செவ்வாய், 31 மே, 2011

நள்ளிரவு கொலைகள் எதிரொலி-116 பிச்சைக்காரர்கள் காப்பகத்தில் ஒப்படைப்பு

: கோவையில் அடுத்தடுத்து நடந்த நடுராத்திரி கொலைகளைத் தொடர்ந்து 116 பிச்சைக்காரர்கள் பிடிக்கப்பட்டு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நள்ளிரவு கொலைகள்

கோவை லங்கா கார்னர் பகுதியிலுள்ள பிளாட்பார்மில் தூங்கிக் கொண்டிருந்த 40 வயது மதிக்கத்தக்க நபர் சில நாட்களுக்கு முன் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டார். பலியான நபர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விபரங்கள் இதுவரை போலீசாருக்கு கிடைக்கவில்லை. கொலையாளி பற்றியும் ஒரு துப்பும் கிடைக்கவில்லை.

இதனையடுத்த சில நாட்களில் கோவை புரூக்பாண்ட் ரோடு வணிக வளாகத்தில் காவலாளியாக வேலை செய்து வந்த நாகராஜ் என்ற முதியவரும் நள்ளிரவில் தலையில் கல்லைப்போட்டு மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார்.

சைக்கோ காரணமா?!

அடுத்தடுத்து நடுநிசியில் நடந்துள்ள இக்கொலைகளில் தொடர்புடைய குற்றவாளிகள் யார், கொலைக்கான காரணம் என்ன என்று போலீசார் விசாரிக்கின்றனர். மனநலம் பாதிக்கப்பட்ட சைக்கோ எவரேனும் இக்கொலைகளைச் செய்துள்ளனரா என்ற கோணத்திலும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

கொலையாளிகளை பிடிக்க போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். நள்ளிரவில் சந்தேகத்துக்கு இடமான வகையில் சுற்றித்திரிந்த திருநங்கைகள் இருவர் உள்பட போதை ஆசாமிகள் ஐந்து பேரை பிடித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

பிச்சைக்காரர்கள் பீதி

கோவை நகரில் அடுத்தடுத்து நடந்துள்ள கொலை சம்பவங்களால், சாலையோரத்தில் தூங்கும் பிச்சைக்காரர்கள் பீதியடைந்துள்ளனர். ரோட்டு ஓரங்களில் படுத்திருந்தால் ராத்திரியில் தலையில் கல்லை போட்டு கொலை செய்துவிடுவார்களோ என்ற அச்சத்தில் பஸ் ஸ்டாண்ட் அருகிலும், தெருவிளக்கு வெளிச்சம் மற்றும் ஆள் நடமாட்டமுள்ள பகுதிகளுக்கு இடம் மாறியுள்ளனர் பிச்சைக்காரர்கள்.

எச்சரிக்கை

பிளாட்பாரங்களில் இரவில் யாரும் தங்கக்கூடாது என்றும், காப்பகங்களுக்கு சென்று விடவேண்டும் எனவும் வீடற்ற நபர்களை உள்ளூர் நிர்வாகம் எச்சரித்துள்ளது. நான்கு உதவி கமிஷனர்கள் மேற்பார்வையில், மாநகராட்சி அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் பிச்சைக்காரர்களை பிடிக்கும் பணி நேற்று துவங்கியது. வீதிகளில் சுற்றித்திரிந்த 16 பெண்கள் உட்பட 116 பிச்சைக்காரர்கள் பிடிக்கப்பட்டு, ஆர். எஸ்.புரத்தில் உள்ள காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்

கருத்துகள் இல்லை: