வெள்ளி, 3 ஜூன், 2011

சரணடைந்த புலிகளின் புனர்வாழ்வுக்கு ரூ. 180 கோடி; 70 வீதமானவர்கள் சமூகத்தில் இணைந்தனர்


conferenceபாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்த முன்னாள் புலி உறுப்பினர்களின் புனர்வாழ்வு நடவடிக்கைக்காக முதலாவது வருடத்தில் மாத்திரம் 180 கோடி ரூபாவை அரசாங்கம் செலவு செய்துள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க நேற்று தெரிவித்தார்.

சுமார் ஒன்றரை வருட காலத்திற்குள் 70 வீதமானவர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்தில் இணைத்துக் கொண்ட ஒரே ஒரு நாடு இலங்கை என்று அவர் மேலும் தெரிவித்தார்.

விஜேசிங்க தலைமையில் இடம்பெற்ற இறுதிநாள் கருத்தரங்கின் முதல் அமர்வில் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க மேலும் விளக்கமளிக்கையில்,

சுமார் மூன்று இலட்சம் பேர் இடம்பெயர்ந்ததுடன் 11,664 புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் சரணடைந்தனர். இவர்களில் 594 சிறுவர் போராளிகள், 2033 பெண் உறுப்பினர்கள் மற்றும் 9037 ஆண் போராளிகள் அடங்குவர். இவர்களை 24 பாதுகாப்புடன் கூடிய நலன்புரி நிலையங்களில் தங்கவைத்தனர்.

சரணடைந்த 11,664 முன்னாள் புலி உறுப்பினர்களில் 6596 பேர் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப் பட்டுள்ளதுடன் தற்பொழுது 4301 பேர் மாத்திரம் எஞ்சியுள்ளனர். இவர்கள் 9 நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

சரணடைந்தவர்களின் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்காக முதல் வருடத்தில் மாத்திரம் மாதாந்தம் 150 மில்லியன் ரூபா வீதம் 1.8 பில்லியன் ரூபாவை செலவு செய்துள்ளது. அத்துடன் தற்பொழுது மாதாந்தம் 645 மில்லியன் ரூபா வீதம் இரண்டாவது வருடத்திற்கு மாத்திரம் இதுவரை 774 மில்லியன் ரூபாவை செலவு செய்துள்ளது என்றும் தெரிவித்தார்.

நேற்றைய இறுதிநாள் கருத்தரங்கு இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. ‘தேசத்தை கட்டியெழுப்புதல்’ என்ற தலைப்பில் மத்திய வங்கியின் ஆளுநர் டொக்டர் அஜித் நிவார்ட் கப்ரால், ‘ஆச்சரியமான ஆசியா’ என்ற தலைப்பில் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க உரை நிகழ்த்தியதுடன் டொக்டர் ரொஹான் குணரட்ன நிறைவு செய்து வைத்தார்.

இந்த மூன்று நாள் சர்வதேச கருத் தரங்கில் கலந்து கொண்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இராணுவ உயர் அதிகாரிகள் இலங்கை இராணுவத்திற்கு பாராட்டுக்களையும், நன்றிகளையும் தெரிவித்தனர்.

‘பயங்கரவாத ஒழிப்பு - இலங்கையின் அனுபவம்’ என்ற தொனிப் பொருளில் இலங்கை இராணுவம் ஏற்பாடு செய்த மூன்று நாள் கருத்தரங்கின் இறுதிநாள் அமர்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த சர்வதேச கருத்தரங்கில் கலந்து கொண்ட 41 நாடுகளின் இராணுவ, பாதுகாப்பு உயர் அதிகாரிகள் கரகோஷம் செய்ததுடன் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை: