வெள்ளி, 24 ஜூன், 2011

பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்,.ராசா மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை

ஆ.ராசா மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை பகிரங்கமாக
 அறிவிக்க வேண்டும் :தகவல் ஆணையர் கடிதம்

முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் பற்றிய தகவல்களை பகிரங்கமாக அறிவிக்குமாறு பிரதமர் அலுவலகத்துக்கு மத்திய தகவல் ஆணையர் கடிதம் அனுப்பியுள்ளார்.

மத்திய அரசுக்கு ஒன்றே முக்கால் லட்சம் கோடி ரூபாய் நட்டத்தை ஏற்படுத்திய 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் தொடர்பாக முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, கடந்த பிப்ரவரி 2-ந் தேதி அன்று கைது செய்யப்பட்டார். தற்போது சிறையில் இருக்கும் அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன.
மத்திய மந்திரி பதவியில் இருந்தபோதே அவர் மீது ஸ்பெக்ட்ரம் ஊழல் புகார் எழுந்தது. ஆனால், அதை அவர் மறுத்து வந்தார். அந்த சமயத்தில், `ஆ.ராசா மீது கடுமையான ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்ட போதிலும் மந்திரியாக அவர் நீடிக்க காரணம் என்ன?' என்பது போன்ற விவரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பிரதமர் அலுவலகத்திடம் தகவல் ஆர்வலர் ஒருவர் கேட்டிருந்தார்.

ஆனால், அவருக்கு எந்த வித தகவலையும் பிரதமர் அலுவலகம் அளிக்கவில்லை. தற்போது, சி.பி.ஐ.யால் ஆ.ராசா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருப்பதால் தனது மனு நிராகரிக்கப்பட்டது தொடர்பாக மத்திய தகவல் ஆணையரிடம் அவர் மேல் முறையீடு மனு அளித்தார்.
அந்த மனுவை விசாரித்த மத்திய தகவல் ஆணையர் சைலேஷ் காந்தி, `ஆ.ராசா மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விவரங்களை ஜுலை 10-ந் தேதிக்குள் அளிக்க வேண்டும்' என பிரதமர் அலுவலகத்தை வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக சைலேஷ் காந்தி அனுப்பிய கடிதத்தில், `இந்த நாட்டு மக்கள் எவற்றை எல்லாம் அறிந்து கொள்ள வேண்டும் என விரும்பும் மனுதாரரின் விருப்பத்தை அறிய முடிகிறது. அவருடைய கேள்விகளை இந்தியில் தொகுத்திருக்கிறார்.

அவரை அழைத்து நடத்திய ஆலோசனைக்கு பிறகு அவருடைய கேள்விகள் அனைத்தும் சரியான முறையில் தொகுத்து பிரதமர் அலுவலகத்துக்கு தகவல் ஆணையம் அனுப்புகிறது.

எனவே, ஆ.ராசாவுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான சான்றிட்ட நகல்கள் மற்றும் அவை தொடர்பாக பிரதமர் அலுவலகம் மேற்கொண்ட கடித தொடர்புகள் ஆகியவற்றை நாட்டு மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் பகிரங்கமாக தெரிவிக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: