சிந்தனைக்கூடம்; - யாழ்ப்பாணம் எனும் ஆய்வு அபிவிருத்தி நிறுவனத்தின் சார்பில் யாழ்ப்பாண குடாநாட்டின் வீதி அபிவிருத்தி தொடர்பாக சமீபத்தில் ஒரு கலந்துரையாடல் இடம்பெற்றது. இதில் சிந்தனைக்கூடத்தின் பணிப்பாளர் பேராசிரியர் இரா.சிவசந்திரன் மேற்படி விடயம் தொடர்பாக சில கருத்துக்களை தெரிவித்தார்.
இன்று யாழ் மக்களிடையே வீதி அகலிப்பு தொடர்பாக பல பிரச்சினைகள் தோன்றி வாத பிரதிவாதங்களிற்கு உட்பட்டுள்ளன. உண்மையில் முறையாக இவை திட்டமிடப்பட்டிருந்தால் இப் பிரச்சினைகள் தோன்றியிருக்காது என்றே எண்ண தோன்றுகின்றது. கல்வியாளர்கள், அரச நிர்வாகிகள், நடைமுறைப்படுத்தும் நிபுணர்கள் ஆகிய முக்குழுவினர்; இணைந்து மக்கள் அபிப்பிராயத்திற்கு மதிப்பளித்தே எந்த திட்டங்களும் தீட்டப்பட வேண்டும். ஏனெனில் எந்த அபிவிருத்தியும் மக்களுக்கானதே.
யாழ்ப்பாண வீதி அபிவிருத்தியின் போது பல கட்டிடங்கள், குடிமனைகள், கோயில்கள் என்பன அழிவடையும் நிலையில் உள்ளன. உதாரணமாக காங்கேசன்துறை வீதி அகலிப்பின் போது யாழ்ப்பாண நகரிற்கு அண்மையில் உள்ள வண்ணார்பண்ணை சிவன் கோயிலின் முகப்பு பகுதியும், அக் கோயிலிற்கு உரித்தான வீதியோரத்தில் உள்ள ஏனைய கோயில்களும், நாவலர் பாடசாலை, இந்துக்கல்லூரி ஆகியவற்றின் பகுதிகளும் இடிக்கப்பட வேண்டிய தேவை உள்ளது. திட்டமிட்டோர் இவ் இடிபாட்டிற்கான நஷ்டஈடுகளை மக்களிற்கும், நிறுவனங்களிற்கும் வழங்க முன்வரவில்லை. இவை சட்ட சிக்கலை ஏற்படுத்தும். மேலும் 100 வருட பழமையான கட்டிடங்களோ, தாவரங்களோ அழிக்கப்பட வேண்டுமாயின் அவை மரபுரிமைச் சொத்துக்கள் என்ற சட்டத்தின் கீழ் தொல்பொருள் திணைக்களத்திடமும் சூழல் பேண் அதிகார சபையிடமும் அனுமதி பெற்றுக் கொள்ளவேண்டும். அரசு அமுலாக்கும் இத்திட்டத்தில் அரசு இயற்றிய சட்டங்களே மீறப்படுவதை பார்க்கின்றோம். இலங்கையில் பொதுவாக எழுத்தில் உள்ள சட்டங்கள் நடைமுறையில் மீறப்படுவதை எல்லா மட்டங்களிலும் பார்க்கக்கூடியதாக உள்ளது. இவ்வாறு ஏன் நடக்கின்றது என்பதை புரிந்துகொள்ளமுடியவில்லை?
மக்கள் விழிப்புணர்ச்சி அற்றிருப்பதே இவற்றுக்கு பிரதான காரணம் போல் தெரிகிறது. நாம் வீதியை அகலித்து அபிவிருத்தி செய்ய வேண்டாம் என்று கூறவில்லை. ஆனால் மேலே குறிப்பிட்ட மூன்று வகையினரும் இணைந்தே இத்திட்டம் பற்றி இறுதி முடிவை எடுத்திருக்கவேண்டும். அவ்வாறு நடைபெற்றதாக தெரியவில்லை. வீதியை எந்த அளவிற்கு அகலமாக்குவது என்பதைத் தீர்மானிப்பதும் ஆராயப்பட வேண்டியதே.
இவ்வாறான பிரச்சினைகள் தோன்றுவதை ஒரு உதாரணத்தின் மூலம் விளக்கலாம். யு9 வீதியில் இன்று அதிக போக்குவரத்து இடம்பெற்று வருகிறது. உண்மையில் இவ் வீதி ஆனையிறவைக் கடந்து இயக்கச்சிச் சந்தியில் மேற்கு நோக்கி திரும்பாது நேரே தொண்டைமனாறு கடல் நீரேரியை ஒட்டி அவ் வீதியை வடக்கு நோக்கி விஸ்தரித்து பருத்தித்துறை, வல்வெட்டித்துறை, பலாலி காங்கேசன்துறை, போன்ற நகரங்களை இணைக்க வைத்தால்; வடமராட்சி, வலிகாமம் வாழ் மக்கள் இதனூடாகவே பயணிப்பர். யாழ்ப்பாண நகரை அடைந்து அங்கிருந்து செல்ல வேண்டிய அவசியம் பெரும்பாலானவர்களிற்கு இல்லாமல் போகும். இவ் வீதி அபிவிருத்தித் திட்டமானது தொண்டைமானாற்று நன்னீர் ஏரித்திட்டத்துடன் 100 வருடங்களுக்கு முன்னர் திட்டமிடப்பட்ட ஒன்றேயாகும். யாழ்ப்பாண வீதி அபிவிருத்தியில் ஈடுபடுவோர் இது பற்றித் தெரிந்துள்ளார்களா என்பது ஜயத்திற்குரியதே.
யாழ்ப்பாணக் குடாநாட்டை கரையோரமாகச் சுற்றி சுற்றுப்பாதை அமைத்து, உள்ளேயுள்ள நகரங்களுடன் இணைக்கும் திட்டமும் ஏற்கனவே பலரால் சுட்டிக்காட்டப்பட்டது. இவ்வாறான வீதி அமைப்புக்கள் இருப்பின்;; யாழ்ப்பாண நகரத்துடன் இணைக்கும் வீதியில் போக்குவரத்து நெருக்கடி குறையும். எனவே பாரிய அளவில் அகலமான பிரதேசத்தை வீதி அபிவிருத்தியில் இழக்க வேண்டிய நிலை ஏற்படாது.
இயக்கச்சி சந்தியிலிருந்து யு9 வீதியை வடமராட்சியுடன் இணைப்போமாயின் யு9 பாதையூடாக வரும் 50 - 60 வீதமான வாகனங்கள் அதனூடாக சென்றுவிடும். மிகுதி 10 – 15 வீதமான வாகனங்கள் கொடிகாமம், பருத்தித்துறை ஊடாக செல்லும். மிகுதியான வாகனங்களே யாழ்ப்பாண நகரை அடையும். எனவே இவற்றை வைத்து வீதி அகலிப்புப் பற்றி மறுசிந்தனை செய்யப்படலாம். நகரத்தினுள்ளே வரும் சில வீதிகள் ஒருவழிப் பாதையாக மாற்றுவதன் மூலமும் நெருக்கடியை சமாளிக்க முடியும். இது பற்றி சிந்திக்க காலம் கடந்துவிடவில்லை என பேராசிரியர் அவர்கள் அபிப்பிராயம் தெரிவித்தார்.
யாழ்ப்பாணக் குடாநாட்டின் வீதிஅமைப்பு, அகலிப்பு தொடர்பாக பல்துறை அறிஞர்களையும், நிபுணர்களும் பங்குபற்றும் கருத்தரங்கு ஒன்று விரைவில் கூட்டப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக