வெள்ளி, 3 ஜூன், 2011

புலிச்சார்பு மூலங்களைக் கொண்டே தருஷ்மன் அறிக்கை தயாரிப்பு: குணரத்ன


rohan gunaratnaதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சார்பான இணையத்தளத்திலிருந்தும் விடுதலைப் புலிகள் சார்ந்த வேறு மூலங்களிலிருந்தும் பெறப்பட்ட தரவுகளே தருஷ்மன் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இதனால் தகவல் உட்கட்டமைப்பு ஒன்றை ஆக்கிக்கொள்வதன் மூலம் இலங்கை பற்றிய உண்மை நிலைமைகளை உலகறியச் செய்வது அவசியமாகவுள்ளது என பயங்கரவாதம் தொடர்பான சர்வதேச புகழ்பெற்ற நிபுணரும் பேராசிரியருமான ரொஹான் குணரத்ன தெரிவித்தார்.

நாட்டில் செல்வாக்குள்ள தமிழ் அரசியல் தலைமைத்துவம் ஒன்று உருவாகுவது முக்கிய தேவையாகவுள்ளது என சுட்டிக்காட்டிய பேராசிரியர், யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையிலும் மடிக்கணினிகளைப் பயன்படுத்தி யுத்தம் செய்ய வேண்டிய நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

யுத்த வெற்றியின் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் சர்வதேச கருத்தரங்கு கொழும்பு, கலதாரி ஹோட்டலில் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு நடைபெற்று வருகிறது.

41 நாடுகளைச் சேர்ந்த சுமார் 80 பிரதிநிதிகள் கலந்துகொண்ட இந்த கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பேராசிரியர் ரொஹான் குணரத்ன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது, விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டதற்கான காரணங்களை விவரித்து பேசிய அவர் மேலும் கூறியதாவது, 'விடுதலைப் புலிகளின் மறைவிடங்களைக் கண்டுபிடித்த இராணுவத்தினர், கடற்படையினரின் உதவியுடன் விநியோகப் பாதைகளைத் தடை செய்தனர். மறுபுறம் பாதுகாப்பு அமைச்சு மக்களுடன் நன்றி உறவாடி இராணுவத்துக்கு பாரியளவில் புதியவர்களை இணைத்துக் கொள்வதில் வெற்றிகண்டது.

சர்வதேச அழுத்தங்களுக்கு மத்தியிலும் யுத்தத்தை முன்னெடுப்பதில் ஜனாதிபதி உறுதியாக இருந்தார். இரு தரப்பினருக்கும் இடையில் யுத்தம் மும்முரமாக நடைபெற்றுக்கொண்டிருந்தவேளை யுத்த நிறுத்தம் ஒன்றை கொண்டுவரும்படி பிரித்தானியா, ஐக்கிய அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளின் மக்கள் பிரதிநிதிகள் அழுத்தங்களைக் கொடுத்தனர்.

ஆனால் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அனுதாபம் கொண்ட நாடுகள் விடுதலைப் புலிகளை சரணடையும்படி கூறின. யுத்த நிறுத்தம் ஒன்றின் மூலம் தம்மை பலப்படுத்திக்கொள்ள கால அவகாசத்தை பெறுவதே அவ்வியக்கத்தின் திட்டமாக இருந்தது.

இதனால் சரணடையும் யோசனையை அவ்வியக்கம் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் அந்த நாடுகள் கோபமடைந்தன. இதேவேளை, அதிகளவிலான பயிற்சிகளின் மூலம் இராணுவத்தினர் தொழில்வான்மைத்துவத்துடன் பெரும் முன்னேற்றம் கண்டனர். இதனால் உலகம் பிரச்சினையின் மறுபக்கத்தை காண வாய்ப்பளித்தது. விடுதலைப் புலிகள் இயக்கத்தை அனைவரும் கிண்டல் செய்ய ஆரம்பித்தனர்.

இப்போது நாட்டுக்கு வெளியில் விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல் காணப்படுகிறது. வெளிநாடுகளில் தொழிற்படும் பயங்கரவாதிகளை நாட்டுக்குள் கொண்டுவருவதற்கான சர்வதேச சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்.

விடுதலைப் புலிகள் தற்போது சர்வதேச அரங்கத்திலிருந்து விலகியுள்ளனர். அவ்வியக்கம் அதன் செய்மதி தகவல் வலையமைப்பை பயன்படுத்தி இலங்கை நிலைவரம் பற்றி பிழையான தகவல்களை பரப்புகின்றது.

செல்வாக்குள்ள தமிழ் அரசியல் தலைமைத்துவம் ஒன்று உருவாவது முக்கியமான தேவையாகவுள்ளது. தகவல் உட்கட்டமைப்பு ஒன்றை ஆக்கிக்கொள்வதன் மூலம் இலங்கை பற்றிய உண்மை நிலைமைகளை உலகறியச் செய்வது அவசியமாகவுள்ளது.

தருஷ்மன் அறிக்கையில், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சார்பான இணையத்தளத்திலிருந்தும் விடுதலைப் புலிகள் சார்ந்த வேறு மூலங்களிலிருந்தும் பெறப்பட்ட தரவுகளே உள்ளடக்கப்பட்டுள்ளன. இப்போது யுத்தம் இல்லை. ஆனால் மடிக்கணினிகளைப் பயன்படுத்தி யுத்தம் செய்ய வேண்டியுள்ளது.

நாம் பயங்கரவாதம் தோன்றியதற்கான அடிப்படைக் காரணங்களை கருத்தில் எடுக்க வேண்டும். தமிழ் பிள்ளைகளும் சிங்கள பிள்ளைகளும் ஒன்றாக படிக்க வேண்டும். ஒருவரின் மொழியை மற்றவரும் பேசக்கூடியதாக இருக்க வேண்டும்' என்றார்.

கருத்துகள் இல்லை: