வெள்ளி, 24 ஜூன், 2011

ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை ஜுலை 8-ந் தேதி


தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை ஜுலை 8-ந் தேதிக்கு தள்ளிவைத்து பெங்களூர் தனிக்கோர்ட்டு உத்தரவிட்டது.
தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீது சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் இந்த வழக்கு விசாரணை பெங்களூர் தனிக்கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் ஆவணங்கள் மொழிபெயர்க்கப்பட்டன.

அதில் உள்ள தவறுகளை சரிசெய்ய வேண்டும் என்று எதிர்தரப்பு சார்பில் கோரப்பட்டது. அதன் பேரில் மொழிபெயர்ப்பில் உள்ள தவறுகள் திருத்தப்பட்டு சரிசெய்யப்பட்டன. இந்த நிலையில், சாட்சியாளர்களில் ஒருவரிடம் மீண்டும் விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரி எதிர்தரப்பு சார்பில் தனிக்கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவை தனிக்கோர்ட்டு தள்ளுபடி செய்தது. அதை எதிர்த்து எதிர்தரப்பு ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது. இதன் மீது விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில், இந்த வழக்கில் தொடர்ந்து புலன் விசாரணை நடத்த அனுமதிக்க கோரி போலீஸ் அதிகாரி சம்மந்தம் தனிக்கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனு மீது இருதரப்பு வக்கீல்களும் வாதிட்டனர்.

இந்த நிலையில் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு நேற்று பெங்களூர் தனிக்கோர்ட்டில் நீதிபதி மல்லிகார்ஜுனய்யா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு உதவி வக்கீல் சந்தீப் சவுட்டா, ஜெயலலிதா வக்கீல் குமார் ஆகியோர் ஆஜரானார்கள்.
இதை தொடர்ந்து போலீஸ் அதிகாரி சம்மந்தம் தாக்கல் செய்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அதே சமயம், மனுதாரர் அரசு வக்கீல் மூலம் மனு தாக்கல் செய்யலாம் என்றும் நீதிபதி கூறினார்.

இதைத்தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையை ஜுலை 8-ந் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார். நேற்று நடந்த இந்த வழக்கு விசாரணையின்போது கர்நாடக மாநில அ.தி.மு.க. செயலாளர் வா.புகழேந்தி கோர்ட்டிற்கு வந்திருந்தார்.

கருத்துகள் இல்லை: