தமிழர் பிரச்சினையை வைத்து கூட்டமைப்பு அரசியல் லாபம் தேடுகிறது - ஈபிடிபி
மேலும் தமிழ் மக்களின் அரசியலுரிமை பிரச்சினைக்கான தீர்வு குறித்த அம்சங்களை உள்ளடக்கிய அறிக்கையானது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவால் ஏற்கனவே அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்ட 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தலில் இருந்து தொடங்கி அதை மேலும் வளர்த்தெடுத்து செல்வதே நடைமுறைச் சாத்தியமான வழிமுறை ஆகும் என்பதை அடிப்படையாகக் கொண்ட அறிக்கையே அரச தரப்பிடம் சமர்ப்பிக்கப்பட்டும் இருந்தது.
இச்சந்திப்பின் போதும் இவைகளை அடிப்படையாகக் கொண்ட விடயங்களே விபரமாக இரு தரப்பினராலும் ஆராயப்பட்டதோடு அரசியல் தீர்வு முயற்சிகளை எவ்வாறு விரைவாக செயலூக்கம் பெற வைப்பது என்றும் பேசப்பட்டதாக ஈபிடிபி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசுடன் பேச்சு நடத்தி வரும் இன்னொரு தரப்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பிரச்சினைகளை பேசி தீர்ப்பதற்கு மாறாக பிரச்சினைகளை வளர்ப்பதிலும், அதை தீராப் பிரச்சினை என்று கூறி தேர்தல் கோஷமாக பயன்படுத்தி சுயலாபம் அடைந்தும் வருகின்றனர்.
இதை உணர்ந்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி பொறுப்புள்ள ஒரு அரசியல் கட்சி என்ற வகையில் அரசியலுரிமை பிரச்சினை தீர்விற்கான இத்தடைகளை கருத்தில் கொண்டு சில ஆலோசனைகளை இன்றைய சந்திப்பிலும் எடுத்து விளக்கியுள்ளது.
13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி அதை மேலும் வளர்த்தெடுத்து முன்நோக்கி செல்லும் அதே வேளையில் பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை அமைத்து தீர்வு முயற்சிகளை மேலும் செழுமைப்படுத்த வேண்டும் என்பதோடு அனைத்துக் கட்சிகளினதும் பங்களிப்பை பெறுவதற்கும் இது உதவும் எனவும் எடுத்துச் சொல்லப்பட்டது.
இதேவேளை பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்காத ஏனைய கட்சிகளும் நாடாளுமன்ற தெரிவுக் குழுவிற்கு தமது யோசனைகளை வழங்குவதற்கான ஏற்பாடு குறித்தும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தரப்பால் எடுத்து விளக்கப்பட்டதோடு 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல் படுத்துவதும், நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைப்பதும் சம காலத்தில் சமாந்தரமாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் பாராளுமன்றத் தெரிவுக்குழு செயற்படுவதற்கான வரையறுக்கப்பட்ட ஒரு கால அவகாசமும் வழங்கப்பட வேண்டும் என்றும் எடுத்து விளக்கப்பட்டது.
மேலும் இச்சந்திப்பின் போது, 13வது திருத்தச் சட்டத்தில் இருக்கின்ற அதிகாரங்களை செழுமைப்படுத்தவும், மேலும் தேவையான அதிகாரங்கள் எவையென அடையாளம் காண்பதற்கும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் பங்களிப்பையும் பெறுவது என்பது குறித்தும் ஆராயப்பட்டது.
பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் மற்றும் அங்கம் வகிக்காத அனைத்துக் கட்சிகளும் இன்று நடைமுறையில் ஏற்றுக்கொண்டிருக்கும் 13வது திருத்தச் சட்டத்தை இலகுவாகவும், விரைவாகவும் நடைமுறைப்படுத்த முடியும் என்பதோடு இதையே இந்தியா உட்பட சர்வதேச நாடுகளும் ஏற்றுக் கொண்டிருக்கின்றது என்பதாலும், தமிழ் மக்களுக்கும் அரசியலுரிமைப் பிரச்சினைக்கு தீர்வு காண விரும்புவோருக்கும் இதுவே நம்பிக்கை தரும் விடயமாகும் என்பதாலும் இவைகளை தாமதமின்றி விரைவு படுத்துவது குறித்தும் விரிவாக பேசப்பட்டது.
இச்சந்திப்பின் போது அரச உயர் மட்ட பிரதிநிகளாக அமைச்சர்களான நிமால் சிறிபால டி சில்வா ஐீ.ஏல். பீரிஸ் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான ரஐீவ விஜேசிங்க, சஜின் வாஸ் குணவர்த்தன அகியோரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி சார்பில் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பிரத்தியேகச் செயலாளர் தயானந்தா, அமைச்சரின் இணைப்பதிகாரிகளான ராஜ்குமார், சட்டத்தரணி சந்திரலால் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக