செவ்வாய், 31 மே, 2011

தொலைத்தொடர்புத் துறை திமுகவுக்கு இல்லை! மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்-

டெல்லி: மத்திய அமைச்சரவையை அடுத்த மாதம் மாற்றியமைக்க பிரதமர் மன்மோகன் சிங்கும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் திட்டமிட்டுள்ளனர்.

இப்போது மத்திய அமைச்சரவையில் 76 உள்ளனர். ஸ்பெக்ட்ரம் முறைகேடு காரணமாக ஆ.ராசா, மகாராஷ்டிர முதல்வரானதால் பிருதிவிராஜ் சவான், மேற்கு வங்க முதல்வரானதால் மம்தா பானர்ஜி ஆகியோர் தாங்கள் வகித்து வந்த அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததால் அவர்கள் வகித்த இலாகாக்கள் பிற அமைச்சர்கள் வசம் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பதவிகளுக்கு புதியவர்களை நியமிக்கவும், சில மூத்த அமைச்சர்கள், இணை அமைச்சர்களின் இலாகாக்களை மாற்றி அமைக்கவும், பிரதமர் மன்மோகன் சிங் முடிவு செய்துள்ளார்.

மழைக்கால நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்கும் முன் அமைச்சரவை மாற்றம் இருக்கும் என்று தெரிகிறது. இதனால் வரும் ஜூன் 15ம் தேதிக்குள் அமைச்சரவை மாற்றியமைக்கப்படலாம்.

மம்தா பானர்ஜி வகித்து வந்த ரயில்வே இலாகா, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவருக்கே வழங்கப்படவுள்ளது. அந்தக் கட்சியைச் சேர்ந்த முகுல் ராய் ரயில்வே அமைச்சராகலாம் என்று தெரிகிறது.

சத்தீஸ்கர், கோவா, மணிப்பூர் மாநிலங்களைச் சேர்ந்த யாரும் தற்போது அமைச்சரவையில் இல்லை. எனவே அந்த மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படவுள்ளது.

பஞ்சாப் கவர்னராக உள்ள முன்னாள் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் மீண்டும் மத்திய அமைச்சராக விருப்பம் தெரிவித்துள்ளார். சோனியா குடும்பத்துக்கு மிக நெருக்கமான அவருக்கு முக்கிய காபினெட் இலாகா தரப்படலாம் என்று தெரிகிறது.

அதே நேரத்தில் திமுகவைச் சேர்ந்த ஆ.ராசா வகித்து வந்த தகவல் தொழில்நுட்ப, தொலைத் தொடர்புத் துறையை தற்போது மனிதவள மேம்பாட்டு அமைச்சர் கபில் சிபில் கூடுதலாக கவனித்து வருகிறார். தொலைத்தொடர்புத் துறையை காங்கிரஸ் இனி திமுகவுக்கோ அல்லது பிற தோழமை கட்சிகளுக்கோ விட்டுக் கொடுக்காது என்று தெரியவந்துள்ளது.

இதனால் இந்தத் துறைக்கு காங்கிரஸைச் சேர்ந்த ஒருவரே புதிய அமைச்சராக வாய்ப்புள்ளது.

அதே நேரத்தில் திமுகவுக்கு இன்னொரு கேபினட் பதவி வழங்கப்படவும் வாய்ப்பில்லை என்று தெரிகிறது. ராசா ராஜினாமாவால் திமுக ஒரு கேபினட் அமைச்சரவை இழந்தது குறிப்பிடத்தக்கது.

கூட்டணியில் திமுக தொடர்கிறது:

முன்னதாக ஆப்பிரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு சிறப்பு விமானத்தில் நாடு திரும்பிய பிரதமர் நிருபர்களிடம் பேசுகையில், காங்கிரஸ் கூட்டணியில் திமுக தொடர்கிறது. அதில் எந்த மாற்றமும் இல்லை என்றார்.

காங்கிரஸ் கூட்டணியில் அதிமுக சேர்க்கப்படுமா என்ற கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

கருத்துகள் இல்லை: