வெள்ளி, 3 ஜூன், 2011

கஞ்சா கேஸ்’ கலாசாரம் (மீண்டும்) ஆரம்பமாகிவிட்டதா ?

திருச்சி மாவட்ட திமுக துணைச் செயலாளரும் ஸ்ரீரங்கம் கோயிலின் முன்னாள் அறங்காவலருமான குடிமுருட்டி சேகர் கஞ்சா கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். உண்மையிலேயே அவர் கஞ்சா கடத்தினாரா.. இல்லை ‘கஞ்சா கேஸ்’ கலாசாரம் (மீண்டும்) ஆரம்பமாகிவிட்டதா என்று தெரியவில்லை. ரொம்ப ஓவரா கஞ்சா கேஸ் போட்டு, ‘உலகத்திலேயே கஞ்சா அதிகம் நடமாடும் ஏரியா’ என்று தமிழ்நாட்டுக்குப் பெருமை வந்து விடப் போகிறது ஜாக்கிரதை!

புரோட்டாவை யார் முதலில் வாங்குவது என்பதில் ஏற்பட்ட தகராறில் மதுரையில் இரண்டு கும்பலுக்கு இடையில் வெட்டுக் குத்து நடந்திருக்கிறது. 25 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இரண்டு பேருமே ஆளுங்கட்சியினர் என்பது தான் ஹைலைட்! ஒருவேளை புரோட்டா சாப்பிட்டு காசு கொடுக்காமல் எஸ்கேப் ஆவதற்கு ஐடியா செய்திருப்பார்களோ?!

தேசிய விருதுகளை அள்ளிக் குவித்த ‘ஆடுகளம்’ திரைப்பட நாயகன் தனுஷ், தயாரிப்பாளர், இயக்குநர், படத்தொகுப்பாளர் ஆகிய நால்வரும் முதல்வரை சந்தித்து ஆசி வாங்கியிருக்கிறார்கள். ‘சன் டிவியின் ஆடுகளம்’ என்று மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்லிக் கொண்டே இருந்தார்களே. அவர்கள் சென்று ஆசி வாங்கவில்லையா?!

குன்னூர் நகரமன்றக் கூட்டத்தில் ‘புரட்சித் தலைவி, அம்மா’ ஆகிய வார்த்தைகளைச் சேர்த்து தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவிக்கும் தீர்மானத்தை கொண்டு வர நகரமன்றத் தலைவர் (திமுக) மறுத்து விட்டாராம். கைகலப்பில் இறங்கியிருக்கிறார்கள் அதிமுக கவுன்சிலர்கள். பிறகு (வழக்கம் போல) வெளிநடப்பு செய்திருக்கிறார்கள்.

டாஸ்மாக்கில் ‘கார்ல்ஸ்பெர்க்’ ரக பீர்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 80 ரூபாய் விலைக்கு கிடைக்கும் ப்ரீமியம் ரக பீரில் பாட்டிலுடன் கூடவே பாட்டில் ஓப்பனரும் இலவசமாக இணைந்து வருமாம்! அடடே… என்ன ஒரு add-on சர்வீஸ்! பல்லால் கடிக்கும் சிரமம் மிச்சம்! சினிமா வில்லன்கள் (ஹீரோக்களும்) தான் முதலில் அந்த ஓப்பனரை தூக்கி எறிந்து விட்டு பிறகு பல்லால் கடித்து திறக்க வேண்டும். பத்து விநாடிகள் எக்ஸ்ட்ரா ஷாட்!

இலவச அரிசி வழங்கும் திட்டத்தின் துவக்க விழா எந்தவிதமான கோலகலமும் இன்றி துவங்கியது! சூப்பர்! ஆனால் சம்பந்தப்பட்ட ரேஷன் கடையை முழுதும் பச்சை கலரில் பெயிண்ட் அடித்து பசுமைப் புரட்சியை உண்டு பண்ணியிருக்கிறார்கள் அதிகாரிகள். இதையெல்லாம் முதல்வர் ஆரம்பத்திலேயே கண்டிக்க வேண்டும். விட்டால் தமிழகமெங்கும் சாலைகளுக்கும் பச்சை கலர் பூசி விடுவார்கள் இவர்கள்!
இலவச அரிசி வழங்கும் பையில் பெரிதாக முதல்வரின் படம் அச்சிட்டிருக்கிறார்கள். முதல்வர் ஜெ. ஆணையில் தான் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்று மக்களுக்குத் தெரியாதா என்ன? இதெல்லாம் வீண் ஆடம்பர வகையில் சேராதோ?! ஆனால் இந்த இலவச அரிசியுடன் வழங்கும் பை அந்த துவக்க விழா நடந்த ஆழ்வார்பேட்டையில் மட்டும் தானாம். மற்ற இடங்களில் பையே கிடையாதாம்!

”நான் நகை அணியாவிட்டால் தீக்குளிப்போம் என்று கழக உடன்பிறப்புகள் சொன்னார்கள். அதான் தோடு அணிந்திருக்கிறேன்” என்று புதுமையான விளக்கம் ஒன்றை அளித்திருக்கிறார் அம்மா! ”பல்வேறு தவறுகளைச் செய்த கருணாநிதி குடும்பமே மகிழ்ச்சியாக இருக்கிறது. நீங்கள் ஏன் நகை அணியாமல் இருக்கிறீர்கள்?” என்று தொண்டர்கள் கேட்கிறார்கள் என்றும் சொல்லியிருக்கிறார். அப்போ, நகை அணிந்தால் மகிழ்ச்சியாக இருக்கலாமா?! புது லாஜிக்காக இருக்கிறதே!
தற்கொலை வழக்கு போட்டு அம்புட்டு பேரையும் உள்ளே தள்ளுவதை விட்டு விட்டு அவர்கள் மிரட்டலுக்கெல்லாம் அடி பணிந்து போகலாமா அம்மா? ‘தைரியமானவர்’ என்ற இமேஜ் என்னாவது?!

‘காக்கைக் கூட்டம்’ விழா நடத்துவதற்காக தேதி கேட்டு அம்மாவை அணுகியிருக்கிறார்கள். ’வந்த வழியே ஓடிப் போய்டுங்க’ என்று விரட்டிவிட்டார்களாம். உண்மையிலேயே அப்படி நடந்திருந்தால், இனிமேலும் அப்படியே தொடர்ந்தால்… பாராட்டுகள்!

தன்னுடைய செம்மொழி கவிதை பாடப்புத்தகங்களில் இடம் பெற்றிருந்ததால் தான் சமச்சீர் கல்வியையே ரத்து செய்திருக்கிறார் ஜெயலலிதா என்று கருணாநிதி அடித்த கமெண்ட் குழந்தைத்தனமானது என்று பதில் கமெண்ட் அடித்திருக்கிறார் ஜெ! கருணாநிதிக்கு இது தேவை தான். இன்னும் என்னென்ன தனமாகவெல்லாம் இருக்கிறார் என்று போகப் போக ஜெ. வாயிலிருந்து வரும்!

மாயவரத்தான்

கருத்துகள் இல்லை: