பிரஷாந்தி நிலையத்தில் உள்ள யஜுர் மந்திர் கட்டடத்தில் மொத்தம் ஆறு அறைகள்.
சத்ய சாய் அறக்கட்டளையின் தலைவராக இருந்த பாபாவின் மறைவுக்குப் பிறகு அந்தப் பதவிக்கு வர, அவரது அண்ணன் மகன் ஆர்.ஜே.ரத்னகர் என்பவருக்கும் மற்ற உறுப்பினர்களுக்கும் இடையே பலத்த போட்டி. ஒரு வழியாக ஆந்திர அரசு சமரசம் செய்ததில், ஆர்.ஜே.ரத்னகர் தலைவர் ஆனார்!
கடந்த இரண்டு மாதங்களாகவே பிரஷாந்தி நிலையத்தில் உள்ள 'சாய்பாபாவின் யஜுர் மந்திர் அறையைத் திறப்பது எப்போது?’ என்ற கேள்விகோடிக்கணக்கான பக்தர்கள் மத்தியிலும், அறக்கட்டளை உறுப்பினர்களின் மனதிலும் எழுந்தது.
சாய்பாபா அறக்கட்டளையின் தலைவரான ஆர்.ஜே.ரத்னகர், ''நாம் மட்டுமே யஜுர் மந்திர் திறப்பின்போது உடன் இருந்தால், பக்தர்களின் மனதிலும், ஆந்திர அரசுக்கும் தேவையற்ற சந்தேகம் வரும். எனவே, சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி ஏ.பி.மிஸ்ரா, கர்நாடக ஹைகோர்ட் முன்னாள் நீதிபதி வைத்யநாதா மற்றும் பல ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் நம் கூடவே இருக்கட்டும்!'' என்று சொன்னாராம். எனவே, அவர்களையும் அந்த அறைத் திறப்புக் குழுவில் இணைத்துள்ளார்கள். இதைத் தொடர்ந்து கதவு திறக்கப்பட்டது.
''சாய்பாபாவின் யஜுர் மந்திர் அறையைத் திறந்தபோது 11.57 கோடி ரொக்கமும், 98 கிலோ தங்க நகைகளும், 310 கிலோ வெள்ளி நகைகளும், ராமர், கிருஷ்ணர், அனுமன் என மூன்று சிலைகளும், இரண்டு ஜோடி தங்கக் காலணிகளும் அங்கே இருந்தன. அந்த மூன்று சிலைகளும் விலை உயர்ந்த ஆபரணங்களால் செய்யப்பட்டவை. அங்கே இருந்த பொருட்களின் மதிப்பை 20 பேர்கொண்ட குழு 36 மணி நேரம் கணக்கிட்டது. இந்தப் பொருட்கள் அனைத்தும் நீதிபதிகளின் முன்னிலையில், பிரஷாந்தி நிலைய ஸ்டேட் பேங்க் கிளையில் டெபாசிட் செய்யப்பட்டது...'' என்று அனைத்து மீடியாக்களுக்கும் பத்திரிகைச் செய்தியை அனுப்பினார்கள் அதிகாரப்பூர்வமாக!
ஆனால், இது குறித்து பிரஷாந்தி நிலைய வட்டாரத்தில் விசாரித்தபோது, ''பிரஷாந்தி நிலையத்தில் உள்ள யஜுர் மந்திர் கட்டடத்தில் மொத்தம் ஆறு அறைகள். அந்த அறைகளில் உள்ள அனைத்துப் பொருட்களுமே தங்கத்தாலும், வெள்ளியாலும் செய்யப்பட்டவை. இப்போது வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்ட ரொக்கங்களைவிட இன்னும் பல மடங்கு இருந்திருக்கும். அதேபோல பெட்டி பெட்டியாக வைரம், பிளாட்டினம் ஆகியவையும் இருந்தன. ஆனால், அவற்றை அவர்கள் மறைத்துவிட்டனர். கட்டுக் கட்டாக அமெரிக்க டாலர்களும், யூரோக்களும் இருந்தன. அவற்றையும் அறக்கட்டளைக் குழு மறைத்துவிட்டது. சாய்பாபாவின் கோடிக்கணக்கான சொத்துகளின் பத்திரங்களும், அவர் பயன்படுத்திய தங்க மந்திரக்கோல், கிரீடம் ஆகியவையும் மறைக்கப்பட்டன. சாய்பாபாவின் ரகசிய அறையில் இருந்து கண்டெடுத்த கோடிக்கணக்கான பொருட்களை எல்லோரும் திட்டமிட்டே மறைத்துவிட்டனர். அதோடு, 'யஜுர் மந்திர் அறையை இதற்கு முன்னரே திறந்து, பல்லாயிரக்கணக்கான கோடிகளைச் சுருட்டிவிட்டனர்’ என்ற பேச்சும் இருக்கிறது. நாங்கள் யாரையும் குறிப்பிட்டுக் குற்றம்சாட்டவில்லை. ஆனால், அறக்கட்டளையின் தலைவர் ஆர்.ஜே.ரத்னகர் இன்னும் தெளிவாகச் செயல்பட வேண்டும் என்பதை மட்டும் இப்போதைக்குச் சொல்லிக்கொள்கிறோம்...'' என்று பக்தர்கள் சிலர் தங்களது பெயரைச் சொல்ல விரும்பாமல் மர்மமாகச் சொல்லி முடித்தனர்.
இந்த நிலையில், சத்யசாய் அறக்கட்டளைக்கு சொந்தமான காரில் பெங்களூருவுக்கு 9 கோடிக்கும் அதிகமான ரொக்கம் கடத்தப்பட்டபோது, ஓடிகொண்டா சோதனைச் சாவடியில் ஆந்திர போலீஸார் அதைக் கைப்பற்றியதாகவும் செய்திகள் கசிந்தன. கார் டிரைவர் ஹரீஸை போலீஸ் விசாரித்தபோது, 'பெங்களூருவில் உள்ள ஒருவருக்குக் கொண்டுபோய்க் கொடுக்கச் சொன்னார்கள்’ என்பதை ஒப்புக்கொண்டாராம். கடந்த சில நாட்களாகவே புட்டபர்த்தியில் இருந்து பெங்களூரு வரும் தனியார் பேருந்துகளிலும் லட்சக்கணக்கான ரொக்கப் பணம் கைப்பற்றப்படும் நிகழ்வுகளும் அரங்கேறி வருகின்றன.
''இதை எல்லாம் பார்க்கும்போது, சாய்பாபாவின் சொத்துகள் யாராலோ அபகரிக்கப்பட்டு வருகிறது என்பது மட்டும் தெரிகிறது. பாபாவின் சொத்துகளைக் காக்க ஆந்திர அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!'' என்று சொல்லத் தொடங்கியுள்ளனர் பாபாவின் பக்தர்கள்.
ஆந்திரத்தை ஆளும் அரசுதான் இதற்கு எல்லாம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக