரிக்கப் படைவீரர்கள் முகாமிட்டுள்ளனர். இதனிடையே, "தலிபான்களுடன், அமைதிப் பேச்சுவார்த்தையை, ஆப்கன் அதிபர் அமித் கர்சாய் தலைமையிலான அரசு துவக்கும். பின்னர் சிறிது, சிறிதாக அந்நாட்டில் இருந்து அமெரிக்கப் படைகள் வாபஸ் பெறப்படும்' என்று அப்போது ஒபாமா பேசினார்.

இந்நிலையில், ஆப்கனில், அமெரிக்கப் படைவீரர்கள் வாபஸ் தொடர்பான அறிவிப்பை, வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில், அமெரிக்க அதிபர் ஒபாமா வெளியிட்டு பேசியதாவது: ஆப்கனில் இருந்து, நடப்பாண்டில் 10 ஆயிரம் வீரர்கள் வாபஸ் பெறப்பட்டு, 2012ம் ஆண்டில் மொத்தம் 33 ஆயிரம் வீரர்கள் வாபஸ் பெறப்படுவார்கள். இவர்கள் வாபசுக்குப் பின், அந்நாட்டில், மீதம் 68 ஆயிரம் அமெரிக்க வீரர்கள் இருப்பார்கள். 2014ம் ஆண்டில், ஆப்கனின் முழுபாதுகாப்பு பொறுப்பும், அந்நாட்டிடம் ஒப்படைக்கப்பட்டு, அனைத்து அமெரிக்கப் படைவீரர்களும் வாபஸ் பெறப்படுவார்கள்.

தலிபான்கள் மீதான போரில், அமெரிக்கா பெரிய அளவில் இழப்பை சந்தித்தது. அதே சமயம், முக்கிய பயங்கரவாதிகள் பலர் கொல்லப்பட்டனர். அமெரிக்காவுடன் இணைந்து, இதன் கூட்டு நாடுகளும், ஆப்கனில் ஸ்திரத்தன்மையை உண்டாக்க உதவின. ஏற்கனவே, ஆப்கனின் சில மாகாணங்கள் மற்றும் நகராட்சிகளின் அதிகாரங்களை, அப்பகுதி மக்களிடம் ஒப்படைக்கும் பணியை துவக்கி விட்டோம்.

தலிபான்களுடனான எங்களது அமைதிப் பேச்சு திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை. அமைதியான ஆப்கன் நாடாக மாற விரும்புபவர்கள் அல்- குவைதா அமைப்பை துண்டித்து வெளியேற வேண்டும். வன்முறையை கைவிட வேண்டும். ஆப்கன் நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை பின்பற்ற வேண்டும். ஆப்கன் நாட்டை பயங்கரவாதிகளின் கூடாரமாக அல் -குவைதா பயங்கரவாதிகள் மற்றும் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகள் மாற்றுவதை தடுப்பதே அமெரிக்காவின் முதல் நோக்கமாக இருந்தது. தற்போது, அமெரிக்காவின் உள்கட்டமைப்பில் கவனம் செலுத்தவேண்டிய தருணம் வந்துவிட்டது. எங்களை கொல்லும் நோக்கத்துடன் செயல்படும் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பவர்களை (பாகிஸ்தானை மறைமுகமாக எச்சரித்தார்) அமெரிக்கா ஒரு போதும் பொறுத்துக் கொள்ளாது. அமெரிக்காவிடம் இருந்து அவர்கள் திறமையாக தப்பித்துக் கொள்ள முடியாது. இவ்வாறு அதிபர் ஒபாமா பேசினார்.

கருத்துகள் இல்லை: